Header Banner Advertisement

“மக்கள் பக்குவப்படவில்லை.!”


www.villangaseithi.com

print
தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஒருமுறை வன்முறை வெடித்தது. 5-2-1922 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற ஊரில் தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றார்கள்.

தப்பியோடியவர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டார்கள். ஆனால், கோபம் அடங்காத மக்கள் அந்தக்காவல் நிலைய துக்கே தீ வைத்துவிட்டார்கள். இதன் விளைவு? 22 காவலர்கள் தீயில் சிக்கி மாண்டனர்.

இச்செய்தியறிந்த மகாத்மா காந்தி சொல்லொண்ணா துயரம் அடைந்தார். போராட்டம் தடம்மாறிச் செல்வதால் ஒத்துழையாமை இயகத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மக்கள் இழைத்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தான் ஐந்து நாள்கள் உண்ணாநோன்பில் ஈடுபட்டார்.

நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இளைய தலைவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என மகாத்மா காந்தியிடம் மன்றாடினார்கள். ஆனால், “மக்கள் இன்னமும் அகிம்சை வழிப் போராட்டத்துக்குப் பக்குவப்படவில்லை. அவர்களைப் பக்குவப்படுத்த நாம் தவறிவிட்டோம். எனவே, போராட்டத்தைத் தொடர்வது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்” என்றார் காந்தியடிகள். இப்போதும், நாம் அகிம்சை வழிப்போராட்டத்தை புரிந்து கொண்டோமா என்பது உங்கள் பதிலுக்கே விட்டுவிடுகிறேன்.