
மருத்துவக் காப்பீட்டு தனியார் சேவை மையத்தை சேர்ந்த கே.மோகன்காந்தி என்பவர் மருத்துவக் காப்பீடு குறித்து கூறியதாவது :-
வாழ்க்கையில் சில விஷயங்களை மாற்றவே முடியாது. பிடிக்குதோ பிடிக்கலையோ; காலம் முழுவதும் அனுசரித்துச் செல்ல வேண்டியதிருக்கும். ஆனால், மருத்துவக் காப்பீடு திட்டம் அப்படி அல்ல.
மிஸ்டர் குமார், ஒரு பொதுக்காப்பீட்டு நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடு எடுத்து இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவருக்கு திடீ ரென்று அந்த நிறுவனத்தின் நிபந்தனைகள் பிடிக்காமல் போகிறது. அல்லது, அதைவிட கூடுதலான பலன்கள் வேறு நிறுவனத்தில் கிடைக்கிறது.
அப்போது அவர், தான் விரும்பும் காப்பீட்டு நிறுவனத்திற்கு தனது மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றிக் கொள்ளலாம். இதை ‘போர்ட்டபிளிட்டி’ (Portability) என்கிறோம். இப்படி ‘போர்ட்டபிளிட்டி’ செய்வதால், அவரின் பாலிசி தொடர்ச்சி ஒருபோதும் பாதிக்காது.
மிஸ்டர் குமார் ஏற்கனவே நான்கு ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் பாலிசி வைத்திருந்தார்; அதே பாலிசி, ‘போர்ட்டபிளிட்டி’ செய்வதன் மூலம் புதிய நிறுவனத்தில் ஐந்தாவது ஆண்டாக தொடரும்.
காப்பீடு புதுப்பித்தலுக்கு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்பிருந்து அதிகபட்சம் 60 நாட்கள் இடைவெளியில், ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மருத்துவக் காப்பீட்டை மாற்றிக் கொள்ளலாம். அவ்வாறு ‘போர்ட்டபிளிட்டி’ செய்யும்போது, அந்தக் காலகட்டம் வரையிலான பாலிசி ஆவணங்களின் நகல்களை புதிய நிறுவனத்திடம் ஒப்படைப்பது அவசியம்.
குறைந்தபட்சம் கடைசி 4 ஆண்டுக்கான காப்பீட்டு ஆவணங்களின் நகல்களையாவது சமர்ப்பிக்க வேண்டும்.
போர்ட்டபிளிட்டி செய்வதற்கு முன்பு, ஏதேனும் நோய்கள் தாக்கியிருந்தாலோ, ‘கிளெய்ம்’ பெற்றிருந்தாலோ அதுகுறித்த விவரங்களையும், உட்கொண்டிருக்கும் மருந்து, மாத்திரை விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.
நீரிழிவு மற்றும் ‘கிரிட்டிகல் இல்னஸ்’ பிரச்னைகள் இருப்பின், அந்த விவரங்களையும் தெரிவிப்பது அவசியம். நிறுவனத்தின் அன்டர்ரைட்டர்’ முடிவின்படி, இந்த ‘போர்ட்டபிளிட்டி’ ஏற்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம்.
‘போர்ட்டபிளிட்டி’ செய்வதற்கென கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. பொதுவாகவே, எந்த ஒரு மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திலும் 50 வயதுக்குட்பட்ட காப்பீட்டுதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் கிடையாது. அது, ‘போர்ட்டபிளிட்டி’ செய்வதற்கும் பொருந்தும்.
என்னைப் பொறுத்த வரை, 50 வயதுக்கு மேற்பட்ட ஒரு பாலிசிதாரர், ‘போர்ட்டபிளிட்டி’ செய்யாமல் இருப்பது நல்லது.
என் நண்பர் ஒருவர், டெக்ஸ்டைல் தொழில் அதிபர். அவர் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் மருத்துவக் காப்பீடு பெற்றிருந்தார். பின்னர் அவர் அந்த பாலிசியை, வேறு ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு ‘போர்ட்டபிளிட்டி’ செய்தார். அதைவிட கூடுதல் பலன் கிடைப்பதை அறிந்து, மீண்டும் வேறு ஒரு நிறுவனத்திற்கு போர்ட்டபிளிட்டி செய்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று ‘பைல்ஸ்’ ஆபரேஷன் செய்ய வேண்டியதாகிவிட்டது. அந்த சிகிச்சைக்கு உண்டான மருத்துவச் செலவு ரூ.86500ஐ முற்றிலுமாக அந்த மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் அவருக்கு ‘கிளெய்ம்’ வழங்கியது.
இதே சிகிச்சைக்கு அவர் முதலில் பாலிசி வைத்திருந்த பொதுத்துறை நிறுவனமாக இருந்தால், 80 விழுக்காடும், இரண்டாவதாக ‘போர்ட்டபிளிட்டி’ செய்த நிறுவனம் 85 விழுக்காடு தொகை மட்டுமே தந்திருக்கும்.
இந்த சம்பவத்தை எதற்குச் சொல்கிறேன் என்றால், ‘போர்ட்டபிளிட்டி’ செய்வதன் மூலமும் நாம் கூடுதல் ஆதாயம் பெறலாம் என்பதற்காகச் சொன்னேன்.
‘போர்ட்டபிளிட்டி’ செய்வதால் பலநேரம் பிரீமியம் கட்டணமும் குறைய வாய்ப்பு இருக்கிறது. சில நேரம், இன்சூரன்ஸ் முகவர்கள் சுய லாபத்திற்காக ‘போர்ட்டபிளிட்டி’ செய்வதற்கு பதிலாக, புதிய பாலிசியாக கணக்குக் காட்டிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.
அதனால், ‘போர்ட்டபிளிட்டி’ செய்பவர்கள் அதற்குரிய விண்ணப்பங்கள் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்து கையெழுத்திடுவது அவசியம் என்று கே.மோகன்காந்தி கூறினார் .
====================================================================================================================
COURTESY & SOURCE : எஸ். இளையராஜா, ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளார் .
புதிய அகராதி மாத இதழ், சேலம் , கைப்பேசி எண் : 98409 61947