
மொரீசியஸ் தீவில் மாமிச உண்ணிகள் எதுவும் இல்லாத காரணத்தால் இவைகளுக்கு வேகமாக ஓடக்கூடிய அவசியம் ஏற்படவில்லை. மற்ற உயிரினங்களைக் கொன்று தின்னும் உயிரினங்களும் இந்த பூமியில் இருக்கின்றன என்ற விவரமே அறியாத அப்பாவிப் பறவைகள் அவைகள். அதனால் மற்ற உயிரினங்களைப் பார்த்தால் அவற்றோடு சிநேகமாகப் பழகிக்கொள்ளும்.
மனிதனுக்கு கேட்க வேண்டுமா..? ருசியாக இருந்ததும், மனிதனைக் கண்டு ஓடாமல் நட்போடு பழகியதும் அவனுக்கு சாதகமாக இருந்தன. சகட்டுமேனிக்கு டோடோவைக் கொன்று குவித்தான். தான் மட்டும் சாப்பிடாமல் தனது வளர்ப்பு பிராணிகளான நாய், பூனை போன்றவற்றிற்கும் விருந்தாக டோடோவைக் கொடுத்தான்.
இப்படியாக போட்டிப் போட்டுக்கொண்டு போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் தின்று தீர்த்தத்தில் மனிதன் காலடிப்பட்ட 100 வருடங்களில் மொத்த டோடோ இனமுமே அழிந்துவிட்டது. தரையில் புற்களைக் கொண்டு கூடு கட்டி, அதில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று ஒரு முட்டை மட்டுமே இட்டு அடைக்காக்கும் இந்த பறவை வெகு சீக்கிரத்தில் அழிந்து போனதற்கு இதன் மிதமான இனப்பெருக்கமும் ஒரு காரணம்.
டோடோ பறவை அழிந்ததும் இயற்கையின் சங்கிலித் தொடரில் ஒரு கண்ணி கழன்றுவிழுந்தது. டோடோ மறைந்த போது அதன் கூடவே ஒரு மர இனமும் மறைந்து போனது. அந்த மரத்தின் பெயர் கல்வாரி. இந்த மரத்தின் பழங்களை டோடோ தின்றுவிட்டு அதன் கொட்டையை வெளியே துப்பிவிடும். அப்படி துப்பிய கொட்டைகள் மட்டுமே மீண்டும் முளைக்கும். மரத்தில் இருந்து நேரடியாக விழும் பழங்களின் கொட்டைகள் முளைப்பதில்லை.
இதை விவசாயத்தில் ‘விதை நேர்த்தி’ என்று சொல்வார்கள். விவசாயிகள் கூட விதை முளைப்பதற்காக சில நுட்பங்களை செய்கிறார்கள். அப்படி கல்வாரி மரத்திற்கான விதை நேர்த்தியை டோடோ பறவைகள் செய்திருக்கின்றன. அதன் வயிற்றில் சுரக்கும் ஒருவித வேதிப் பொருள் செய்யும் மாயாஜாலம்தான் கல்வாரி விதைகள் முளைக்க காரணமாய் இருந்திருக்கின்றன. டோடோ இனம் அழிந்ததால் அதனுடன் சேர்ந்து கல்வாரியும் கட்டாய மரணத்திற்கு ஆளாக வேண்டியதாகிவிட்டது.
மனிதன் மீண்டும் அந்த கல்வாரி மரத்தை உருவாக்க அதன் கொட்டைகளை வைத்து என்னென்னவோ ஆராய்ச்சிகள் செய்து பார்த்தான். தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தான். கல்வாரி கொட்டைகள் முளைக்கவே இல்லை. இப்போது கல்வாரி மரமும் பூமியில் இல்லை. இப்படி சாதுவாக இருந்ததால் தானும் அழிந்து தன்னோடு சேர்ந்து இன்னொரு இனமும் அழியக் காரணமாகிவிட்டது டோடோ.
‘அப்பாவியாக இருக்காதே! டோடோவைப் போல் சாகாதே!’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. தனது சுயநலத்தால் ஒரு இனத்தையே அழித்துவிட்ட மனிதன், கடைசியாக ஒரு பழமொழியை மட்டும் உருவாக்கி அதன்மூலம் டோடோவை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறான்.