Header Banner Advertisement

மேகமலை பயணம்


IMG_0217

print
மேகமலைக்கு இரண்டு முறை பயணம் செய்திருக்கிறேன்.முதல் பயணம் 2009-ல். அப்போதுதான் தமிழக அரசு புதிதாக 18 சுற்றுலா தலங்களை அறிவித்திருந்தது. அதில் மேகமலையும் ஒன்று.

இந்த அறிவிப்பை பார்த்த நாளில் இருந்து அங்கு போக வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆவல் தோன்றியது. மேகமலைக்கு தேனியில் இருந்து ஒரு நாளைக்கு மூன்று பேருந்துகள் மட்டுமே செல்கின்றன. அவைகளும் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளும் என்று கேள்விப் பட்டேன். ஆக, பஸ் சரிப்பட்டு வராது.

அடுத்து என்னுடைய சாய்ஸ், டூ வீலர்தான். மதுரையிலிருந்து மேகமலை 150 கி.மீ ஏற்கனவே கொடைக்கானலுக்கு டூ வீலரில் போன அனுபவம் இருந்ததால் தைரியமாக கிளம்பினேன். கூடவே எனது 10 வயது மகனும் இணைந்து கொண்டான்.

டூ வீலரோ காரோ எந்த வாகனமாக இருந்தாலும் நீண்ட தூரம் நானே ஓட்டிக்கொண்டு போவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாளில் காலை 5 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பினோம்.

பாதையோர பசுமை

அது அறுவடைக்கு முந்திய காலம். சாலையின் இருபக்கமும் பசுமையான வயல்கள் செழித்திருந்தன. அரும்பி நிற்கும் இளம் நெல்மணிகளின் பால் வாசம் பாதை எங்கும் பரவியிருந்தன. அதுவே எங்கள் பயணத்திற்கு புத்துணர்ச்சி தந்தது.

உசிலம்பட்டி வரை இருட்டுக்குள் பயணித்த எங்களுக்கு, அதன் பின் விடியலின் வெளிச்சமும் இதமான குளிரும் பயணத்தை மேலும் இனிமையாக்கியது.

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பசுமை, அதன் நடுவே கருப்பு நிற தார்ச்சாலை வளைந்து நெளிந்து வசீகரமாக நீண்டு கொண்டே போனது. வாகனங்களற்ற சாலையில் பயணிப்பதும் தனி சுகம்தான். நமக்கு உணவளிக்கும் உழவர்கள் மட்டுமே காலையில் காய்கறியோடு டூ வீலரில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்ததாக ஆண்டிப்பட்டி வந்தது. குளிரின் இதமான பிடியில் இருந்து எங்களை சற்று விலக்கிக் கொள்ள சூடான தேநீர் அருந்தினோம். மீண்டும் பயணம். தேனியை கடந்து வீரபாண்டி வந்ததும் வண்டியை நிறுத்தினோம்.

பாரதிராஜா படங்களில் அடிக்கடி தலை காட்டும் அந்த அழகிய இடம் எங்களை மேற்கொண்டு போகவிடாமல் கட்டிப் போட்டது. எத்தனை ‘லலலா..!’ பாடல்கள் இங்கு படமாக்கப் பட்டுள்ளன.

வைகையின் கிளை நதி அது. சிறிய தடுப்பணையை கடந்து நீள்வசத்தில் விழும் சிறிய நீர்வீழ்ச்சி போன்ற ரம்மியம். இளம் வெயில்… கண்ணாடி போல் தெளிந்த நீரோட்டம்… நம்மை கட்டிப் போட இயற்கைக்கு இது போதாதா..!

“சூப்பர இருக்குப்பா..! குளிக்கலாம்..!” என்றான் மகன்.

ஆற்று நீரில் குளிப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. குளித்து முடித்தப் பின் நாம் ஓய்வெடுப்பதாக இருந்தால் தாரளமாக குளிக்கலாம். இல்லையென்றால் குளிக்க கூடாது. நம்மைப் போல் நகரத்தில் வாழும் மக்களுக்கு குளியலறையில் தண்ணீரை கண்டும் காணாமல் குளித்தே பழக்கம்.

