
தேவையான பொருள்கள்:
முள்ளங்கி – 1/2 கிலோ
பயத்தம் பருப்பு – 1/4 கப்
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம்.
mullangi curry
செய்முறை:
பயத்தம் பருப்பைக் கழுவி, நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.
அந்த நேரத்தில் முள்ளங்கியை (தேவைப்பட்டால்) தோலைச் சீவிக் கொண்டு, கேரட் துருவியில் பெரிய அளவாகத் துருவிக் கொள்ளவும்.
துருவிய முள்ளங்கியுடன் நீரை வடித்த பயத்தம் பருப்பு, உப்பு(கவனம்: முள்ளங்கி சுண்டி, அளவில் குறையும்.) சேர்த்துப் பிசிறி பத்து நிமிடங்கள் வைக்கவும்.
அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு,காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம் தாளிக்கவும்.
கறிவேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து, அடுப்பை நிதானமான சூட்டில் வைத்து, முள்ளங்கிக் கலவையையும் சேர்த்துக் கிளறி, மூடிவைக்கவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம்.
ஒன்றிரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை திறந்து கிளறிவிட்டு, முள்ளங்கி வெந்து நீர்வற்றியதும் தேங்காய்த் துருவல், நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். (சுமார் 5, 6 நிமிடங்களிலேயே முடிந்துவிடும்.)
முள்ளங்கி தவிர, கேரட், கோஸ் போன்ற காய்களிலும் இந்த முறையில் கறி செய்யலாம். ஆனால் இங்கே முக்கியமாக முள்ளங்கியைச் சொல்லியிருப்பதற்குக் காரணம்– சாம்பார், ரொட்டி தவிர முள்ளங்கியை கறி, கூட்டாக செய்வதில் பலருக்கு அதன் மணம் பொருட்டு, ஆட்சேபம் இருக்கிறது. இந்த முறையில் முள்ளங்கியின் மணம் அறவே வராது.
சின்னச் சின்ன இளமுள்ளங்கியாகத்தான் இருக்கவேண்டுமென்றில்லாமல் எவ்வளவு பெரிய, முற்றல் முள்ளங்கியில் இதைச் செய்தாலும் நன்றாக இருக்கும்.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
குழம்பு, ரசம் சாதம் என்றெல்லாம் அடுக்குவதற்கு முன், அப்படியே சூடாக கறியை மட்டும் தனியாகச் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். அதிகம் மசாலா சேர்க்காமல், அதிகம் அடுப்பில் வேகவைக்காமல், முள்ளங்கியின் மண்மணம் வராமல் செய்யக்கூடிய ஆகச் சிறந்த முறை.