
ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 03-08-2012 அன்று நடைபெற்ற 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் 30 புள்ளிகளைப் பெற்று விஜய்குமார் இந்த சாதனையை நிகழ்த்தினார். 112 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த 22 ஆவது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் கியூபாவின் லியூரிஸ் பபோ 34 புள்ளிகளுடன் தங்க பதக்கத்தையும், சீனாவின் டிங் ஃபென் 27 புள்ளிகளுடன் வெணகலப் பதக்கமும் வென்றனர்.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். முன்னதாக 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ககன் நரங் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியி லேயே பதக்கம் வென்றுள்ளார் விஜய் குமார். பெரிய அளவில் இவர் மீது எதிர்பார்ப்பு இல்லை யென்றாலும் சிறப்பாக விளையாடி வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்துள்ளார். 2010 தில்லி காமன்வெல்த் போட்டியில் விஜய்குமார் மூன்று தங்கமும், ஒரு வெள்ளியும் வென்றுள்ளார்.
26 வயதான விஜய்குமார் இமாச்சல பிரதேசம் ஹமிர்புர் மாவட்டத்தில் உள்ள ஹர்சோர் கிராமத்தை சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் பணியாற்றும் விஜய் குமார், 2 ஆம் நிலை அதிகாரி அந்தஸ்தான சுபேதாராக உள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியாவுக்கு துப்பாக்கிச்சுடுதலில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளியும், 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் அபிநவ் பிந்த்ரா தங்கமும் வென்றிருந்தனர். தற்போது லண்டன் ஒலிம்பிக்கில் ககன்நரங் வெண்கலமும், விஜய்குமார் வெள்ளியும் வென்றுள்ளனர்.