தீடீரென்று பெரும் நீரோட்டத்தில் குளித்து முடித்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டும். நீண்ட தூரம் வாகனம் ஓட்டும் போது இதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நம்மவூரு வண்டி – சின்னமனூர் 

எனது முடிவை என் மகனும் அரை மனதுடன் ஒத்துக்கொண்டான். அடுத்து சின்னமனூர் வந்தது. காலை உணவை அங்கு முடித்துக் கொண்டோம். இனி பாதையில் எந்த பெரிய ஊரும் வராது. மலையும், மலைக் கிராமங்களும்தான் வந்து போகும்.

மேகமலை அடிவாரம்
வனத்துறை செக் போஸ்ட்

இங்கிருந்து 29 கி.மீ. பயணித்தால் மேகமலை வந்துவிடும். மலையின் அடிவாரத்தில் வனத்துறை செக் போஸ்ட் வருகிறது. அந்த இடத்தின் பெயர் தென்பழனி. அங்கு ஒரு முருகன்கோயில் உள்ளது. கட்டுச்சோறு கட்டி வருபவர்கள் இங்கு அமர்ந்து சாப்பிட நல்ல இடம்.

தென்பழனி முருகன் கோயில்

அதனை கடந்ததும் மலைப் பாதைதான். மலை பாதையில் எங்கள் பயணம் தொடங்கியது. முதலில் ஒரு செக் போஸ்ட் வந்தது. இது எஸ்டேட்டுக்கு சொந்தமானது. வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் உண்டு. கார்களுக்கு 100, டூ வீலர்களுக்கு 50 என்று கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். யார் நிர்ணயித்தது? என்ற சந்தேகம் வந்தது. அதையே அவர்களிடம் கேட்டேன். உடனே இலவசமாக என்னை அனுமதித்து விட்டார்கள். இப்போது அந்த செக் போஸ்ட் எடுக்கப்பட்டுவிட்டது.

எஸ்டேட் செக் போஸ்ட், இப்போது இல்லை

செக் போஸ்டை கடந்து எங்கள் பயணம் தொடர்ந்தது. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றது. வளைவுக்கு அப்பால் பார்க்க முடியாது. அதனால் ஒவ்வொரு திருப்பத்திலும் கவனமாக திரும்ப வேண்டியிருந்தது.

எங்களை கடந்து சென்ற பஸ்

அப்படித்தான் ஒரு திருப்பத்தில் திரும்பிய போது ‘சடார்’ என்ற சத்தத்துடன் ஒரு மான் உயரத்திலிருந்து ரோட்டில் விழுந்து சரிவை நோக்கி ஓடி மறைந்தது. ஒரு எட்டடி முன்னால் வண்டி போயிருந்தால் அந்த மான் எங்கள் தலையில்தான் விழுந்திருக்கும். அப்படி நடந்திருந்தால்.. இப்படியொரு பதிவெழுத முடியாமல் போயிருக்கும்.

மனதுக்குள் லேசாக அச்சம் எட்டிப் பார்த்தது. ஆனாலும் தொடர்ந்து போய்க்கொண்டே இருந்தோம். மற்றொரு வளைவில் திரும்பிய எங்களை மகிழ்ச்சியில் நிறுத்தி வைத்தன சிங்கவால் குரங்குகள்.

ரோட்டை மறித்து வரிசையாக அமர்ந்திருந்தன குரங்குகள். இயற்கையின் அழகிய பின்னணியில் பார்க்கும் போது அது அம்சமாக இருந்தது. வண்டியை ஓரங்கட்டி, என்ஜினை ஆப் செய்து, கேமரா பேக்கோடு குரங்குகளை நோக்கி முன்னேறினேன்.

கேமரா பேக்கை திறக்கும் சத்தம் அந்த அமைதியான இடத்தில் பெரும் ஓசையாக கேட்டது. அதுவரை எங்களை பார்க்காமல் இருந்த குரங்குகள் அந்த சத்தம் கேட்டு நொடியில் ஓடி மறைந்தன. நல்ல படம் மிஸ் ஆகிப்போனது.

