
வாழ்க்கைக் குறிப்பு
தமிழக முதலமைச்சரும் அதிமுக.,வின் பொதுச் செயலாளருமான ஜெ. ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில்,மேல்கோட்டை எனும் கிராமத்தில் வாழ்ந்த ஜெயராம் – வேதவல்லி ஆகிய தம்பதியருக்கு இரண்டாவது குழந்தையாக, 1948ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தார்.
ஜெயலலிதாவின் தாத்தா அந்த கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார்.
அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர்கள். ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூர் மகாராஜாவின் குடும்ப மருத்துவராக இருந்தவர் .
ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவரது தந்தை ஜெயராம் காலமானார்.
ஜெயலலிதா பெங்களூரில் இருந்த பொழுது பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் பத்தாம் வகுப்பை ( மெட்ரிக் ) படித்துதேறிமுதல் மாணவியாகத் திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12_வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது. பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தைக் கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசைக் கருவிகளை மீட்டவும், இனிமையாகப் பாடவும் தேர்ச்சி பெற்றார். 1964_ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா, தாய் மொழி தமிழைப்போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்.
படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த ஜெயலலிதா
மேல் படிப்பு படிக்க ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் காரணமாக படிப்பை கைவிட்டு திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த வேதவல்லி (ஜெயலலிதா) தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். 127 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார்.மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். முதல் படத்திலேயே கதாநாயகியாகி, புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
1981.ம் ஆண்டு அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆவது ஆண்டில் அ. தி. மு.க.,வின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.
‘அம்மு’ என்று அழைக்கப்பட்ட ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்த பின்னர் மரியாதை கருதி அம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்படுகிறார். புரட்சித்தலைவர் என்றழைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரனின் அரசியல் வாரிசாக கருதப்படுவதால், புரட்சித் தலைவி என்றும் அழைக்கப்படுகிறார்.
1984ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினரான இவருக்கு 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கையில் பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா ( தமிழக முன்னாள் முதலமைச்சர் கா. ந. அண்ணாதுரை) அமர்ந்திருந்தது.இவருக்கு முன்னால் மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் 1989 முதல் 1991வரை பணியாற்றிவர்.
ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பணியாற்றிய விபரங்களாவது :-
ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை – தமிழகத்தின் 11 வது முதலமைச்சர்
மே 23, 2015 முதல் மே 22, 2016 வரை தமிழகத்தின் 18 வது முதலமைச்சர்
மே 23, 2016 முதல் இன்று வரை தமிழகத்தின் 19 வது முதலமைச்சர்
கடந்த 2001ம் ஆண்டு, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு பல தொகுதிகளில் தாக்கல் செய்திருந்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். கடந்த 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்றார்.
ஜெயலலிதா தலைமையில் அதிமுகவின் சாதனைகள்1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று வாஜ்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது. 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது. 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.

அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு நடந்த தேர்தல்கள்மேலும் அதிமுக தோற்றுவிக்கப்பட்ட பிறகு இதுவரை நடந்த 10 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 7 முறை அதிமுக ஆட்சியைப்பிடித்து, தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அமைத்த கட்சி என்ற சாதனையைப் படைத்தது.ஜெயலலிதா பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். கலைமாமணி விருது – தமிழ்நாடு அரசு (1972) சிறப்பு முனைவர் பட்டம் – சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)தங்க மங்கை விருது – பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
ஜெயலிதாவின் மீதான வழக்கு விவரங்கள், வண்ணத் தொலைக்காட்சி வழக்கு ஊராட்சிகளில் பயன்படுத்த 45,302 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கியதில் 10.16 கோடி ரூபாய் அளவிற்கு கையூட்டுப் பெற்றதாகக் குற்றம்சாட்டப்பட்ட இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சசிகலாவின் உறவினர் பாஸ்கரன், அன்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி, தலைமைச் செயலாளர் ஹரிபாஸ்கர், அதிகாரிகள் ஹெச்.எம்.பாண்டே, சத்தியமூர்த்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்கள்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 80 பேரை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜெயலலிதா, சசிகலா, பாஸ்கரன் ஆகியோரை 2000-ஆம் ஆண்டு மே 30 அன்று விடுவித்தார். அதேசமயம் அமைச்சர் செல்வகணபதிக்கும், அதிகாரிகளுக்கும் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கியதாகவும் அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் 2000-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்குகளுக்குமாகச் சேர்த்து ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அளித்தது.

