
கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில் பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசுமாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது.
திண்ணையில் உட்கார்ந்திருந்தவரிடம் வந்து, “இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா? என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்… பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்…” என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.
அதனால்தான், சில பெரியவர்கள் மௌன விரதம் கடைப்பிடிப்பதுண்டு. இப்போது இளைஞர்களும் இதை உணர்ந்துள்ளனர்.! வீண் பேச்சு பேசினால்தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. அகம் ஒன்று வைத்துக் கொண்டு புறம் ஒன்று பேசுபவர்களை யும் ஒதுக்க இந்த மௌனம் சிறந்த வழி என்பதை அறிந்தவர்கள் நம்மிடம் கூறியது உண்டு.! இதனால் வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாக பேச வேண்டும்; ஆனால் சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது என்பதே நம்முடைய வேண்டுகோள். உங்களால் முடியுமா?