
![]() |
ஆசிட் வீச்சுக்கு பலியான நர்ஸ் பிரீத்தி ரதி |
ஒருவர் இறக்கும் போதோ, இறப்பை எதிர்பார்த்து இருக்கும் போதோ கொடுக்கும் வாக்குமூலமே மரண வாக்குமூலம். தனது இறப்புக்கு யார் காரணம்? எப்படி தாக்கினார்கள்? என்ன ஆயுதம் பயன்படுத்தினார்கள்? என்று இதில் விலாவாரியாக கூறலாம். இறக்கும் தருவாயில் உள்ள ஒருவர் தனது மரண வாக்குமூலத்தை மருத்துவமனையில் கொடுக்கலாம். தாக்கப்பட்ட இடத்திலேயே கூட கொடுக்கலாம். எங்கு மரண வாக்குமூலம் கொடுத்தாலும் அது செல்லும்.
யார் தூண்டுதலும் இல்லாமல் தானே முன்வந்து கொடுப்பது தான் மரண வாக்குமூலம். சிகிச்சை அளிக்கும் மருத்துவர், காவல் துறை அதிகாரி, குற்றவியல் நடுவர் முன் இதை கொடுக்கலாம். வாக்குமூலம் கொடுக்கும் நபரின் உயிர் நீடிக்குமானால் காவல் துறையினர் குற்றவியல் நடுவரை அழைத்து வந்து வாக்குமூலத்தை பதிவு செய்வார்கள். தாசில்தார் கூட மரண வாக்குமூலத்தை பதிவு செய்யலாம்.
![]() |
ஆட்டோ சங்கரின் பிரபலமான மரண வாக்குமூலம் |
சில வேளைகளில் இரண்டாவது முறை மரண வாக்குமூலம் கொடுக்கும் சூழ்நிலை வரும். முதலில் டாக்டரிடமும், காவல் துறை அதிகாரியிடமும் உடனடி வாக்குமூலம் கொடுப்பார். பின்னர் குற்றவியல் நடுவர் முன்பும் கொடுப்பார். இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட மரண வாக்குமூலங்கள் கொடுக்கும் போது, எல்லா வாக்குமூலங்களும் ஒத்து போனால் தான் அந்த வாக்குமூலம் ஏற்கப்படும். ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டால் அந்த வாக்குமூலத்தை நீதிமன்றமே நிராகரித்துவிடும்.
ஒருவேளை, மரண வாக்குமூலம் கொடுத்தவர் பிழைத்துக் கொண்டால், அந்த வாக்குமூலம் நீதி மன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து குற்றம் பற்றி கொடுத்த வாக்கு மூலமாகவே கருதப்படும். இதன் மேல் குறுக்கு விசாரணையும் நடைபெறும்.
![]() |
ஆசிட் வீச்சுக்கு பலியான வினோதினி |
மரணவாயிலில் நிற்கும் ஒருவர் கொடுக்கும் வாக்குமூலம் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உள்ளது. ஆனாலும் இது எல்லா நேரங்களிலும் உண்மையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. பொய்யான மரண வாக்குமூலங்களும் மற்றவர்களை பழிவாங்குவதற்காக கொடுக்கபடுவதுண்டு.
குற்றம் செய்யாதவர்களை உள்நோக்கத்தோடு சம்பந்தப்படுத்தியும் மரண வாக்குமூலம் கொடுக்கலாம். இதை குறுக்கு விசாரணையும் செய்ய முடியாது. ஏனென்றால் வாக்குமூலம் கொடுத்தவர் உயிர் பிழைத்திருந்தால் தான் இதெல்லாம் செய்ய முடியும். மரண வாக்குமூலம் குறுக்கு விசாரணை செய்ய முடியாத சான்றாகும். இதை அப்படியே ஏற்றுக்கொண்டால் நிரபராதி குற்றவாளியாக நிறுத்தப்பட்டு தண்டிக்கபடுவார்.
![]() |
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி கவுசல்யாவின் மரண வாக்குமூலம் |