
![]() |
விரிந்தவன் சந்த்ரோதய மந்திர் வளாகம் |
சுற்றுலாவில் பெரும் பங்கை ஆன்மிகம் சம்பந்தமான இடங்களே பெற்றுள்ளன. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்ஹாக்கள், புனித யாத்திரை போன்றவைக்காக சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 70 % சுற்றுலா ஆன்மிகம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.
சுற்றுலாவில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால், மொத்த சுற்றுலாவும் படுத்துவிடும்.
தற்போது பழமையான கோயில்களுக்கு இணையாக புதிதாக கட்டிய கோயில்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. டெல்லி அக்ஷர்தம், வேலூர் தங்கக் கோயில் போன்றவற்றை இதற்கு உதரணமாக சொல்லலாம்.
அந்த வகையில் மிகப் பிரமாண்டமான மூன்று கோயில்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றன. எதிர்காலத்தில் இந்தக் கோவில்கள் சுற்றுலாவின் மைல் கல்லாக திகழும் என்பது நிச்சயமே!
1. விராட் ராமாயண் மந்திர் – பிஹார்
கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயம் முதலில் இந்துக் கோவிலாக கட்டப்பட்டது. தற்போது அது புத்தக் கோயிலாக மாற்றப் பட்டுள்ளது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் விதமாக 2006-ம் ஆண்டு அதே வடிவமைப்பில் விராட் அங்கோர்வாட் என்ற ஆலயத்தை இந்தியாவில் உருவாகக் நினைத்தனர். இதற்கு கம்போடியா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் இந்த கோயிலின் வடிவமைப்பை சற்று மாற்றினர். புதிதாக வடிவமைப்பை நிர்மாணித்தனர்.
![]() |
விராட் ராமாயண் மந்திர் மாதிரி தோற்றம் |
அதன்படி அங்கோர்வாட் கோயிலைவிட உயரமாக இது கட்டப்படுகிறது. 161 ஏக்கர் நிலப்பரப்பில் 2,800 அடி நீளமும், 1,400 அடி அகலமும் 405 அடி உயரமும் கொண்ட இந்த கோயில் கட்டி முடிக்கப் பட்டப்பின் இதுதான் உலகின் மிகப்பெரிய மத வழிப்பாட்டு தலமாக மாறும். இந்தக் கோயில் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து வழிபடலாம்.
இந்தக் கோயில் அங்கோர்வாட், மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் கோயில்களின் பாணியை பின்பற்றி கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2012-ல் தொடங்கியது. பட்ஜெட் ரூ.500 கோடி. எதிர்காலத்தில் இதுதான் உலகின் மிகப் பெரிய கோயிலாக இருக்கும்.
பிஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கேசரியா என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய சுற்றுலா மையமாக மாறும் என்று இப்போதே உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
2. ஓம் ஆஷ்ரம் – ராஜஸ்தான்
![]() |
ஓம் அஷ்ரமத்தின் முன் பகுதி |
‘ஓம்’ என்ற சமஸ்கிருத எழுத்து வடிவில் ஒரு கோயில் உருவாகி வருகிறது. இது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜடன் என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. 250 ஏக்கர் நிலப்பரப்பின் மையத்தில் காட்டப்படும் இந்த கோயில்தான் மனிதன் உருவாக்கிய எழுத்து வடிவிலான கட்டுமானங்களில் மிகப் பெரியது.
![]() |
சம்ஸ்கிருத ‘ஓம்’ எழுத்து வடிவில் ஆஷ்ரம் |
இதில் பெரிய கோபுரம் 108 அடி உயரம் கொண்டது. இந்த கட்டுமானத்தில் 12 கோயில்கள் உள்ளன. அவற்றின் கோபுரங்கள் 90 அடி உயரம் கொண்டது. இதில் 108 குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுகிறது.
![]() |
கட்டுமானத்தில் ஓம் ஆஷ்ரம் |
3. விரிந்தவன் சந்த்ரோதய மந்திர் –
உத்தர பிரதேசம்
![]() |
விரிந்தவன் சந்த்ரோதய மந்திர் |
உலகிலேயே மிக உயரமான கோயிலைக் கட்டி வருகிறது இஸ்கான் அமைப்பு. கிருஷ்ணர் பிறந்த மதுரவில்தான் இது நடைபெறுகிறது. 700 அடி உயரம் கொண்ட கோபுரத்தை கட்டி வருகிறது. 62 ஏக்கர் நிலப்பகுதியில் 12 ஏக்கர் அளவுக்கு ஒரு ஹெலிப்பெடும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் இருக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்படுகிறது. 26 ஏக்கர் பரப்பில் 12 வகையான தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
![]() |
உலகிலேயே உயரமான 700 அடி கோபுரம் |
இதன் மதிப்பு ரூ.300 கோடி. கட்டுமானப் பணிகள் முடிந்து 2019-ல் பக்கதர்கள் இந்த கோயிலை தரிசனம் செய்யலாம்.
![]() |
முன் பகுதியில் உருவாகி வரும் பூங்கா |