கொண்டைஊசி வளைவு 

மறுபடியும் எங்கள் பயணம் தொடர்ந்தது. இதுவரை நன்றாக இருந்த சாலை, இப்போது வேறு வடிவம் எடுத்திருந்தது. கற்கள் பெயர்ந்து சாலையின் மேல் துருத்திக்கொண்டு நின்றன. ஆங்காங்கே பள்ளம் வேறு. தார்ச்சாலை என்ற அடையாளத்தை அது முற்றிலுமாக இழந்திருந்தது.

செங்குத்தாக செல்லும் மேடான சாலையில் சரளைக்கற்கள் நிறைந்திருக்கும் பாதையில் பேலன்ஸ் செய்து வண்டி ஓட்டுவது சிரமமாக இருந்தது. மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருப்பது ஒருவித அச்சத்தை மனதில் தோற்றுவித்தது.

திடிரென்று சாலையில் யானையின் சாணம் குவியல் குவியலாக கிடந்தன. அதன் தன்மை சற்று நேரத்திற்கு முன்புதான் யானை அந்த பாதையில் நடந்து சென்றிருக்கிறது என்பதை உணர்த்தியது. அதுவும் ஒற்றை யானை.

காட்டில் சிங்கம் புலிகூட ஆபத்தான விலங்குகள் இல்லை. ஒற்றை யானை மிகவும் ஆபத்து நிறைந்தது. பேசாமல் திரும்பிவிடுவோமா..? என்ற கேள்வி எழுந்தது.

மகனோ விட்டபாடில்லை. “அப்பா! யானை எங்கேப்பா..? காணோம்..!” என்று ஆவலோடு கேட்டுக்கொண்டிருந்தான். அவன் நம்மூர் வீதிகளில் வலம் வரும் அமைதியான யானையைப் போலவே காட்டு யானையையும் நினைத்துக் கொண்டான்.

இது வனப் பகுதி என்பது தெரியும். ஆனால், கொடைக்கானல் போல் சாலையில் விலங்குகள் நடமாட்டம் இருக்காது என்று நம்பி மகனையும் கூட்டி வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று அப்போது புரிந்தது. சரி, யாரிடமாவது இதை பற்றி கேட்கலாம் என்றால் ஒரு மனித ஜாதியை கூட பார்க்க முடியவில்லை.

600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வனப் பிரதேசத்தை முதுமலை போல வன சரணாலயமாக மாற்றிட வேண்டும் என்ற கனவு வனத்துறைக்கு வெகு நாட்களாக இருந்தது. ஆனாலும் காலம் கை கூட வில்லை.

பசுமை பள்ளத்தாக்கு

அதற்குள் சுற்றுலாதுறை முந்திக்கொண்டு இந்த இடத்தை சுற்றுலா தலமாக அறிவித்துவிட்டது. 600 கிலோமீட்டர் வனப்பரப்பில் கிட்டத்தட்ட 200 சதுர கிலோமீட்டர் அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய் எஸ்டேட்டுக்கள் நிறைந்திருக்கின்றன.

முன்பு ‘ப்ரூக் பாண்ட்’ நிறுவனம் தேயிலை எஸ்டேட்டுகளை நிர்வகித்து வந்தது. இப்போது உட்பிரையர் குருப், ஆனந்தா பிளான்டேஷன், பொன்சிவா பிளான்டேஷன், பீல்டுமேட் எஸ்டேட் போன்ற நிறுவனங்கள் பொறுப்பில் இருக்கின்றன.

மழை நேரத்தில் வழுக்கும் மண் சாலை 

மேகமலை செல்லும் ரோடும் இவர்களுக்கு சொந்தமானது. ‘பரூக் பாண்ட்’ பொறுப்பில் மொத்த எஸ்டேட்டும் இருந்த போது அவர்கள் நன்றாக சாலையை பராமரித்திருக்கிறார்கள் . அதன் பின் 12 வருடமாக புதிதாக ரோடு போடவில்லை. அதனால்தான் ரோடுகள் ஜல்லிக்கற்களாக பெயர்ந்து குண்டும் குழியுமாக இருக்கின்றன.

