Header Banner Advertisement

முக்கல புலுசு செய்முறை


001

print

இந்த உணவு நம் ஊர் சாம்பாரின் ஆந்திர வெர்ஷன். மற்ற நாள்களிலும் இதை தயாரித்தாலும் முக்கியமாக நாம் வருடப் பிறப்பிற்கு அறுசுவையில் மாங்காய்ப் பச்சடி செய்வதுபோல் அவர்கள் இதை அறுசுவை உணவாக தெலுங்குவருடப் பிறப்பன்று(உகாதித் திருநாள்) செய்கிறார்கள்; மற்றும் முக்கியமான பண்டிகை நாள்களிலும் செய்கிறார்கள். ஆனாலும் புலம்பெயர்ந்த பல ஆந்திரப் பெண்களுக்கு இது குறித்து தெரியவில்லை. அல்லது தெலுங்கு பிராமணர்கள் மட்டுமே அதிகம் இதை செய்கிறார்கள் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. எனக்கு சரியாகத் தெரியவில்லை.

தேவையான பொருள்கள்:

புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் – 1
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை

வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5, 6
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்

தாளிக்க: எண்ணெய், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.

காய்கறிகள்: சுரைக்காய், பரங்கிக்காய், முருங்கை.

செய்முறை:

புளியை நன்கு கரைத்து வடித்துக் கொள்ளவும்.

காய்களை 2″ நீள அல்லது சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, காய்ந்தமிளகாய், கடுகு, வெந்தயத்தை வரிசையாகச் சேர்த்து வறுத்து, ஆறியதும் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.

மீண்டும் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் வைத்து, கடுகு, சீரகம், பெருங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

நறுக்கிய காய்களைச் சேர்த்து ஒரு நிமிடம் லேசாக வதக்கவும்.

சிறிது தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வேகவைக்கவும்.

காய்கறி பாதி வெந்ததும் புளிநீர் சேர்க்கவும்.

புளிநீர் கொதித்து பச்சை வாசனை போனதும் வறுத்து அரைத்த பொடி சேர்த்து மேலும் 4, 5 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும்.

இறக்குவதற்கு நீரில் கரைத்த கடலை மாவு, பொடித்த வெல்லம் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடவும்.

அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்தமல்லித் தழை கலந்து பரிமாறலாம்.

பொதுவாக புடலை, வெண்டை போன்ற காய்களிலும் செய்து அந்தந்த காய்கறிகளின் பெயரோடு இந்த புலுசை அழைத்தாலும் மொத்தமாக ‘முக்கல புலுசு’ என்று கலவையான காய்களோடு செய்யும்போதே குறிப்பிடப் படுகிறது. அவற்றிலும் மேலே சொல்லியிருக்கும் மூன்று காய்கள் மட்டுமே முக்கியமானவை.

வெங்காயம், பூண்டு, சேர்ப்பதில்லை.புலுசு தயாரித்தபின் கடைசியிலும் தாளிக்கலாம்.

வறுத்து அரைக்காமல், நேரடியாக மிளகாய்த் தூள், கடுதுத் தூள், வெந்தயத் தூள் இருந்தாலும் உபயோகித்துக் கொள்ளலாம். வழமையாகச் செய்பவர்கள், பொதுவாக இந்தப் பொடியையும் நம் சாம்பார்ப் பொடி போல் முதலிலேயே மொத்தமாக தயாரித்து வைத்துக் கொண்டு உபயோகிக்கிறார்கள்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

நெய், பருப்பு கலந்த சாதத்துடன் பரிமாறலாம்.