கொடைக்கானலில் கட்டிட விதிகளை மீறி, ஐந்து மாடிகள் உடைய நட்சத்திர விடுதி கட்டிக்கொள்ள பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்ததாகக் குற்றச்சாட்டு. தீர்ப்பு – சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிற்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அன்றைய அமைச்சர் செல்வகணபதி, அதிகாரி பாண்டே, விடுதி இயக்குநர் ராகேஷ் மிட்டல், விடுதியின் சேர்மன் பாளை சண்முகம் ஆகியோருக்கு ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தார். 2000-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது 2000-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்குச் சிறைத் தண்டனை விதித்த செய்தி வெளியானதும் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் ரகளையில் ஈடுபட்டனர். அச்சமயம் தர்மபுரி மாவட்டத்திற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்த கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்து மறிக்கப்பட்டு பேருந்துக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அந்தச் சம்பவத்தில் காயத்ரி, கோகில வாணி, ஹேமலதா என்ற மூன்று பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டு இறந்து போயினர். தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் மூன்று அதிமுகவினருக்கு சேலம் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேல்முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தன[. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, ‘கல்லூரி’ என்று ஒரு திரைப்படம் உருவானது.நிலக்கரி இறக்குமதி வழக்குதமிழக அனல் மின்நிலையங்களில் பயன்படுத்த ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்ததாகவும் அதனால் அரசுக்கு 6.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், தலைமைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன், மின்வாரியத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்தது. சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.இந்த வழக்கில் சுப்ரமணியம் சுவாமியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். ‘700 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருந்த சுப்ரமணியம் சுவாமியால், விசாரணையின்போது குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடவோ, விளக்கவோ முடியவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
டிட்கோ-ஸ்பிக் பங்குகள் வழக்குஅரசு -தனியார் கூட்டுறவில் உருவான நிறுவனம் ஸ்பிக். செட்டிநாட்டரசர் குடும்பத்தைச் சேர்ந்த எம்.ஏ. சிதம்பரமும், அவரது மகன் ஏ.சி. முத்தையாவும், தோற்றுவித்த அந்த நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை (26%) தமிழக அரசு நிறுவனமான டிட்கோ வைத்திருந்தது. நிறுவனத்தின் தலைவராக எம்.ஏ.சிதம்பரமும், துணைத்தலைவராக ஏ.சி.முத்தையாவும் இருந்தார்கள். 89-ஆம் ஆண்டு ஏற்பட்ட திமுக ஆட்சியின்போது பெரும்பான்மைப் பங்குகளை தமிழக அரசு வைத்திருப்பதால் தலைமைச் செயலாளர்தான் தலைவராக இருக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்தது. :எம்.ஏ.சிதம்பரம் குடும்பத்தினர் தலைவராவதற்கு ஏதுவாக தமிழக அரசு தன்னிடமிருந்த 2 லட்சம் கடன் பத்திரங்களை அவர்களுக்கு மாற்றிக் கொடுத்தது. 12.37 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை 40.66 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டுதான் கொடுத்தது. ஆனால், இதில் ஊழல் நடந்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறி வந்த குற்றச்சாட்டுக்களையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கில் 2004-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் நாள் சிறப்பு நீதிமன்றம் சி.பி.ஐ. குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை எனச் சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்து, ஜெயலலிதாவை விடுதலை செய்தது. அரசுக்கோ, டிட்கோவிற்கோ நிதி இழப்பு ஏற்படவில்லை என்றும் சொல்லியது.
