Header Banner Advertisement

பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்.!


www.villangaseithi.com

print
உலக மகளிர் தினம்… ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலகெங்கும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று ஆண்களுக்கு நிகராக மகளிர் எல்லாத்துறையிலும் வந்து விட்டனர். ஆனால், உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும், அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாக கிடைத்தது அல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.!

பதினெட்டாம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். மகளிரோ வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். ஆரம்பக் கல்வி கூட அவர்களுக்கு மறுக்கப்பட்டது. மருத்துவமும், சுதந்திரமும் என்னவென்றே கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம்.

இப்படிப்பட்ட நிலையில், 1857-ம் ஆண்டு நடந்த போரினால் ஏராளமான ஆண்கள் கொல்லப் பட்டனர். பலர் படுகாயமடைந்து வீட்டில் முடங்கினர். இதனால், பல நாடுகளில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத் தவிர்க்க நிலக்கரிச்சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் முதல் முறையாக மகளிருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.

ஆண்களுக்கு நிகராக தங்களாலும் வேலை செய்ய முடியும் என்று மகளிர் சமுதாயமே அப்போதுதான் புரிந்து கொண்டது. இருந்தும், ஊதியத்தில் மகளிருக்கு அநீதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல! 16 மணி நேர வேலை. இதனால், மகளிர் மனம் குமுறினர்.

இதையடுத்து, ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் உரிமைகளை கோரி மகளிர் எழுப்பிய குரலுக்கு அப்போதைய அரசு செவி வாய்க்கவில்லை. கொதித்தெழுந்த அமெரிக்க மகளிர் 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தையும் அரசு அடக்கியது. வெற்றி பெற்றதாக கொக்கரித்தது.

ஆனால், அந்த பகல் கனவு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ‘அடக்கி வைத்தால் அடங்கி பேசுவது அடிமைத்தனம்’ என்று முழங்கியபடி 1907-ம் ஆண்டு மகளிர் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இந்த முறை அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜெர்மனி, ரஷ்யா, டென்மார்க், பாரிஸ் உட்பட பல நாடுகளில் மகளிர் போராட்டத்தில் குதித்தனர்.

இருந்தும் ஆண் ஆதிக்கம் இருந்ததால் எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்தன. 1910-ம் ஆண்டு டென்மார்க்கில் முதல்முறையாக பெண்கள் உரிமை மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் உலக நாட்டில் உள்ள மகளிர் அமைப்புகள் கலந்து கொண்டன. அப்போதுதான் மார்ச் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. பல்வேறு தடங்கலால் இந்த தீர்மானம் நிறைவேற முடியாமல் போனது. இருந்தும் ஆங்காங்கே மகளிர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர்.

சோவியத் ரஷ்யாவில் செயின் பீட்டர்ஸ் நகரில் 1911-ம் ஆண்டு மிகப்பெரிய அளவில் மகளிர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸசாண்ட்ரா கெலனரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

1911-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி முதலாவது மகளிர் தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டது. 100 ஆண்டுகளாக மகளிர்தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொண்டாடப்படும் பெண்கள் தினம் நூற்றாண்டை நிறைவு செய்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.