Header Banner Advertisement

மிஸ்ஸி ரொட்டி (பஞ்சாப்) செய்முறை


001

print

வெயில் காலங்களில் பயத்தம் பருப்பு, வெங்காயம், கீரைகளை உணவில் அதிகம் சேர்ப்பது நல்லது. ரொட்டி, தால் வகையாக இவற்றைச் செய்து பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

கோதுமை மாவு – 3 கப்
கடலை மாவு – 1 கப்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1 டீஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 2 (பெரியது)
கொத்தமல்லித் தழை – 1 கப் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
நெய் அல்லது வெண்ணெய்

செய்முறை:

இஞ்சி பச்சை மிளகாயை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் கொத்தமல்லித் தழையை மிகப் பொடியாக அரிந்து கொள்ளவும்.

கோதுமை மாவு, கடலை மாவு, ஓமம், எள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது, தயிர், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித் தழை, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் எல்லாவற்றையும் நன்கு கலந்து கையால் அழுந்தப் பிசைந்து கொள்ளவும்.

தேவைப் பட்டால் மட்டும் இன்னும் சிறிது நீர் சேர்த்து கெட்டியான மாவாக அடித்துப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

ஊறிய மாவை எடுத்து மீண்டும் அழுத்திப் பிசைந்து, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

உருண்டைகளை மைதா மாவு தோய்த்து, சிறிய சப்பாத்திகளாக இட்டு, நடுவில் சிறிது நெய் அல்லது எண்ணெய் தடவி நான்காக மடித்து, முக்கோண வடிவில் வைத்துக் கொள்ளவும்.

மடித்து வைத்துள்ள சப்பாத்திகளை மேலும் மைதா மாவு தோய்த்து சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் தோசைக்கல்லில் போடவும்.

அடிப்பாகம் சிறிது காய்ந்து மேலே சிறிய சிறிய கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும்போது திருப்பிப் போடவும்.

மீண்டும் கொப்புளங்கள் வரும்போது ஃபுல்கா செய்வது மாதிரி ஒரு துணியால் அழுத்தி அழுத்தித் திருப்பிவிடலாம். விரும்புபவர்கள் இந்த நிலையில் மட்டும் சிறிது எண்ணெய் அல்லது நெய் விட்டு கரண்டியால் அழுத்திக் கொடுத்து சாதாரண சப்பாத்தி மாதிரியும் வேகவைக்கலாம்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். எண்ணெய் சேர்க்காமல் ஃபுல்காவாகச் செய்திருந்தால், கல்லிலிருந்து எடுத்ததும் மேல்புறம் சிறிது நெய் அல்லது வெண்ணெய் தடவிப் பரிமாறலாம்.

மடித்து இடாமல் ஒற்றையாகவும் இட்டு எடுக்கலாம்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

ஊறுகாய், தயிர்ப் பச்சடி, தால் வகைகள் இவற்றில் ஏதாவது ஒன்றோடு சாப்பிட சுவையாக இருக்கும். பிரயாணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. சீக்கிரம் கெட்டுப் போகாது.