
ஒருநாள், வயதான பெண் ஒருவருடைய வீட்டில் புத்தகங்கள் கைப்பற்றப் பட்டு எரிக்கப்படுகின்றன. அப்போது புத்தகத்தில் இருந்து ஒரு வரியைத் தற்செயலாகப் படிக்கிறான் மாண்டெக்.அந்த வரியின் ஈர்ப்பில் புத்தகத்தைத் திருடிக் கொள்கிறான். தன்னைப் புத்தகங்களில் இருந்து பிரிக்க முடியாது என்று மல்லுக்கட்டும் வயதான பெண் தன்னைக் கொளுத்திக் கொள்கிறாள். புத்தகங்களுக்காக ஒரு பெண் ஏன் தற்கொலை செய்து கொள்கிறாள் என்று மாண்டெக்கால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.
![]() |
ரேபிராட்பரி |
தன் மனைவியிடம் தான் ஒரு புத்தகம் திருடி வந்ததைப் பற்றிச் சொல்லி, அதில் உள்ள வரிகள் அவன் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதற்கு நெருக்கமாக உள்ளதாகச் சொல்கிறான். அதன் பிறகு தீ வைக்கச் செல்லும் இடங்களில் புத்தகங்களைத் திருடி வந்து படிக்கிறான் மாண்டெக். திருடிய புத்தகங்களைப் பிறர் அறியாமல் வீட்டினுள் ஒளித்து வைக்கிறான். புத்தகங்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதற்காக பேபர் என்ற பேராசிரியரை தேடிப் போகிறான். இருவரும் புத்தகம் பற்றி நிறையப் பேசுகிறார்கள்.
மனித குலம் அதன் கடந்த காலத்தை அறிந்து கொள்வதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. அது புத்தகம். மனிதக் கற்பனையின் மிக உயரிய விசயம் எழுத்து என்று அவர் புரியவைக்கிறார். அதற்குள் மாண்டெக் புத்தகம் படிக்கும் விசயம் அவன் மனைவியாலே அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டு, அவன் தேடப் படுகின்றான். அவனை வேட்டையாடு கிறார்கள்.
உயிர் பிழைப்பதற்காகத் தப்பி அலைகிறான். அப்படி அலையும்போது நடமாடும் புத்தகங்களாக உள்ள ஒரு குழுவினரைக் கண்டுபிடிக்கிறான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை முழுவதாக மனப்பாடம் செய்து மனதிலே வைத்திருக்கிறார்கள். அந்தப் புத்தகங்களின் நடமாடும் வடிவம் போல அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, உலகில் இருந்த புத்தகம் அப்படியே இருக்கிறது. அவர்கள் தங்களிடம் இருந்து மற்றவர்களுக்கு அந்த நினைவைப் பகிர்ந்துச் சொல்கிறார்கள்.
அந்தப் பணியில் இணைந்த மாண்டெக் பைபிளின் ஒரு பகுதியை முழுமையாக மனப்பாடம் செய்து, அவனும் ஒரு நடமாடும் புத்தகமாகி விடுகிறான். அந்ந நகரில் எதிர்பாராத யுத்தம் வெடிக்கிறது. குண்டு மழை பொழிகிறது. மனிதர்களைப் புத்தகங்களால் மட்டுமே மீட்க முடியும் என்று நடமாடும் மனிதர்கள் வேறு இடம் நோக்கிப் பயணம் செய்யத் தொடங்குகிறார்கள். அவர்களை வழி நடத்திப் போகிறான் மாண்டெக்.
த்ரூபாவின் இப்படம் புத்தகம் வெறும் காகிதமல்ல என்பதைத் தௌ¤வாகப் புரிய வைக்கிறது. கண்ணாடி நம் முகத்தைக் காட்டுகிறது என்றால், அகத்தைக் காட்டுவதற்குப் புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன. புத்தகம் இன்னொரு பிரபஞ்சம். அதன் உள்ளே இந்த பிரபஞ்சத்தின் தீர்க்க முடியாத புதிர்களுக்கான பதில் காணப்படுகிறது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக அனுபவித்து அறிய முடியாத அத்தனையும் புத்தகம் வழியாக மனிதர்களுக்கு எளிதாக அனுபவமாகிறது.