இந்த மலைப் பாதை தனியாருக்கு சொந்தமானதல்ல. அது அரசுக்கு சொந்தமானது என்று கூறி எஸ்டேட் செக் போஸ்டை எடுக்க வைத்தவர் தேனி மாவட்டத்தின் அப்போதைய கலெக்டர் முத்துவீரன்தான்.

மேகமலை கிராமத்தில் சின்ன சர்ச்

ஒருவழியாக எங்களின் பைக் மேகமலை கிராமத்தை வந்தடைந்தது. இனி விலங்குகள் பயம் இல்லை என்று அங்கிருந்த ஒருவர் கூறினார். நான் எதிர்பார்த்தது போல் மேகமலை பெரிய ஊரக இல்லை. மிக சிறிய கிராமமாக இருந்தது. ஒரு சிறிய தேநீர் கடைதான் அதற்கான அடையாளமாக இருந்தது.

மேகமலை கிராமம்

நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தோம். இங்கிருந்து 12 கி.மீ. சென்றால் ஹைவேவீஸ் என்ற இடம் வருகிறது. இது ஒரு பேரூராட்சி. இங்கு ஹைவேவீஸ், கிளவுட் லேண்ட், மணலாறு என்ற மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

மேகமலை பஸ் ஸ்டாப்

இவற்றில் ஹைவேவீஸ் தான் பெரியது. இந்த இடத்தை ‘பச்சை கூமாச்சி’ என்று தமிழில் கூறுகிறார்கள். தமிழில் இதை சொன்னால் இங்கிருக்கும் யாருக்கும் தெரியாது. இந்த பெயருக்கு பசுமையான மலை என்று பொருள். தேயிலை தோட்டம்தான் இப்படி பசுமையாக காட்சி அளிக்கிறது.

மாரியம்மன் கோயில் மேகமலை

ஹைவேவீசில் இரண்டு அணைகள் உள்ளன. அவற்றை மேலணை மற்றும் கீழணை என்று அழைக்கிறார்கள். இது போக தூவாணம், மணலாறு, வெள்ளியாறு, இரவங்கலாறு என்று அடுத்தடுத்து நான்கு அணைகள் வருகின்றன.

சாலையோரத்தில் ஒரு மலர்

இதில் விசேஷம் என்னவென்றால், அணைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேற வழி கிடையாது. சுற்றிலும் மலைகள், அணைகள் இருப்பதோ பள்ளத்தில்.. இதனால் தண்ணீரை அடுத்த அணைக்கு கொண்டு செல்ல, மலையை குடைந்து அதில் குழாய்களை அமைத்திருக்கிறார்கள். இதில் 10 கி.மீ. தூரம் தண்ணீரை கொண்டு சென்று இரவங்கலாறு அணையில் சேர்த்திருப்பது, ஒரு சாதனை! இயற்கைக்கு சவால் விடும் சிக்கலான வேலை இது.

பசுமைப் போர்த்திய மலைகளும், வெண் பஞ்சு மேகங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒன்றையொன்று தழுவிக் கொள்கிற அட்டகாசமான இடம் மேகமலை. திரும்பிய பக்கமெல்லாம் பார்வையைப் பறித்துப் போகிற பச்சைத் தேயிலைத் தோட்டங்கள். அதற்கிடையே அடைந்து கிடக்கும் நீர்த்தேக்கங்கள், இவையெல்லாம் மனிதனின் காலடிப் பட்டு சிதைந்து போகாத இயற்கைக்குச் சொந்தமான காட்சிகள்.

சன்னாசி மொட்டை
இத்தனைக் காலம் தனியார் கைவசம் சிக்கியிருந்த இந்த அழகுப் பொக்கிஷ­த்தை எல்லோரும் ரசிக்கும் வண்ணம் 2009-ல் தமிழக அரசு திறந்துவிட்டது. அப்போது அறிவித்த புதிய சுற்றுலாத் தலங்களில் மேகமலையும் ஒன்று.

