Header Banner Advertisement

‘பிரமோன்ஸ்’ எனும் தகவல் தொடர்பு


MGM

print
விலங்குகள், பூச்சிகள், சிற்றுயிர்கள் போன்றவைகள் தங்களுக்குள் எந்தவொரு ஓசையும் இன்றி அமைதியாக பரிமாறிக்கொள்ளும் ஒருவகை தகவல் தொடர்பே ‘பிரமோன்ஸ்’எனப்படுகிறது. இது கண்களுக்கு புலப்படாது. இது ஒருவகை ஹார்மோன் போன்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உடலுக்குள்ளே உற்பத்தியாகி உடலுக்குள்ளே செயல்படுவதை ஹார்மோன் என்கிறோம்.

அதுவே ஒரு உயிரினம் அதன் உடலுக்குள் உற்பத்தி செய்து காற்றில் வெளியேற்றப் பட்டு, அதை தனது கூட்டத்திற்கோ, இனத்திற்கோ தகவலாக தெரிவிப்பது ‘பிரமோன்ஸ்’ எனப்படும். இதற்கு நல்ல உதாரணம் தெரு நாய்கள். பெண் நாய் இனப்பெருக்கத்திற்கு தயாரானதும் ஒருவித பிரமோன்ஸை காற்றில் வெளியேற்றுகிறது. இந்த தகவல் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு காற்றில் பரவும்.

அந்த சுற்றளவுக்குள் எத்தனை ஆண் நாய்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் இந்த தகவல் போய்சேர்ந்துவிடும். ஒரு பெண் உறவுக்கு தயாராக இருக்கிறாள் என்றதும், அடுத்த நொடியே காதல் வயப்பட்ட ஆண் நாய்கள் மகிழ்ச்சியோடு பெண் நாய் இருக்கும் இடத்தில் கூடிவிடும். அங்கு ஏற்கனவே மற்ற ஆண் நாய்கள் சண்டையிட்டு கொண்டிருக்கும். அந்த நாய்களில் எது வலிமையானதோ? எந்த நாய் வெற்றி பெறுகிறதோ? அந்த ஆண் நாய்க்கு உறவு கொள்ள பெண் நாய் அனுமதியளிக்கும். தனது வாரிசை வலிமையாக உருவாக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு இது.

இந்த ‘பிரமோன்ஸ்’ ஏதோ உடலுறவுக்கு மட்டும் பயன்படும் சங்கதி என்று நினைத்துவிடாதீர்கள். இது எந்த விதமான தகவல்களாகவும் இருக்கலாம்.எச்சரிக்கை விடுப்பது, உதவிக்கு அழைப்பது, இனப்பெருக்கதிற்கு தயார் என்று அறிவிப்பது, தாயும்-பிள்ளையும் இணைப்பது, வழிநடத்தி செல்வது என்று பலவகையான தகவல்கள் பல்வேறு வித பிரமோன்களால் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.

தேனீக்களில் ஒன்றை சீண்டினால் கூட ஒட்டுமொத்த தேனீக்களும் ஒன்று சேர்ந்து நம்மை தாக்குவதுகூட அந்த ஒரு தேனீ தனக்கு ஆபத்து என்று மற்ற தேனீக்களுக்கு பிரமோன்களை அனுப்புவதுதான்.

இந்த பிரமோன்ஸ் மூலம் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இவற்றைக்கொண்டு விவசாயத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, யானை போன்ற வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றை செய்யமுடியும் என்கிறார்கள். அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

மனிதர்களிடம் பிரமோன்ஸ் இருக்கிறதா என்ற ஆய்வும் நடைபெறுகிறது. பாக்டீரியா பாதிக்காத வியர்வை மணம் எதிர் பாலினத்தவற்கு பாலியல் உணர்வை தூண்டுவதாக சொல்கிறார்கள். அதேபோல் பெண்களின் கண்ணீரிலும் ஒருவித ‘பிரமோன்ஸ்’ இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அது ஆண்களின் பாலியல் எண்ணத்தை தடுத்து குறைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

மனிதர்கள் மீதான இந்த ஆய்வுகள் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் இனி வாசனை திரவியங்களில் ‘பிரமோன்ஸ்’ என்ற வஸ்துவையும் கலந்து விடுவார்கள். ஆண்களும் பெண்களும் இந்த வாசனையில் மயங்கி பின்தொடர்வது அதிகரிக்கும்.