
தேவையான பொருள்கள்:
புழுங்கல் அரிசி – 3 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – தேவையான அளவு
கொத்தமல்லிச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னி
உருளைக் கிழங்கு மசாலா.
செய்முறை:
அரிசிகளைத் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தைத் தனியாக ஊறவைக்கவும்.
நான்கு மணி நேரம் ஊறியபின் அரிசி பருப்புகளை தனித் தனியாக மிக மென்மையாக நுரை ததும்ப அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துவைத்து, முழு இரவும் பொங்க விடவும்.
தோசைக்கல்லைச் சூடாக்கி, மாவை நடுவில் ஊற்றி, மெல்லிதாக வட்டமாகப் பரத்தவும்.
தோசையைச் சுற்றியும் நடுவிலும் எண்ணை விட்டு நிதானமான தீயில் வேகவைக்கவும்.
நன்றாக முறுகலாக வெந்ததும், திருப்பிப் போடவும்.
இந்தப் பக்கத்தை சில நொடிகள் மட்டும் வேகவைத்து மீண்டும் திருப்பிவிடவும்.
நடுவில் மேலே குறிப்பிட்டுள்ள சட்னிகளில் ஏதாவது ஒன்றை ஒரு டீஸ்பூன் எடுத்து வட்டமாகப் தேய்த்து, அதன்மேல் உருளைக் கிழங்கு மசாலா ஒரு கரண்டி வைத்து மூடிப் பரிமாறவும்.
சப்பாத்தி, பூரி, தோசைக்கு தனியாகத் தொட்டுக் கொள்ள உருளைக்கிழங்கு மசாலா செய்யும் போது சற்று தளர்வாக இருக்கவேண்டும். இந்தக் குறிப்பில் சொல்லியிருப்பதுபோல் தோசையின் உள்ளே வைப்பதென்றால் மிகவும் இறுக்கமாக, தண்ணீர்ப் பசை இல்லாதவாறு மசாலா இருக்குமாறு தயாரித்துக் கொள்ள வேண்டும்.