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 29 கி.மீ. பயணித்தால் வருகிறது மேகமலை கிராமம். மலைப்பாதையின் முதல் 30 கி.மீ. வனப்பகுதி அடுத்த 20 கி.மீ. தேயிலைத் தோட்டம். இந்த மலைப் பாதையில் பயணிக்க தனி ‘தில்’ வேண்டும். குண்டும் குழியுமாய் இருக்கும் இந்தப் பாதையில் ‘காஸ்ட்லி’யான காரில் பயணம் செய்தாலும் கட்டை வண்டியில் போகும் அனுபவத்தையே கொடுக்கும். பாதையின் பெரும்பகுதி வனப் பகுதிக்குள் வளைய வருவதால், விலங்குகளின் நடமாட்டம் ஆங்காங்கே இருக்கும்.

உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் பாதையில் புள்ளிமான் குறுக்கிட்டு மிரண்டு ஓடும். யானை மறியல் செய்து ‘சலாம்’ போடும். சிங்கவால் குரங்கு மரத்தில் தொங்கி சிரிக்கும். விலங்குகள் கட்டுப்பாடு இல்லாமல் அலைந்து திரிகிற வனப்பரப்பு இது. சிங்கத்தைத் தவிர எல்லா விலங்குகளுமே இங்கு ஜீவனம் செய்கின்றன.

கொண்டை குருவி
600 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த வனப்பிரதேசம் மேகமலை வனச் சரணாலயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதில் கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ அளவுக்கு தேயிலை, காபி, ஏலக்காய்த் தோட்டங்கள் பரவிக் கிடக்கின்றன.

மேகமலை வெறும் மலை வாசஸ்தலம் மட்டுமல்ல. இங்கு டிரக்கிங், அனிமல் சைட்டிங் போன்ற மற்ற அம்சங்களும் ஏராளம். விலங்குகளைப் பார்ப்பதற்கு வட்டப்பாறை, போதப்புல்மேடு, சன்னாசி மொட்டை என்கிற ‘எலிபேண்ட் காரிடர்’ ஆகியவைகள் சிறந்த இடம். போதப் புல்மேட்டில் வரையாடுகள் அதிகம். ஐயப்பன் கோயில் சீஸனில் குன்னிக்காடுகளில் உள்ள யானைகள் மேகமலைப் பகுதிக்கு வந்துவிடுவதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் இங்கு நிறைய யானைகளைப் பார்க்கலாம்.

தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள்
மலையேற நினைப்பவர்களுக்கு வசதியாக நிறைய டிரக்கிங் பாயிண்ட்டுகள் உள்ளன. ராஜபாளையம்-வெள்ளிமலை, ஸ்ரீவில்லி புத்தூர்-வெள்ளிமலை, மேகமலை-வெள்ளிமலை போன்ற 8 மணி நேர  மலையேற்றப் பாதைகளும், ஹைவேவீஸ்-வண்ணாத்திப்பாறை, இரவங்கலாறு-கிராஸ் ஹில் போன்ற 3 மணிநேர டிரெக்கிங்கும் உள்ளன. சாகஸப் பிரியர்களுக்கு இவையெல்லாம் சாதகமாய் உள்ளன.
மேகமலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் ஹைவேவீஸ் உள்ளது. தமிழில் இதை ‘பச்சைக் கூமாச்சி’ என்கிறார்கள். இதற்கு பசுமையான மலை என்று அர்த்தம். இங்கு இரண்டு அணைகள் உள்ளன. இதுபோக மேலும் மூன்று அணைகளும் சேர்த்து சிறிது சிறிதாக மொத்தம் ஐந்து அணைகள் மேகமலையில் உள்ளன.

அணைகளின் உள்ளே செல்ல அனுமதியில்லை என்றாலும், தொலைவில் இருந்து பார்ப்பதே தனி அழகுதான். இங்குதான் மேகங்கள் நம்மை தழுவிச் செல்கின்றன. தூவாணம் கவர்ச்சிமிக்க அழகுப் பிரதேசங்களில் ஒன்று.

