Header Banner Advertisement

மத்திய அரசின் பட்ஜெட் எப்படி நடக்கும்?


www.villangaseithi.com

print
ஒவ்வொரு ஆண்டும், நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி, அதற்கு முந்தைய ஆண்டின் செப்டம்பரில் தொடங்கிவிடுகிறது. எல்லா அமைச்சர் களுக்கும், நிதிநிலை அறிக்கை தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்படும். அமைச்சகத்தின் வரவு-செலவு மதிப்பீட்டு கணக்கு விவரத்தை சமர்ப்பிக்கும் படி இந்த 109 பக்க சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்படும்.

இதன்படி, எல்லா அமைச்சங்களுக்கும், தங்களுக்கு தேவையான வழக்கமான செலவுக் கணக்கு மதிப்பீடுகள், புதிய திட்டங்களின் நிதி மதிப்பீடுகளை குறிப்பிட்டு, நிதிநிலையில் அதற்கான நிதி ஒதுக்கும்படி விரிவான அறிக்கையுடன், பதில் அறிக்கை அனுப்பும்.

நவம்பர் முதல், டில்லியில் நிதியமைச்சகம் உள்ள ரெய்சானா ஹில்ஸ் பகுதி வடக்கு பிளாக் பரபரப்பாகி விடும். வர்த்தக, தொழில், விவசாய தொழிற்சங்கம் உட்பட, பல்வேறு தரப்பினரின் பிரதிநிதிகளுடன் நிதியமைச்சக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவார். தங்களுக்கு என்னென்ன திட்டங்களில் சலுகை அளிக்க வேண்டும்; வரியை குறைக்க வேண்டும் என்பது போன்ற விசயங்களில் கோரிக்கை வைப்பார்; இதன் அடிப்படையில், மாத இறுதியில் நிதியமைச்சக அதிகாரிகள், ஒரு விரிவான மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பார்.

புத்தாண்டு பிறந்த நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் நிதியமைச்சர் நேரடியாகவே பேசுவார். அவர்களின் கோரிக்கைகளை அறிந்து கொள்வார். நிதிநிலையில் ஏதாவது திட்டங்கள் சேர்க்க வேண்டு மானால், அது பற்றி கூட்டணி கட்சித் தலைவர்கள், அறிக்கையாக சமர்ப்பிப்பார்.

அதை பரிசீலித்து நிதி நிலைக்கு ஏற்ப நிதிநிலையில் அறிவிப்பது பற்றி நிதியமைச்சர் இறுதி முடிவெடுப்பார். சில சமயம், சில கோரிக்கைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, மற்றவை பற்றி உறுதி மொழி மட்டும் அளிக்கவும் கூடும்.

நிதிநிலை உரை நகல்களை அச்சடிப்பது தொடர்பாக அச்சக தொழில் நுட்ப வல்லுநர்கள், உளவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஸ்டெனோகிராபர்கள் போன்ற முக்கிய பிரிவு அதிகாரிகளுடன் பேச்சு நடக்கும். நிதிநிலை விவரம் எதுவும் கசியக்கூடாது என்பதற்காக, சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கேற்ப, நிதிநிலை தாக்கலாகும் நாள் வரை, ஏழு நாளுக்கு இவர்கள், ‘வடக்கு பிளாக்’ கில் தங்க வைக்கப்படுவர்.

குடும்பத்தினருடன் கூட இவர்கள் இந்த ஏழு நாள் பேச முடியாது. நேரில் பார்க்க முடியாது. ஒரு ரகசிய போன் எண் மட்டுமே குடும்பத்தினருக்கு தரப்படும். முக்கிய தகவலாக இருந்தால் மட்டும், அதை இந்த எண்ணில் சொல்லலாம். அந்த தகவல், குறிப்பிட்ட ஊழியருக்கு போய்ச் சேரும். உளவு அதிகாரிகள் சுற்றி வளைத்து, முழு அளவில் கண்காணிப்பை மேற் கொள்வர். செல்போன் வேலை செய்யாது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த செல்போன் ஜாமர் கருவி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் துறைகள், அமைச்சகங்களின் வெப்சைட்களை பராமரிக்கும், நேஷனல் இன்பர்மேடிக்ஸ் சென்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், நிதிநிலை தாக்கலாகும் முன் ஏழு நாள் மட்டும் வடக்கு பிளாக்கில் உள்ள கம்ப்யூட்டர்கள் தனி, சர்வர் மூலம் இயங்கும்.

வெளித்தொடர்பு இருக்காது. நிதிநிலை உரை புத்தகம் இறுதி செய்யப்பட்டு விட்டதும், தாக்கலாகும் இரண்டு நாளுக்கு முன் நள்ளிரவில்தான் ஏற்குறைய அச்சடிப்பு துவங்கும். தொடக்கத்தில், ஜனாதிபதி மாளிகையில்தான் நிதிநிலை உரை அச்சடிக்கப்பட்டு வந்தது.

ஒரு முறை கசிந்ததால், மின்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்தில், 1950 ல் இருந்து அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால், பாதுகாப்பு கருதி,1980ல் இருந்து, வடக்கு பிளாக் வளாகத்தில், தரை தளத்தில் அச்சடிக்கப்படுகிறது