செய்தித்தாளில் வந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில் பொது நல வழக்குத் தொடர்ந்ததாகவும், இந்தப் பங்கு பரிமாற்றம் பற்றித் தனக்குத் தனிப்படத் தெரியாது என்றும் அதுவும் கட்டுரை வெளிவந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் வழக்குத் தொடர்ந்திருப்பதாலும் பொது நல வழக்குத் தொடர்ந்த சுப்ரமணிய சுவாமியின் சாட்சியத்தை ஏற்க இயலாது என நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கடந்த 1992-ஆம் ஆண்டு 57 பேரிடமிருந்து 89 வரைவோலைகள் (இதில் அயல்நாட்டிலிருந்து 3 லட்சம் டாலருக்கான ஒரு வரைவோலையும் அடக்கம்) மூலம் 2 கோடி ரூபாய்க்கு மேல் தனது பிறந்த நாளன்று பரிசாகப் பெற்றதாக சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்பு குற்றச்சாட்டுப் பதிவு செய்தபோது 21 பேரிடமிருந்து 1.48 கோடி ரூபாய் என்று அதைக் குறைத்துவிட்டது. இந்த வழக்கில் அன்றைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.
இந்த வழக்கில் 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.என். பாஷா, சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த மொத்தக் குற்றசாட்டுக்களையும் தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்தார். பத்தாண்டுகளாகியும் சி.பி.ஐ. விசாரணையை முடிக்காமல் காரணமின்றி இழுத்தடிக்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட எவரும் புகார் அளித்து, சி.பி.ஐ. இந்த வழக்கைத் தொடரவில்லை என்றும், ஜெயலலிதா அவரது வருமான வரி தாக்கலின் போது பிறந்தநாள் பரிசுகள் குறித்துக் கொடுத்திருந்த தகவலை அடிப்படையாகக்கொண்டே குற்றச்சாட்டு கூறப்படுகிறது. எனவே அவர் எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகிறது என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.56 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக 1996 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி சென்னை நீதிமன்றத்தில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கினைத் தொடர்வதற்கான அனுமதியை மாநில ஆளுனரிடமிருந்து சுப்பிரமணியன் சுவாமி பெற்றார்.
கடந்த 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சரானது இந்த வழக்கின் விசாரணையை கர்நாடகத்துக்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் மனு அளித்தார். அதை ஏற்று கொண்ட நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றி கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெங்களூருவில் உள்ள மாநகர சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் விசாரணை தொடங்கியது.இவ்வழக்கில் 252 அரசுத் தரப்பு சாட்சிகளிடமும், 99 எதிர்தரப்பு சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 313ன் கீழ், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் வாதங்கள் நிறைவடைந்தன. 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தியதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு கர்நாடக மாநிலத்தின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்படும் என என நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991–96ம் ஆண்டு பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது
இதன் தொடர்ச்சியாக அவர் முதல்வர் பதவியை இழந்தார். அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது
கடந்த 2015ம் ஆண்டு மே 11 அன்று சொத்துக்குவிப்பு வழக்கின் வழங்கப்பட்ட தண்டனைக்கெதிராக இவரால் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசின் மேல்முறையீட்டை இந்திய உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
ஜெயலலிதா வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வருமானவரி வழக்கு சென்னை கூடுதல் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்நிலையில் ரூபாய் இரண்டு கோடி வருமானவரித் துறைக்கு ஜெயலலிதா மற்றும் சசிகலா அபராதம் செலுத்தியதால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி அன்று வருமானவரித் துறையினர் வழக்கை திரும்ப பெற்றதின் மூலம் வருமானவரிக் கணக்கு வழக்கு முடிவுக்கு வந்தது . அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர் விடுவிக்கப்பட்டமையால் 2015ம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சராகப் ஐந்தாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த 04-012-2016 ஞாயிற்றுக்கு மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்ட தனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன
இதனால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்தனர். அதேசமயம், முதலமைச்சருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே வெளியிட்ட அறிக்கையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தார்.
எனவே, தொண்டர்களிடையே உள்ள கவலை மேலும் மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா,05-012-2016 அன்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.