
முதலில் இந்தச் சாதாரண கூட்டுகளை எழுத வேண்டுமா என்று நினைத்து கொஞ்சம் சோம்பேறித்தனத்தால் எழுதாமல் இருந்தேன். திடீரென்று எதையுமே விடாமல் எழுதித் தள்ளிவிடவேண்டும் என்று தீவிரம் வந்திருப்பதால் :)) இதுவும்…
இனி இதைவிட சப்பைக் குறிப்புகளும் வரலாம்.
இது அதிக மசாலா சேர்க்காத கூட்டு.
தேவையான பொருள்கள்:
புடலங்காய் – 1/2 கிலோ
பச்சை மிளகாய் – 1 (விரும்பினால்)
உப்பு
கொத்தமல்லித் தழை
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2, 3
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம்
தேங்காய் – 1/2 மூடி
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை:
புடலங்காயை உள்ளே விதை முற்றலாக இருந்தால் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்து தேங்காயோடு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, விரும்பினால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் தாளிக்கவும்.
நறுக்கிய புடலங்காயை, தேவையான உப்பு, மஞ்சள் தூள், சிறிது நீர் சேர்த்துக் கலந்து, மூடிவைத்து வேகவைக்கவும்.
நன்றாக வெந்ததும், அரைத்த விழுது சேர்த்து, தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்த்து ஒரு கொதிவிட்டு சேர்ந்தாற்ப்போல் இருக்குமாறு இறக்கவும்.
நறுக்கிய மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
இதே முறையில் கோஸ், பீன்ஸ், பீட்ரூட், கொத்தவரங்காய், அவரைக்காய் போன்ற காய்களிலும் செய்யலாம். எல்லாவற்றையும் விட கீரையில் செய்தால்(எந்தக் கீரையும்) மிகுந்த சுவையாக இருக்கும்.