
புதன், மார்ச் 19, 2008
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு – 1 கப்
மைதா மாவு – 1 கப்
பட்டாணி மாவு – 1 கப் *
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (பெரியது)
பசலைக் கீரை – 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
நெய் அல்லது வெண்ணெய்
செய்முறை:
கழுவிய பசலைக் கீரை, வெங்காயத்தை மிகமிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.\
பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கோதுமை மாவு, மைதா, பட்டாணி மாவு, மிளகாய்த் தூள், உப்பு, அரைத்த மிளகாய் விழுது, நறுக்கிய கீரை, வெங்காயம், எண்ணெய் சேர்த்து நன்றாக அழுத்திப் பிசையவும்.
தேவைப்பட்டால் சிறிது வெந்நீர் விட்டு (கீரை, வெங்காயம் சேர்ப்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படாது.) மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சுமாராகப் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை துணியில் சுற்றி அல்லது ஈரமான மூடிபோட்ட உலர்ந்த பாத்திரத்தில் அரைமணியிலிருந்து ஒருமணி நேரம் வரை வைத்திருக்கவும். மாவு சிறிது தளர்வாகியிருந்தால் ப்ரிட்ஜிலும் வைக்கலாம்.
ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.
மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.
அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.
மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம் அல்லது நேராக அடுப்பில் காட்டி வாட்டலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.
Missi Roti (Gujarat)
பட்டாணி மாவு கிடைக்காதவர்கள், அரை கப் மஞ்சள் பட்டாணியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊறவைத்து, பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைத்துக் கலந்துகொள்ளலாம். நான் அப்படித்தான் செய்திருக்கிறேன்.
மடித்து இட நேரமில்லாதவர்கள் ஒரே முறை மட்டும் வட்டமாக இட்டும் செய்யலாம். இந்த முறையிலும் நன்கு உப்பி கொப்புளங்கள் வரும்; மென்மையாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
தக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்ப் பச்சடி, சப்ஜி வகைகள்….