Header Banner Advertisement

பூமியில் மனிதன் கால் பதிக்க முடியாத மர்மமான இடம்


can-not-gain-a-foothold

print
னிதன் நிலவுக்குப் போகிறான். செவ்வாய் கிரகத்துக்குக் கூட போகப்போகிறான். இப்படி பூமியை விட்டு பல லட்சம், பல கோடி கி.மீ. தொலைவில் உள்ள கிரகங்களுக்கே செல்லபோகும் மனிதானால் பூமியில் உள்ள ஒரு இடத்துக்கு மட்டும் போகவே முடியாது. அப்படியே போனாலும் அங்கிருக்கும் நிலத்தில் காலடி வைக்க முடியாது. வைத்தால் கால் இருக்காது..!

அந்த இடத்தின் பெயர் ‘மரியானா ட்ரென்ச்‘. இதனை ‘சேலஞ்சர் டீப்’ என்றும் அழைக்கிறார்கள். இது ஒரு கடல் பகுதி. உலகின் மிக ஆழமான கடற்பகுதி இதுதான். பொதுவாக கடலின் சராசரி ஆழம் 4 கி.மீ. என்றால், இங்கோ ஆழம் 10,902 மீட்டர். அதாவது 11 கி.மீ.க்கு கொஞ்சம் குறைவான ஆழம். நமது எவரெஸ்ட் மலையை அப்படியே தூக்கி உள்ளே போட்டால் கூட அந்த மலை கடலின் மட்டத்தில் இருந்து 3 கி.மீ. ஆழத்தில்தான் கிடக்கும். அவ்வளவு ஆழமான பகுதி.

ஆழம் இருந்தால் என்ன மனிதன்தான் எவ்வளவு ஆழத்துக்கும் போக முடியுமே? என்று கேட்கலாம். பொதுவாக மனிதனின் உடல் ஓரளவு அழுத்தத்தை மட்டுமே தாங்கும். நிலத்தில் வாழும் நாமும் தொடர்ந்து அழுத்தத்தை தாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அது காற்றின் அழுத்தம். காற்று ஒரு செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ என்ற அளவில் தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருக்கிறது. நாம் பிறந்ததில் இருந்து இந்த அழுத்தத்தை தாங்கிக்கொண்டே இருப்பதால் அது நமக்கு தெரிவதில்லை. நமது உடலுக்கு இந்த அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தி இருப்பதும் நமக்கு தெரியாமல் இருப்பதற்கு ஒரு காரணம்.

ஆனால் காற்றை விட நீருக்கு அழுத்தம் அதிகம். கடல் மட்டத்திலிருந்து வெறும் 10 மீட்டர் ஆழத்துக்கு சென்றாலே காற்று நம் உடல் மீது கொடுக்கும் அழுத்தத்தைவிட இரண்டு மடங்கு அழுத்தம் நீர் கொடுக்கும். அதுவே 20 மீட்டர் என்றால் 3 மடங்கும், 30 மீட்டர் ஆழத்தில் 4 மடங்கும், 4 கி.மீ. கடல் ஆழத்தில் 400 மடங்கு இருக்கும். இந்த அழுத்தத்தை உணர வேண்டும் என்றால் தரையில் நம்மை படுக்க வைத்து நம் மீது 50 சிமெண்ட் மூட்டைகளை அடுக்கினால் எப்படி இருக்குமோ! அந்தளவு அழுத்தம் கடலின் 4000 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுவிடும். இன்னும் போக வேண்டிய ஆழம் 8,000 மீட்டர் இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம். இப்படியே போனால் 10,000 மீட்டர் ஆழத்தில் 1,100 மடங்கு அழுத்தம் இருக்கும். அப்படியென்றால் அந்த இடத்தில் மனிதனின் உடலை நீர் ஊடுருவி செல்லும். இதனால் மரணம் ஏற்படும். மேலும் கடலில் 800 மீட்டர் ஆழத்திலே இருள் சூழ்ந்து ஒன்றுமே பார்வைக்கு புலப்படாது. இங்கு விசித்திரமான பல நீர்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன. இவைகளை உலகின் வேறு கடல் பகுதிகளில் பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட கடல் பகுதியிலும் மனிதர்கள் இருவர் சென்று வந்தனர்.

ஜாக் பிக்கார்ட் மற்றும் லெப்டனென்ட் டான் வால்ஷ்  என்பதுதான் அவர்கள் பெயர். இதில் ஜாக் பிக்கார்ட் ஒரு கடல் ஆராய்ச்சி நிபுணர். வால்ஷ் கடற்படை அதிகாரி. 1960, ஜனவரி 23-ல் ‘ட்ரீயெஸ்ட்’ என்ற நீர்மூழ்கிக் கலம் ஒன்றில் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள். 11,000 மீட்டர் ஆழத்தில் ஏற்படும் நீரின் அழுத்தத்தை கணக்கிட்டு அதனை தாங்கும் வண்ணம் மிக வலுவான இரும்புக் கூண்டு ஒன்றை உருவாக்கினார்கள். 59 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்தக் கலத்தில் நான்கு நாட்கள் பயணம் செய்து இந்த ஆழத்தை அடைந்தார்கள். இந்தக் கூண்டில் பொருத்தப்பட்ட கனத்த கண்ணாடி சாளரம் வழியாக சக்தி மிக்க ஒளியைப் பீச்சி, அந்த வெளிச்சத்தில் நிலத்தைப் பார்த்தனர். இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கே இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் ‘டைட்டானிக்’ பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இந்த ஆழ்கடல் பகுதியில் சில குறிப்பிட்ட ஆழம் வரை பயணித்திருக்கிறார்.

எந்த மனிதனும் எப்படிப்பட்ட பாதுகாப்பு உடை அணிந்தும் இந்த மர்ம பிரதேசத்தில் காலடி பதிக்க முடியாது என்பதே மறுக்க முடியாத உண்மை.