
தேவையான பொருள்கள்:
பயத்தம் பருப்பு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2, 3
இஞ்சி – சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
தாளிக்க: எண்ணெய், சீரகம்.
செய்முறை:
பயத்தம் பருப்பை 3 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்திற்கு ஆனால் மிக மிக நைசாக அரைத்து அத்துடன் ரவையையும் கலந்து கொள்ளவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெயில் சீரகம் தாளித்துக் கொட்டவும்.
அடுப்பில் தோசைக்கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் ஒரு கரண்டி மாவை நடுவில் விட்டு, வழக்கமாக தோசைவார்ப்பது போல் வட்டமாக இழுத்து மிக மெலிதாகப் பரத்தவும்.
சுற்றி சிறிதளவு மட்டுமே எண்ணெய் விட்டு ஒரு நிமிடம் வேகவிடவும்.
திருப்பிப் போட்டு, தேவை என்றால் மட்டும் மீண்டும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
அடுத்தடுத்த தோசை வார்ப்பதற்கு முன் கல்லில் சிறிது நீர் தெளித்துக் கொள்ளவும்.
அப்பொழுதுதான் தோசை சிரமமில்லாமல் மெலிதாக இழுத்து வார்க்க முடியும்.
எவ்வளவு மெலிதாக வேண்டுமானாலும் இந்த மாவை இழுத்து வார்க்க முடியும். சுலபமாகத் திருப்ப முடியும்.
பொதுவாக பச்சரிசி 2 டீஸ்பூன் சேர்த்து அரைத்து செய்வார்கள். அதைவிட ரவை சேர்ப்பது மொறுமொறுப்பாக வரும்.
எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அதிக எண்ணெயை ஏற்காது.
ரவை, பச்சரிசி எதுவுமே சேர்க்காமலும் மிக மிக மென்மையான ஸ்பான்ச் தோசைகள் வார்க்கலாம்.
பச்சை மிளகாயைத் தவிர்த்துவிட்டு இரண்டு முந்திரிப்பருப்பை சேர்த்து அரைத்து தோசை செய்தால் சின்னக் குழந்தைகளுக்கும் ஆரம்பத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். உண்ணவும், செரிக்கவும் எளிதானது.
மிக மிக லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும். (ஒரு டேபிள்ஸ்பூன் பருப்பு மட்டும் நனைத்து மிக்ஸியின் சட்னி jar லியே அரைத்து என் பெண்ணிற்கு ஒரு வயதுக்கு மேல் ஆனதும் செய்து கொடுத்திருக்கிறேன்.)
முடிந்தவரை இதுபோல் எண்ணெய் அதிகம் தேவைப்படாமலே சுலபமாக திருப்பக் கூடிய தோசைகளை மட்டுமாவது இரும்பு தோசைக்கல்லிலேயே தயாரிக்கலாம் என்பது என் கருத்து. இரும்பு வாணலியை உபயோகிப்பது முற்றிலும் நின்றுபோய்விட்ட இந்தக் காலத்தில் தோசைக் கல் மட்டுமாவது உபயோகத்தில் இருப்பது நல்லது.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தக்காளிச் சட்னி, இஞ்சிச் சட்னி…