Header Banner Advertisement

மீன்பிடித்து விளையாட ஒரு சுற்றுலா


India-2011-053

print
கலிபோரே
தூண்டிற்காரனின் சொர்க்கம்

வெயில் சுட்டேரிக்கிறதா… குளுமையான இடம் தேடி போக மனம் துடிதுடிக்கிறதா… ஊட்டியும் கொடைக்கானாலும் போரடிக்கிறதா.. அப்படியென்றால் உங்களுக்கு ஏற்ற இடம்’கலிபோரே’ தான்.

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் இருந்து 95 கி.மீ. தூரம் பயணித்தால் கலிபோரே வந்துவிடுகிறது.

அடர்ந்த காடு, அச்சத்தை தோற்றுவிக்கும் அமைதி, இடைவிடாமல் எங்கோ ரீங்காரமிடும் தேனீக்களின் ஓசை, சலசலத்து ஓடும் காவேரி ஆறு, சூரிய ஒளிக்கு தடைபோட்டு நிற்கும் உயர்ந்த அர்ஜுனா மரங்கள், கால்களுக்கு வலிமை சேர்க்கும் கரடு முரடான பாதைகள் இவை போதாதா சொர்க்கத்தை மண்ணுக்கு கொண்டு வர… போதும்தான்.!

‘தூண்டிற்காரனின் சொர்க்கம்’
அதனால்தான் இந்த இடத்திற்கு ‘தூண்டிற்காரனின் சொர்க்கம்’ என்று காரணப் பெயரும் வைத்துவிட்டார்கள் சுற்றுலாவாசிகள்.

1980-ல் பொழுதுபோகாதா இரண்டு வெள்ளையர்கள் இங்கு வந்து மீன்பிடித்து பொழுதுபோக்கினார்கள். அவர்கள் பெயர் மார்டின் கிளார்க், ராபார்ட் ஹிவிட். ஒருநாள் அவர்கள் தூண்டிலில் 41.76 கிலோ எடையும், 1.70 மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் சுற்றளவும் கொண்ட மகாசீர் மீன் கிடைத்தது. தினமும் இப்படி மீன்கள் தூண்டிலில் சிக்கின. ஒரு மாதத்துக்குள் 40 மீன்கள்..! இந்த இடம் அடர்ந்த வனம் என்ற நிலை மாறி மீன்பிடி முகாமாக மறுவடிவம் கொள்ள இததான் காரணம்.

மகாசீர் மீன்
இங்கு இப்படி மீன்பிடித்து இயற்கையோடு இணைந்து விளையாடும் சுகமே தனிதான். மீன்களை மனிதன் பிடிப்பதே உணவுக்காகத்தான். ஆனால், கலிபோரேவின் கதையே வேறு. இங்கு மீன்கள் உணவுக்காக பிடிக்கப்படுவதில்லை. மகிழ்ச்சிக்காகவும் விளையாட்டுக்காகவும் பிடிக்கப்படுகிறது. இப்படி பிடித்த மீன்களை மீண்டும் ஆற்றிலே விட்டுவிடுவார்கள். இதுதான் மீன்பிடித்து விளையாடும் சுற்றுலா.

மகாராஜாக்கள், கவர்னர்கள், மந்திரிகள் வேட்டையாடி திரிந்த இந்த காடுகளில் இன்று எதையும் வேட்டையாடக் கூடாது என்று சட்டம் தடைப் போட்டு நிற்பதால் மீன் பிடித்து பின் விடும் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த இடத்துக்கருகில் பீமேஸ்வரி, தொட்டம்கலி, காவேரி மீன்பிடி முகாம் என்று மேலும் மூன்று மீன்பிடித்து விளையாடும் மையங்கள் இருக்கிறன்றன. ஒவ்வொன்றும் காட்டுக்குள்ளே நதியின் கரையோரத்திலே நடந்து போக வழிகள் உண்டு. அதுவே ஒரு நல்ல ட்ரெக்கிங் அனுபவத்தை தரும்.

இங்கு மீன்களைப் பிடிப்பதற்காக ‘ஆங்லிங்’ என்ற தூண்டிலை வாடகைக்கு விடுகிறார்கள். இந்த தூண்டிலின் விஷேசம் என்னவென்றால், தூண்டிலில் மீன்கள் மாட்டிக்கொன்டப் பின் சிறிது நேரத்தில் தானகவே விடுபட்டுவிடும். ஒவ்வொருவரும் எத்தனை மீன்களை பிடித்தார்கள் என்று கணக்கு வைத்து எண்ணி விளையாடலாம்.

