Header Banner Advertisement

ரசிக்க சில ரயில் நிலையங்கள்


Chatrapati-Shivaji-Terminus

print
ரயிலில் பயணம் செய்வதே ஒரு அலாதியான அனுபவம். ரசனைமிக்க இந்த அனுபவம் ரயில் பயணத்தில் மட்டுமல்ல, அவை நின்று செல்லும் ரயில் நிலையங்களிலும் உண்டு. அதிலும் சில ரயில் நிலையங்கள் ரசிக்கத்தக்க கட்டடக்கலையில் மிளிர்கின்றன. பாரம்பரியம், பிரமாண்டம், நவீனம் என்ற மூன்று வகையிலும் முதன்மையாக விளங்கும் இந்த ரயில் நிலையங்கள் சுற்றுலாவிலும் சிறந்து விளங்குகின்றன.

பாரம்பரியம்

பாரம்பாரியத்தில் இந்தியாவை அடித்துக் கொள்ளமுடியாது. உலகில் பல நாடுகளை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும், இயற்கை வளம் நிறைந்த இந்தியாவிற்கு எல்லாமே விரைவாக கிடைத்தன. அப்படி கிடைத்தவற்றில் ரயில்வேயும் ஒன்று.

சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்
அவர்கள் உருவாக்கிய இந்திய ரயில் நிலையம் ஒன்று யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பெயர் ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்’. இது மும்பை ரயில் நிலையத்தின் பெயர். 1887-ல் கோத்திக் மற்றும் மொஹல் கட்டடக்கலையை இணைந்து உருவாக்கிய அழகின் உச்சம் இது. பெடரிக் வில்லியம் ஸ்டீபன் என்பவர்தான் இந்த பொக்கிஷத்தை வடிவமைத்தவர்.
முதலில் விக்டோரியா டெர்மினல் என்று பிரிட்டிஷ் மகாராணியின் பெயரைத்தான் வைத்தார்கள். 1996 வரை அதே பெயர்தான் நீடித்தது. அதன்பின்தான் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை இதற்கு வைத்தார்கள்.
இந்தியாவின் மிக பிஸியான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. 18 நடைமேடைகளை கொண்ட நிலையம். மும்பைக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை ரசிக்காமல் திரும்புவதில்லை.
பிரமாண்டம் 
‘கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்’
இந்தியாவிற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் என்றால், அமெரிக்காவிற்கு ‘கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்’ தான். நியூயார்க்கின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்று இந்த சுரங்க ரயில் நிலையம். அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது.
வருடத்திற்கு 2.6 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்தின் மூலம் பயணிக்கிறார்கள். உலகத்திலேயே அதிகமான பிளாட்பாரங்கள் கொண்ட ரயில் நிலையமும் இதுதான். மொத்தம் 44 பிளாட்பாரங்கள். அமெரிக்க சுற்றுலா பட்டியலில் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் முதன்மையாக இருக்கிறது.

நவீனம்
நவீனத்தின் உச்சம் என்று சொன்னால் அது பெல்ஜியம் நாட்டில் உள்ள ‘லீஜ்-கெலமைன்ஸ்’ரயில் நிலையம்தான். உலகில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் விக்டோரியா காலத்திலும் எட்வர்ட் ஆட்சியிலும் கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன.
‘லீஜ்-கெலமைன்ஸ்’ ரயில் நிலையம்
நவீன ரயில் நிலையங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் நம் கண் முன் வந்து நிற்பது லீஜ்-கெலமைன்ஸ் தான். 2009-ல் திறக்கப்பட்ட இந்த நிலையம் அதற்குள் உலக சுற்றுலா பயணிகளின் செல்லமாக மாறி இருக்கிறது.
ஸ்டீல், கண்ணாடி, வெள்ளை காங்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட 105 அடி உயர எலிவேஷன், அனைவரையும் வசீகரித்து இழுக்கிறது. பெல்ஜியத்தின் நம்பர் ஒன் சுற்றுலா மையமாக இது திகழ்கிறது.
ஸ்டீல் கண்ணாடி கூரை 
படங்கள்: கூகுள் இமேஜ்