
உதயகுமார் ஒருபடி மேலே சென்று, பொய்ப்புகார்கள் கூறுகின்றவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்கிறார். எங்களுக்கும் வழக்குப்போடத் தெரியும் என்று அரசுத் தரப்பில் சவால் விடப்படுகிறது? இதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அமைச்சரவையைக் கூட்டி கூடங்குளம் அணுஉலை உடனடியாக செயல்படத் தொடங்க அனுமதி அளித்தது.
இதனால், கூடங்குளத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எப்போது என்ன நிகழும் என்று கூற முடியாத நிலை. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களாக செயல்படாமிருந்த அணுஉலைகள் தற்போது முழுவீச்சில் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் முடிவை எதிர்த்து உதயகுமாரும், போராட்டக்குழுவினர் சிலரும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி பரபரப்புக்கான சுப.உதயகுமார் யார்?
1989 ஆகஸ்டு முதல் 2001 ஜனவரி வரையில் அமெரிக்காவில் ‘சமாதான கல்வி’ யில் முதுகலை பட்டம், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றவர். தொடர்ந்து ஐ.சி.எப். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் எஸ்.பொன்மணி, தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.
உதயகுமாரின் மனைவி மீரா. இவர்களுக்கு சூர்யா, சத்யா என்ற இரு மகன்கள். நாகர்கோவில் அருகே பழவிளையில் சாக்கர் மெட்ரிக் பள்ளியை உதயகுமார் அதன் தாளாளராக இருந்து நடத்தி வருகிறார். (இந்த பள்ளியைத்தான் தற்போது சிலரால் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிறது.) இந்த பள்ளியின் முதல்வராக, மனைவி மீரா இருக்கிறார்.
பலமான குடும்ப பின்னணியும், ஆழமான கல்விப் புலமும் கொண்ட உதயகுமார் பொதுப் பிரச்சனைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நிகழ்வு கள் அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது.! குறிப்பாக கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தை அவர் கையில் எடுத்துதான் பிரபலமானார். (அது கிறிஸ்தவர்களின் போராட்டம் என்று பலர் கூறுகிறார்கள். இதுகுறித்து நாம் மற்றொரு கட்டுரையில் காணலாம்.)
இந்திய நிலமும், கடலும், இயற்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஜி.பி.ஐ.ஓ. (குரூப் ஃபார் பீஸ்புல் இன்டியன் ஓசன்) என்ற அமைப்பை என்னைப் போன்ற சமூக ஆவலுள்ள இளைஞர்களுடன் இணைந்து அப்போதே ஏற்படுத்தி னேன். மேலும் ஹவாய் தீவுப்பகுதியில் நான் ஆசிரியராக பணியாற்றியபோது நடந்த சம்பவங்களும் மிகப்பெரும் தூண்டுதலாக இருந்தது.
1988-ல் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை ஒய்.டேவிட் என்பவர் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போதே அதற்கு ஆதரவாகச் செயல்பட்டேன். 1998-ல் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த போது அணுஉலைக்கு எதிரான அமைப்பை குமரி மாவட்டத்தில் பீட்டர்தாஸ், மறைந்த அசுரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து தொடங்கி நடத்தினேன்.
அப்போதெல்லாம் கூடங்குளம் பகுதிக்குச் சென்றாலே மக்கள் எங்களை விரட்டுவார்கள். இந்த அனுபவம் பலமுறை ஏற்பட்டதுண்டு. காரணம், பேச்சிப்பாறை அணை நீரால் வளம் பெறும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருந்தனர். ஆனால் அப்போது எங்களது பேச்சு எடுபட வில்லை.
கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்பர். 2001-ல் நவம்பர் 1-ம் தேதி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வலுவாக தொடங்கப் பட்டது. இந்த அமைப்புதான் தற்போது கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று போராடி வருகிறது.