
அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கூறப்படும் ஊழல், பாரபட்சம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஒரு அமைப்புதான், லோக்பால். ஊழலில் ஈடுபடுவோர் மீது, பொதுமக்கள், லோக்பாலிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இதன் அடிப்படையில், ஊழல் புகார் கூறப்பட்டவர்கள் மீதான விசராணை, ஒரு ஆண்டுக்குள் முடிக்கப்படும். அடுத்த ஒரு ஆண்டில், வழக்கு விசாரணை முடிவடையும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழல் பெருச்சாளி, புகார் கொடுக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள், சிறைக்குள் அனுப்பப்படுவார். லோக்பாலின் அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் மசோதா சட்டம்.
ஜன்லோக்பால் என்றால் என்ன?
அரசு தயாரித்த லோக்பால் மசோதாவில் ஓட்டைகள் இருப்பதாக கூறி, ஊழலை ஒழிக்கும், முழுமையான மசோதாவாக தயாரிக்கப்பட்டதுதான், ஜன்லோக்பால் மசோதா. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு அதிகாரிகள் என ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இந்த சட்ட மசோதாவின் கீழ் விசாரிக்க முடியும். ஜன் என்ற வார்த்தைக்கு பொது மக்கள் என்று அர்த்தம். இந்த மசோதாவை நிறைவேற்றதான், ஹசாரே உண்ணாநிலையில் ஈடுபட்டார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபரால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து, அந்த இழப்புக்கான நஷ்ட ஈடு பெறலாம் என்பதும் இந்த சட்டத்தில் உள்ள அம்சமாகும்.