
கப்பல் என்பதே பிரமிப்பான விஷயம்தான். அதன் பிரமாண்டத்தைப் பார்த்து வியக்காதவர்களே இல்லை. அதிலும் இதுபோன்ற கப்பல்களை பிரமாண்ட வடிவத்தில் மிகப் பெரியதாக விஸ்வரூபமாக வடிவமைப்பதில் கைதேர்ந்தவர்கள் ஜப்பான்காரர்கள் தான்.
1965-ல் இவர்களால் கடலில் மிதக்க விடப்பட்ட ‘டோக்கியோ மாரு’ என்ற எண்ணெய் கப்பல்தான் அன்றைய உலகில் மிகப் பெரியதாகும். அதைவிட பெரிய கப்பலை 1979 வரை வேறு யாரும் தயாரிக்கவில்லை. அந்த கப்பலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் எண்ணெய்யை நிரப்ப முடியும்.
இது அன்றைய உலகில் பெரிய பயணிகள் கப்பலான ‘குயின் எலிசபெத்’தை விட இரண்டு மடங்கு பெரியது. ஈபிள் டவரை இதன் மேல் தளத்தில் படுக்கை வசத்தில் கிடத்தி விடலாம்.
இந்த கப்பல் 140 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. இது ஒரு சாதனை. கப்பலின் விலை அன்றைய நிலவரப்படி 7 கோடி ரூபாயாகும். இன்றைக்கும் உலகில் கட்டப்படும் மொத்த கப்பல்களில் 43 சதவிகிதம் ஜப்பான் தான் கட்டுகிறது. கப்பல் கட்டும் தொழிலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஸ்வீடனை விட ஐந்து மடங்கு அதிகமான கப்பலை ஜப்பான் உருவாக்குகிறது. கப்பல் கட்டும் விஷயத்தில் மற்ற நாடு எதுவும் நெருங்கக் கூட முடியாத நிலையில் ஜப்பான் இருக்கிறது.
ஜப்பான் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து கப்பல்களை கட்டி முடித்து விடுகிறது. இவ்வளவு விரைவாக கப்பலைக் கட்டும் திறமை உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லை. இத்தனைக்கும் ஜப்பான் 1950 வரை கப்பல் கட்டும் தொழிலில் மிக சாதாரண நிலையிலே இருந்தது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி கப்பல் கட்டத் தொடங்கியது.
இதில் விஷேசம் என்னவென்றால், கப்பலுக்கு தேவையான எந்த மூலப்பொருளும் ஜப்பானில் கிடைப்பதில்லை. சிறியப் பொருளில் இருந்து மிகப் பெரிய பொருள் வரை எல்லாவற்றையும் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலை. இறக்குமதி செய்துதான் கப்பலை கட்டுகிறது. இதில் என்னவொரு ஆச்சரியம் என்றால் மூலப் பொருள்களை கையில் வைத்திருக்கிற நாடுகளைக் காட்டிலும் குறைவான விலையில் கப்பல்களை ஜப்பான் கட்டி தருவதுதான்.
![]() |
எம்.எஸ்.சி. ஆஸ்கார் |
75 ஆயிரம் டன் எடையுள்ள இரண்டு கப்பல்களை கட்டுவதைக் காட்டிலும் 1 லட்சத்து 50 ஆயிரம் டன் கொண்ட ஒரே கப்பலை கட்டுவதில் பாதி செலவை குறைக்க முடியும் என்கிறார்கள் ஜப்பானியர்கள். பிரமாண்டமான கப்பல்கள் உருவாக இதுவும் ஒரு காரணம்.
அவர்கள் கப்பலை குறைந்த வட்டியில் கடனுக்கும் கொடுக்கிறார்கள். மொத்த தொகையில் 20 சதவிதத்தை மட்டும் முன் பணமாக கட்டினால் போதும். மீதித் தொகையை 5.5 சதவித வட்டியில் 8 வருடங்களில் செலுத்தும் விதமாக கடன் கொடுக்கிறார்கள்.
மிகப் பெரிய கப்பலை கட்டினாலும் இவற்றை ஆழம் குறைந்த கடல்களில் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. உலகின் பல இடங்களில் கடலின் ஆழம் பெரிய கப்பல்களுக்கு சாதகமாக இல்லை. சூயஸ் கால்வாய், பனாமா கால்வாய் ஆகியவை இந்த கப்பல்களுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் இவற்றையெல்லாம் பற்றி கவலைப்படாத ஜப்பான் தொடர்ந்து பெரிய கப்பல்களை கட்டி கொண்டே இருக்கிறது.
![]() |
எம்.எஸ்.சி. ஆஸ்கார் |
தற்போது உலகின் மிகப் பெரிய கப்பல் ‘எம்.எஸ்.சி. ஆஸ்கார்’ தான். இதன் நீளம் 1,297 அடி. இதுவொரு கண்டெய்னர் சரக்கு கப்பல். ஒரே நேரத்தில் 36,000 கார்களை இதில் ஏற்றிச் செல்ல முடியும்.
![]() |
ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ் |
இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது பயணிகள் கப்பலான ‘ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ்’என்பது. இதுவொரு சொகுசு கப்பல். 16 தளங்கள் கொண்டது. இதில் 6,300 பயணிகள் பயணிக்கலாம். இந்தக் கப்பலில் 2,100 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். பிரமாண்டத்தின் மறுவடிவம் இந்தக் கப்பல்.
![]() |
ஓயாசிஸ் ஆஃப் தி சீஸ் |