Header Banner Advertisement

மைதா தோசை செய்முறை


001

print

ஐந்தே நிமிடங்களில் மாவு தயாரித்து, புதிதாய் சமைப்பவர்கள் கூட சுலபமாக செய்துவிடக் கூடிய எளிய தோசை.

தேவையான பொருள்கள்:

மைதா மாவு – 1 கப்
ரவை – 2 டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை

தாளிக்க – எண்ணெய், கடுகு, சீரகம், பச்சை மிளகாய்.

செய்முறை:

மைதா, ரவை, உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சாதாரண தோசைமாவை விட நீர்க்க, கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

(மைதா, ரவையை 30 செகண்ட் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கட்டிகளில்லாமல் கரைப்பது மிகச் சுலபம்.)

ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்துச் சேர்க்கவும்.

பொடியகா நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்க்கவும்.

அடுப்பில் தோசைக் கல்லைச் சூடாக்கி, நிதானமான சூட்டில் வைக்கவும்.

மாவை ஒரு கரண்டியால் எடுத்து கல்லின் விளிம்பிலிருந்து ஆரம்பித்து உள்வரை வட்டமாக ஊற்றிக்கொண்டே வரவும். (சாதாரணமாக தோசை வார்ப்பதுபோல் நடுவில் மாவை விட்டு கல்லில் வட்டமாக இந்த மாவைப் பரத்த முடியாது.)

சுற்றி சில துளிகள் மட்டும் எண்ணெய் விடவும். அதிக எண்ணெய் விட்டால் சொதசொதவென்று இந்த மாவு எண்ணெயைக் கக்கிவிடும்.

அரை நிமிடத்திலேயே அடிப்பாகம் வெந்து மேலெழுந்துவிடும். புதிதாக தோசை செய்பவர்கள்கூட சுலபமாக முழுதாகத் திருப்பிவிடலாம்.

அடுத்தப் பக்கமும் அரை நிமிடம் வேகவைக்கவும்.

மேலும் மொரமொரப்பாகத் தேவைப்பட்டால் இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு, இன்னும் சில நொடிகள் வைத்திருந்து எடுக்கலாம்.

தோசை தயாரித்துக் கொண்டிருக்கும்போதே மாவு கெட்டியாகிவிட்டால் அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நீர்க்க இருந்தால்தான் மெலிதாக சுவையாக வரும்.

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

இட்லி (தோசை) மிளகாய்ப் பொடி, தக்காளிச் சட்னி, சாம்பார், வெந்தயக் குழம்பு போன்ற குழம்பு வகைகள்…