இங்கு மகாசீர் என்ற பெரிய மீன்களை தவிர கெளுத்தி, கெண்டை போன்ற பல வகை மீன்களும் கிடைக்கின்றன. பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தொழில் முறையில் மீன்களை பிடித்து விற்பனை செய்யும் மீனவர்களும் இங்குண்டு.

மலபார் ராட்சஸ அணில்
காவிரிக் கரையோரத்தில் அமைந்த இந்த வனப்பகுதியில் காட்டுப்பன்றி, சாம்பார் மான், புள்ளி மான், ராட்சஸ அணில், சிறுத்தை, யானை, மலபார் ராட்சஸ அணில், குள்ள நரி, முதலைகள், ஆமைகள், பச்சோந்திகள், நாகப்பாம்புகள், மலைப்பாம்புகள் போன்ற அனைத்துவகையான உயிரினங்களையும் பார்க்கலாம்.
இதுபோக 230 வகைப் பறவைகளையும், பலவித மூலிகைச் செடிகளையும் இங்கு சாதரணமாக தரிசிக்கலாம். அடர்ந்த வனப் பகுதி என்பதால் இயற்கையின் அழகு முழுவதும் இங்கு கொட்டி கிடக்கிறது. மீன் பிடிப்பதற்கென்றே குடில்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த குடில்களுக்கு போகும் பாதைகள் தான் கரடு முரடாக இருக்குமே தவிர குடில்கள் பட்ஜெட் ஹோட்டல்களை ஞாபகப்படுத்தும் அளவிற்கு தரமாகவே இருக்கின்றன.
இங்கு பரிசலில் போய்வருவதும் படகில் பயணம் செய்வதும் மறக்கமுடியாத அனுபவத்தை தரும். ‘தில்’ இருப்பவர்கள் அகன்று ஓடும் காவேரி ஆற்றை நீந்திக் கடந்து அக்கரையில் இருந்து ‘டாட்டா’ காட்டலாம். இன்னும் கொஞ்சம் ‘தில்’ இருந்தால் மலை முகட்டில் தைரியமாக பைக் ஓட்டலாம், இல்லையென்றால் காலார நடக்கலாம், பாறையில் கயிற்றைப் பிடித்து ஏறலாம்.
இப்படி ஏகப்பட்ட சாகசங்களும் இங்கு குவிந்திருக்கின்றன. இயற்கை அழகும், பறவைகளின் ஓசையும் வாழ்நாள் முழுவதும் நினைவை விட்டு நீங்காத இடம் இது. மின்சாரம் இல்லாத காடு என்பதால் குடில்களுக்குள் லாந்தர் விளக்குதான். மொபைல் போன்ற நவீன சாதனங்கள் எதுவும் இங்கு வேலை செய்யாததால் இயற்கையை முழுமையாக கொண்டாடலாம்.

இதெல்லாம் சரி, ஊட்டி, கொடைக்காணல் போல் குளிருமா என்று கேட்கலாம். குளிருக்கும் குளுமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. குளிர் கொஞ்சம் கொடுமையானது. குளுமை எப்போதும் இனிமையானது. கலிபோரேவில் நிலவுவது குளுமை. அதுவும் ரசிக்கும்படியான குளுமை.

ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்
உடனே பெட்டிப் படுக்கையோடு கிளம்புகிறவர்களுக்கு ஒரு டிப்ஸ். முதலில் ‘ஜங்கிள் லாட்ஜஸ் ரிசார்ட்ஸ்’ (080-40554055) என்ற குடில் அமைப்பளர்களுக்கு ஒரு போன் போடுங்கள். முன்பதிவு செய்து கொள்ளுங்கள். இப்போதைய நிலவரப்படி ஒருவர் ஒரு இரவு தங்க கட்டணம் உணவுடன் சேர்த்து ரூ.4,400/- வசூலிக்கிறார்கள்.

மீன் பிடிப்பதற்கான ‘ஆங்லிங்’ தூண்டிலுக்கான ஒரு நாள் வாடகை ரூ.2,000/-

சீசன் காலம்: செப்டம்பர் – ஏப்ரல்.

படங்கள்: கூகுள் இமேஜ்