
கிரேக்க நாடு தந்த மற்றொரு தத்துவ ஞானி பிளாட்டோ. சாக்ரட்டீசின் மாணவர்களில் முதன்மையானவர். இவர் ஏதென்சில் பிறந்தவர். இவரது காலம் கி.மு.427-347 ஆகும். இவர் பரம்பரை செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பம் ஒன்றில் பிறந்தார். ஆனாலும் இவருக்கு செல்வத்தின் மீது பெரிய ஈடுபாடில்லை. சிறுவயது முதலே எளிமையான வாழ்வை மேற்கொண்டார்.
பிளாட்டோ சில காலம் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தனது 20-வது வயதில் சாக்ரட்டீசிடம் சேர்ந்தார். 8 ஆண்டுகள் அவரது சீடராக கல்வி பயின்றார். சாக்ரட்டீஸ் காலமானபோது 28 வயது வாலிபராக இருந்தார்.
மாசிடோனியா, எகிப்து, லிபியா, இத்தாலி என்று பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல தேசத்து மக்களை சந்தித்து பேசினார். அனுபவ அறிவு பெற்றார். தன் கருத்தையும் சாக்ரட்டீஸ் கருத்தையும் பரப்புவதில் ஈடுபட்டார். பின்னர் ஏதேன்ஸ் நகரில் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பித்தார். இவரது மாணவர்களில் குறிப்பிடத் தக்கவர் அரிஸ்டாட்டில்.
அரசியலுக்கும் சமுதாயத்துக்கும் தேவையான நல்ல மனிதர்களை உருவாக்குவதையே பிளாட்டோ தன் வாழ்நாளில் லட்சியமாக கருதி மிகுந்த ஆர்வத்துடன் உழைத்தார். கி.மு.4-ம் நூற்றாண்டில் கணிதக்கலையும், வான்இயல் கலையும் வளர்ந்ததற்கு பிளாட்டோ மிக முக்கிய காரணம் ஆவார். பிளாட்டோ தோற்றுவித்த கலைக்கழகமே உலகில் தோன்றிய முதல் பழ்கலைக்கழகமாகும்.
ஒரு நாடு, மக்கள், ஆட்சி செய்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பிளாட்டோ எழுதிய ‘குடியரசு’ என்ற புத்தகம் இன்றளவும் உலக அளவில் மிகச் சிறந்த நூலாக போற்றப்படுகிறது.
‘அறிவு, வீரம், நிதானம், நேர்மை முதலிய நான்கும் நல்ல ஒழுக்கங்களாகும். இதில் முதன்மையானது அறிவு அடுத்தது வீரம். பிறகு எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது, அத்துடன் நேர்மையான வழியில் நின்று செயலாற்றுவது. இந்த நான்கிலும் மற்ற குணங்களும் அடங்கிவிடும்’ என்பது இவரது கருத்தாகும். ”பிளாட்டோ அறிவுக்கே முக்கியத்துவம் தரவேண்டும் என்பார். மனிதர்களிடம் அறிவு உறங்கினால் கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். எல்லா தீமைகளும் போதிய நல்லறிவு இல்லாததால்தான் ஏற்படுகிறது.” என்பதும் இவரது கருத்துதான்.
பிளாட்டோ 80 வயது வரை உயிர்வாழ்ந்தார். இறக்கும்வரை சுறுசுறுப்பாக மகிழ்ச்சியோடு மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தார். ஒரு மாணவரின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணத்திற்கு வந்திருந்து வாழ்த்திவிட்டு, அன்று இரவு திருமண வீட்டு திண்ணையில் படுத்து உறங்கி ஓய்வு எடுத்தார். விடியற்காலையில் மாணவர்கள் எழுப்பச் சென்றபோதுதான் உயிர்பிரிந்து உலக வாழ்வை நீத்த விவரம் தெரியவந்தது. மாணவர்கள் கண்ணீர் சிந்த, ஏதேன்ஸ் நகரமே இருள் சூழ்ந்து சோகமாய் காட்சி அளிக்க, பிளாட்டோவின் உடலை சகல மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.