Header Banner Advertisement

யார் இந்த ஜெகத் கஸ்பர் ?


www.villangaseithi.com

print
விபசாரிக்கும் நியாயம் வேண்டும் என்றார் ஏசு பிரான். ஆனால், ஆ.ராசாவை ஊடகங்கள் வேட்டை நாய்களாக துறத்துகின்றன என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஜெகத் கஸ்பர். வார்த்தைகளை கோர்த்து மேடைகளில் விளையாடுவதில் ஜெகத் கஸ்பர் கைதேர்ந்தவர். அப்படிப்பட்ட இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்து எடுத்த போது கைகட்டி, விழிபிதுங்கி நின்றராம். ஆம், ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவருக்கும் தொடர்பிருக்கிறது என்று சி.பி.ஐ. கூடராத்தில் அள்ளிப் போடப்பட்டவர்களில் ஜெகத் கஸ்பரும் ஒருவர்.

ஓர் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த பாதிரியார் ஜெகத் கஸ்பரின் சொத்து மதிப்பு, இப்போது கோடிகளில் கொழிப்பதாக சொல்லப்படுகிறது! சில பல தன்னார்வக் குழுக்கள் என நிறுவனமயமாகி, தமிழகத்தின் புதிய அரசியல் அதிகார தரகர்களில் ஒருவராக உருமாறி இருக்கிறார். இவரின் கடந்த கால வரலாறு என்ன?

ஜெகத் கஸ்பார்
குமரி மாவட்டத்தின் கேரள எல்லையை ஒட்டிய காஞ்சாம்புரம் என்னும் கிராமத்தில் பிறந்த கஸ்பர் ராஜை, அவரது தாயார் ஒரு நேர்த்திக் கடனுக்காக பாதிரியார் படிப்புக்கு அனுப்பினாராம். அதற்கான படிப்பை முடித்ததும், முளகுமூடு என்னும் ஊரில் உதவிப் பங்குத் தந்தை பணி கிடைத்தது. மணலிக் குலுவிளை என்னும் ஊரில் வழிபாடு தொடர்பாக கிறிஸ்துவர்களுக்கும் இந்துக்களுக்கும் சிறு பிரச்னை ஏற்பட்ட போது, இவர் தலையிட்ட விதத்தால், பிரச்னை இன்னும் பெரிதாகி…ஊரே இரண்டு பட்டதாகச் சொல்வார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கோட்டாறு மறை மாவட்ட ஆயர், உடனடியாக ஜெகத் கஸ்பரை பங்கில் இருந்து தூக்கினார்.

பின்னர், சென்னை மயிலை மறை மாவட்டத்துக்குச் சொந்தமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தில் சேர்ந்தார். அதன் பின்னர், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருக்கிற வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக சேர்ந்தார். இதற்கெல்லாம் உதவியவர் வின்சென்ட் சின்னத்துரை.

உலகெங்கிலும் உள்ள மக்கள் போராட்டங்களை மனித உரிமை ரீதியாக ஆதரிக்கும் வெரித்தாஸ் வானொலியின் தமிழ்ப்பிரிவு, ஈழப் போராட்டங்களையும் ஆதரித்தது. ஏராளமான ஈழ மக்கள், வெரித்தாஸ் வானொலிக்கு கடிதம் எழுதுவார்கள். அதை வைத்து ‘உறவுப் பாலம்’ என்ற ஒரு நிகழ்ச்சியை கஸ்பர் நடத்தினார். இதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் நடுவில் அறிமுகம் ஆனார்.

1995 ஆம் ஆண்டு வன்னிக்கு சென்று பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ்க்குப் போன கஸ்பர், ‘அகதிகளுக்கு உதவுவோம்’ என்னும் பெயரில் ப்ராஜெக்ட்டுகளைத் தயாரித்தார். மக்களுக்கு உதவினால் சரி என்று புலிகளும் கண்டு கொள்ளவில்லை. உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழ் அனுதாபிகளிடம் இருந்து பணம் ஏராளமாக வந்தது. இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு மணிலாவுக்குத் திரும்பும் வழியில், நான் கொண்டுவந்த பணத்தை, பிரான்ஸ் விமான நிலையத்தில் தொலைத்து விட்டேன் என்று ஜெகத் சொன்னபோது பெரும் அதிர்ச்சி அலை கிளம்பியது. இதைத் தொடர்ந்து கஸ்பரை புலிகள் ஒதுக்க தொடங்கினர். இந்த நிலையில் வெரித்தாஸ் வானொலியிலும் இவருக்கு தடங்கல். இதற்கு அரசல் புரசலாகப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதற்கடுத்து, பெட்டிகளுடன் சென்னையில் வந்து இறங்கினார் கஸ்பர். அதிரடியாக குட்வில் கம்யூனிகேஷன்ஸ், நாம், தமிழ் மையம், கிவ் லைஃப் என்று நான்கு அமைப்புகளைத் தொடங்கினார். புலிகள் ஆதரவு என்பதை வைத்து வைகோவுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். இவர் இளையராஜாவின் திருவாசகம் வெளியிட்டு தன்னை தமிழகத்தில் ஒரு முக்கியமானப் பிரமுகராகக் காட்டிக் கொண்டார். அதோடு மட்டுமில்லாமல் ஈழத் தமிழ்ப் பிரச்னையை மையமாக கொண்டு பிரபல வாரமிருமுறை இதழில் தொடர் கட்டுரைகளை எழுதி தன்னை பிரபல எழுத்தாளராகவும் காட்டிக் கொண்டார்.

இதையெல்லாம் தக்கவைத்துக் கொள்ள ஆளுங்கட்சியின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்த ஜெகத் கஸ்பர் கட்சிகளின் செல்வாக்கை பிடிக்க படாத பாடு பட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் தி.மு.க.வின் ஆதரவை பிடிப்தில் காட்டிய ஆர்வம் இருக்கிறதே…? ஒருவழியாக கனிமொழியின் நட்பை பிடித்தார். அதற்குப் பிறகு இவரின் ராஜலீலைகள் தொடர ஆரம்பித்தன.

பின்னர் கனிமொழியோடு சேர்ந்து சென்னை மராத்தான், சங்கமம் நிகழ்ச்சி போன்றவற்றை நடத்திப் பணத்தை குவித்தார். புலிகளை ஆதரிப்பது போல் பாவனை காட்டுவது… புலி ஆதரவாளர்களாக இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றவர்களை எதிர்ப்பது என கஸ்பரின் காரியக்கார அரசியல் குழப்பங்களுக்கு அளவே இல்லை.

பலவிதமான சர்ச்சைகளில் தொடர்ந்து அடிப்பட்ட இவரைப் பார்த்து, சென்னை மயிலை பேராயர் ஜெகத்தை இடத்தை காலி பண்ணும் படி சொல்ல ‘நான் யார் தெரியுமா?’ என்று பிஷபுக்கு ரூபம் காட்டியதைப் பார்த்து திருச்சபையே மிரண்டுதான் போனது. இதற்கொல்லாம் பதில் சொல்வதோடு மட்டுமில்லாமல், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் வாயைத் திறக்க வேண்டும் என்பதால், ஜெகத் கஸ்பர் மிகவும் விரக்தியில் இருக்கிறராம். இவரை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து தி.மு.க. யோசித்து கொண்டிருக்கிறது குழப்பத்தோடு!