பருவ மழை பொய்ப்பதும், காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. இதைக்கூட சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்து விடலாம்… ஆனால் கடந்த 33 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர் கொண்டது. சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்க இருக்கிறது. இதை எப்படி எடுத்துக் கொள்வது?
இந்தியா எதிர்கொண்ட முக்கியமான பஞ்சங்கள் வங்கத்துப் பஞ்சமும் (1770) சென்னை மாகாணப் பஞ்சமும் (1877). வங்கத்துப் பஞ்சத்தின்போது, கீழ் கங்கைச் சமவெளிப் பகுதியான இன்றைய வங்கதேசம், மேற்குவங்கம், பீகார், ஒடிசா ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. ஏறத்தாழ ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர்.

சென்னை மாகாணப் பஞ்சத்தின்போது, தக்காணப் பீடபூமிப் பகுதியான இன்றைய தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றில் தொடங்கி மகாராஷ்டிரம் வரை பாதிக்கப்பட்டன. இதிலும் ஒரு கோடிப் பேர் மாண்டனர். பருவ மழை தவறி வறட்சிச் சூழல் ஏற்படும்போது எல்லாம் இந்தியா பதற்றத்துக்கு உள்ளாக, இந்த இரு பஞ்சங்களும் முக்கியமான காரணம். ஆனால், எப்போதுமே பஞ்சம் ஏற்பட வறட்சி ஓர் எரிசக்திதான்; ஆனால் மூல காரணம் அது அல்ல என்பதுதான் வரலாறு சொல்லும் செய்தி.
வங்கத்துப் பஞ்சம் ஏற்படுவதற்கான மூல காரணம், பிளாசி மற்றும் பக்சார் போர்களின் விளைவாக கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குக் கீழ் வங்கம் வந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ள நில வரியைக் கூட்டினார்கள். உணவுப் பயிர்களுக்குப் பதில் பணப் பயிர்களை ஊக்குவித்தார்கள். உணவு உற்பத்தி வீழ்ச்சி அடைய இது வழிவகுத்தது.

உணவுப் பற்றாக்குறை நிலவிய சூழலில், 1770ல் ஏற்பட்ட வறட்சி மக்களைப் பஞ்சத்தில் கொன்றழித்தது. சென்னை மாகாணப் பஞ்சம் ஏற்படுவதற்கான மூல காரணம், சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் சென்னை மாகாணம் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தது. கடுமையான வரிவிதிப்பு. புதிய பணப் பயிர்கள் ஊக்குவிப்பு, ரயில்களின் துணையோடு முழுவீச்சில் ஏற்றுமதி என்று உணவு உற்பத்தியை நெருக்கடியில் தள்ளினார்கள் ஆங்கிலேயர்கள்.
வறட்சி ஏற்பட்டபோது மக்கள் விதை நெல்லைச் சமைத்துச் சாப்பிட்டபோதும்கூட, தானிய ஏற்றுமதியை ஆங்கிலேயர்கள் நிறுத்தவில்லை. மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துச் சாப்பிடும் நிலை ஏற்பட்டபோது, பஞ்சக் குழுவை அரசு அமைத்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நின்றவர்களுக்கு அரை வயிறு உணவு அளிக்க நாள் முழுவதும் அவர்களை வேலையில் கசக்கிப் பிழியும் கூலித் திட்டத்தை அது அறிவித்தது.

சென்னையில் பக்கிங்ஹாம் கால்வாய் கட்டப்பட்டது எல்லாம் அந்தக் கால கட்டத்தில் தான். ஒரு பக்கம், பசியால் மக்கள் எலும்பும் தோலுமாகி கொத்துக் கொத்தாகச் செத்து விழ, இன்னொரு பக்கம் இலங்கை, பிஜி, பர்மா என்று உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் கொத்தடிமை சேவகத்துக்குப் போனார்கள். முந்தையை தலைமுறையினரிடம் தாது வருஷப் பஞ்சம் என்று கேட்டால், கதை கதையாகச் சொல்வார்கள். ராமாநாதபுரம் பகுதி கிராமப் புறங்களில் அப்போது வைக்கப்பட்ட கஞ்சித் தொட்டிகளைச் சிதிலம் அடைந்த நிலையில் இன்றைக்கும் பார்க்கலாம்.
நம் நாட்டின் மழைப் பொழிவில் 75 சதவிகிதத்தைத் தென்மேற்குப் பருவமழைதான் வருகிறது. நாட்டின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்குப் பருவ மழையின் பங்கு முக்கியமானது. இந்த ஆண்டு தென்மேற்கு மழைப் பொழிவு வழக்கத்தை விட 21 சதவிகிதம் குறைவு. இதன் விளைவை காரீஃப் பருவப் பயிர்களான அரிசி, எண்ணெய் வித்துக்கள் விளைச்சல் எதிர்கொள்ளும். 2011-12ல் நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி 103 மில்லியன் டன். இந்த ஆண்டு நிச்சயம் இதில் 10 சதவிகிதம் குறையும்.

இந்தியா போன்ற ஒரு விவசாய நாட்டில் பருவ மழை பொய்க்கும் என்று தெரிந்து விட்டால், வயலுக்கு ஒரு குட்டை, மழை நீர் சேகரிப்பு, விவசாயக் கடன் ரத்து, மானியவிலையில் இடு பொருட்கள், உணவு தானியப் பாதுகாப்பு, பொது விநியோகச் சீரமைப்பு என்று அரசு உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம். ஆனால், இந்திய அரசின் அலட்சியம், காலனி ஆதிக்கக் காலத்தை நினைவூட்டுகிறது.
கட்டுரையாளர்: சமஸ், ஆனந்த விகடன்.