இதனைக் கடந்து சற்று தொலைவில் இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. அது மிக அற்புதமானது.  மாதவிலக்கு நாட்களில் பெண்கள் இந்த நீரை அருந்தினால் வயிற்று வலி, தலை வலி, தலைச்சுற்றல் எல்லாம் பறந்தோடிவிடும் என்று இங்குள்ள மக்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.
தூவாணம் நீர்த்தேக்கம்
இரைச்சல் பாறையில் இருந்து வழியும் நீர்தான் அருவியாக கொட்டுகிறது.  இதுதான் சுருளியாறாகச் சென்று வைகை நதியில் கலக்கிறது.  மற்றொரு பகுதியில் விழும் அருவி நீர் தேக்கடி நீர்த்தேக்கத்துக்குப் போகிறது.  மேகமலையின் அழகுப் பிரதேசங்களில் இந்த அருவியும் ஒன்று. இதுபோக  ஹைவேவீஸ் டேம், பச்சைக் கூமாச்சி, தூவாணம் நீர்த்தேக்கம், மணலாறு பாலம், மணலாறு எஸ்டேட், மஹாராஜா மெட்டு, வட்டப்பாறை, போதப்புல் மேடு, கிராஸ் ஹில், சன்னாசி மொட்டை என்ற எல்லா இடங்களுமே அழகின் பொக்கிஷங்கள். இயற்கையை ரசிப்பவர்களுக்கு இனிய விருந்து.
மணலாறு பாலம்
விலங்குகளைப் பார்க்க விரும்புபவர்கள் முன்கூட்டியே தெரிவித்தால் அவர்களை வழிகாட்டி அழைத்துப்போக ஆட்கள் இங்கு இருக்கிறார்கள். பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கும் பிச்சைக்கு மலையின் ஒவ்வொரு அங்குலமும் அத்துப்படி. விலங்குகள் எதிர்பட்டால்  எப்படி தப்பிக்க வேண்டும்? என்ற நுட்பத்தையும், அவற்றை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அவைகளும் நம்மை ஒன்றும் செய்யாது என்றும், விலங்குகளின் மனநிலையை  கூறினார். சுற்றுலாப் பயணிகளை எல்லா இடங்களுக்கும்  அழைத்துச் சென்று விளக்கமுடன் சொல்கிறார்.
 பிச்சை
காடுகளுக்குள் காலாற நடக்க வேண்டும். வன விலங்குகளை ரசிக்க வேண்டும் என்பதற்காகவே சென்னையில் இருந்து வந்திருந்தது ஒரு புதுமண ஜோடி ஹரிஹரன்-லாவண்யா. 10 வகையான புதிய பறவைகளை இங்கு பார்த்தோம் என்கிறார்கள். காட்டுக்குள் நடந்து போவதும் டிரக்கிங் செய்வதும் பிடித்தமானது என்கிறார் ஐடியில் வேலைப் பார்க்கும் லாவண்யா.
லாவண்யா – ஹரிஹரன் தம்பதி
மூன்று வருடத்திற்கு முன்புவரை இங்கு தங்குவதற்கு பயணியர் விடுதியைத் தவிர வேறு இடம் எதுவும் இல்லை. இன்று சிவக்குமார் என்ற தனி நபரின் முயற்சியால் தகுதிக்கேற்ப தங்குமிடங்களை உருவாக்கியுள்ளார்.

மேகமலை அதிகம் பேர் வரும் சுற்றுலாத் தலமாக மாறியதில் இவரது பங்கு ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம். மேகமலை டாட் காம் மூலம் இதை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் இவரே. ‘டூரிஸம் ஃபார் டுமாரோ’ என்ற அமைப்பைத் தொடங்கி வருங்கால சந்ததியினருக்கு இயற்கையை மாசுப் படுத்தாத சுத்தமான சுற்றுலாத் தலங்களை விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறார்.

மகாராஜா மெட்டு
மேகமலைக்கு தற்போது ஒரேயயாரு பாதைதான் உள்ளது. இதில் பஸ்ஸோ லாரியோ பிரேக் டவுண் ஆகி பாதியில் நின்றுவிட்டால் பாதை அடைபட்டுப் போகும். இதை நிவர்த்தி செய்ய மேகமலையில் இருந்து லோயர் கேம்ப் வரை செல்லும் பாதையை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்கிறார் ஹைவேவீஸ் சேர்மன் சுரேஷ். இந்தப் பாதையை சரிசெய்வதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்க முடியும் என்கிறார்.

செயற்கைத்தனங்கள் நுழையாத இயற்கையை ரசிக்க விரும்புவர்களுக்கு மேகமலை மிக அற்புதமான பொக்கிஷம்!