
புளி சேர்க்காமல் தயாரிக்கும் ரசம். புளி ஆகாத ஏதாவது நாட்டு மருந்து சாப்பிடும் நாளில் அல்லது அதிகப் புளி சேர்த்து வேறு குழம்பு, கூட்டு வகைகள் செய்யும்போது ரசத்தை இந்த முறையில் தயாரித்துக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்:
தக்காளி – 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித் தழை
பருப்புத் தண்ணீர் – 2 கப்
வறுத்து அரைக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன் (விரும்பினால்)
தேங்காய்த் துருவல் – 2 டீஸ்பூன்
தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.
செய்முறை:
எண்ணெயில் காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகை சிவக்க வறுத்து, தேங்காய்த் துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒன்றரை கப் தண்ணீரில் இரண்டு தக்காளிப் பழங்களை நன்கு மசித்துக் கொள்ளவும்.
மீதமிருக்கும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூளையும் தக்காளிக் கரைசலுடன் சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்.
தக்காளி வெந்ததும், பருப்பு வேகவைத்த தண்ணீர், அரைத்த விழுது சேர்த்து பொங்கி வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சிறிது எண்ணெயில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.
விழுது சேர்த்ததும் ரசத்தை அதிகம் கொதிக்கவைக்கக் கூடாது. பொங்கிவந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். இப்படிச் செய்தால் மண்டி தங்காமல் பரிமாறும்போது அடிவரை கலந்தே பரிமாறலாம். இதனால் அரைத்துவிட்ட பொருள் வீணாகாமல், சுவையும் குறையாமல் இருக்கும்.