Header Banner Advertisement

வந்தாச்சு.. 9.2 ஹோம் தியேட்டர்


z11roomdiag

print

ஹாலிடேயை ஜாலிடே ஆக்கும் சமாச்சரங்களில் ஒன்று மியூஸிக்! அதிலும் வீட்டில் ஹோம் தியேட்டர் ஒன்று இருந்துவிட்டால், ஜாலிக்கு கேட்கவே வேண்டாம்.

ஹோம் தியேட்டர்ப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நாம் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தாக வேண்டும்.

ஆரம்பத்தில் சினிமாவில் ‘ஆடியோ டிராக்’ என்பது ‘மோனோ’வாகவே இருந்தது. அந்த ஒரு டிராக்கில் தான் வசனம், பாடல், இசை என்று எல்லாமே பதிவாகி இருக்கும். திரைக்குப் பின்னால் இருக்கும் ஒரே ஸ்பீக்கரில்தான் இவை அத்தனையும் கேக்கும்.

‘மோனோ’வில் உள்ள குறை இசையின் நுண்ணிய ஒலிகளை அது விழுங்கிவிடுவதுதான்.

70-களின் தொடக்கத்தில் ஆடியோவில் ஒரு புரட்சி ஏற்பட்டது. அதுதான் ‘ஸ்டீரியோ’! ஒரே டிராக்காக இருந்த ஆடியோவை வலது, இடது என இரண்டு டிராக்காகப் பிரித்தார்கள்.

சில இசை கருவிகளை வலது டிராக்கிலும், சிலவற்றை இடது டிராக்கிலும் பதிவு செய்தார்கள். இது இசை கேட்பதில் ஒரு சுகமான அனுபவத்தை ஏற்படுத்தி தந்தது.

‘ஷோலே’ முதல் ஸ்டீரியோ திரைப்படம்
ஸ்டீரியோவில் இந்தியாவில் வெளிவந்த முதல் படம் ‘ஷோலே’! தமிழில் ‘ப்ரியா’! அப்போதெல்லாம் இந்திய ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஸ்டீரியோ ஒலிப்பதிவு கிடையாது.

ஸ்டீரியோவில் ஒரு படம் பண்ண வேண்டும் என்றால், வாத்தியங்களைத் தூக்கிக்கொண்டு லண்டனுக்கு ஓடவேண்டும். மேலும், அன்றைய இசையமைப்பாளர்கள் ஸ்டீரியோ ஒலிப்பதிவில் பெரிய அளவில் நிபுணத்துவம் பெறவில்லை.

அதனால், ஸ்டீரியோ முறை சினிமாவில் அவ்வளவாக பிரபலமாகவில்லை. 70 எம்.எம்.-ல் எடுக்கப்படும் அரிதான சில படங்கள் மட்டுமே ஸ்டீரியோவில் வந்தன. ஆனால், காலப்போக்கில் இசைத்தட்டுக்களில் பதிவு செய்யப்படும் சினிமா பாடல்கள் எல்லாமே ஸ்டீரியோவில் பதிவு செய்யப்பட்டன.

‘வாக்மேன்’ அறிமுகமான பின் ஸ்டீரியோ முறைக்கு மவுசு கூடியது. ஹெட்போன் மூலம் கேட்பது இசையில் ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. அதன்பின் இசைப் பதிவு முறையில் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை.

இப்படி மந்தமாகப் போய்க்கொண்டிருந்த சினிமா ஆடியோவில் மறுமலர்ச்சி ஏற்பட்டது, 90-களின் தொடக்கத்தில் தான். அமெரிக்காவில் இருக்கும் ‘டால்பி லேபரட்டரி’ ஆடியோவை 5 டிராக்குகளாக பிரிக்கும் முறையை கண்டுபிடித்தது.
‘ஸ்பீட்’ டால்பி சிஸ்டத்தில் வந்த முதல் படம்
முதன் முதலில் ‘ஸ்பீட்’ என்ற ஹாலிவுட் படம் டால்பி சிஸ்டத்தில் வெளிவந்தது. தமிழில் கமலஹாசன் நடித்த ‘குருதிப்புனல்’ வந்தது.
டால்பி தொழில்நுட்பத்தில் ஒரு சில சின்ன மாற்றங்களை செய்து அடுத்த வருடமே டி.டி.எஸ். என்ற ‘டிஜிட்டல் தியேட்டர் சரவுண்ட் சிஸ்டம்’ முறை அறிமுகமானது.
டி.டி.எஸ். முறையில் வெளிவந்த முதல் படம்
இந்த தொழில் நுட்பத்தில் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜுரஸிக் பார்க்’ தான் முதல் படமாக வெளிவந்தது. தமிழில் ‘கருப்பு ரோஜா’. இந்த படம் சரியாக ஓடாததால் இரண்டாவதாக வந்த ‘இந்தியன்’ படமே டி.டி.எஸ். பெருமையை எல்லோரும் அறியச் செய்தது. இந்த படம்தான் பல தியேட்டர்களை டி.டி.எஸ். சிஸ்டத்துக்கு மாற வைத்தது.

அப்போது சாட்டிலைட் சேனல்கள் வீட்டின் வரவேற்பறையில் புகுந்து எல்லோரையும் டி.வி.யின் முன்னே முடக்கிப் போட்டிருந்த காலம்.

முடங்கிப் போயிருந்த மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு கொண்டு வருவதற்கு, இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் அவசியத் தேவையாக இருந்தன. தொழில்நுட்பங்கள் ரசிகர்களுக்கு கொடுத்த திருப்தியில் சினிமாக்காரர்களின் பணப்பை நிரம்பியது.

 ‘ஆன்க்யோ’ ஹோம் தியேட்டர்
சினிமா தியேட்டர்களில் மட்டும் குடி கொண்டிருந்த இந்த ஆடியோ அதிசயத்தை வீட்டுக்கு கொண்டுவந்தது, ‘ஆன்க்யோ’ என்ற ஜப்பான் நிறுவனம். இன்றைக்கும் ஹோம் தியேட்டர் தயாரிப்பில் இதுதான் முன்னணி நிறுவனம். வீட்டுக்குள் வந்த இந்த அதிசயம், வந்த வேகத்திலேயே விற்பனையில் சூடு பிடித்தது.

தியேட்டரில் சென்று கூட்டத்தின் இடையே சிக்கிக்கொள்ளாமல், விசில் சத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியாக படத்தை தியேட்டரின் தரத்துடன் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஹோம் தியேட்டர் வரப்பிரசாதமாக அமைந்தது.

மோனோவிலும் ஸ்டீரியோவிலும் இசையைக் கேட்டுகொண்டிருந்தவர்களுக்கு 5.1 ஹோம் தியேட்டர்கள் புதிய இசை அனுபவத்தை தந்தன.

அது என்ன 5.1..?!

ஒரு இசையை ஐந்து டிராக்குகளாகப் பிரித்து பதிவு செய்யும் முறை. சென்டர், ஃப்ரண்ட் ரைட், ஃப்ரண்ட் லெஃப்ட், சரவுண்ட் ரைட், சரவுண்ட் லெஃப்ட் இதுதான் அந்த ஐந்து டிராக்குகளின் அமைப்பு.

இதில் சென்டர் என்பது டி.வி.க்கு பின்னால் இருக்கும் ஸ்பீக்கரை (டிராக்) குறிக்கும். இதில் வெறும் வாய்ஸ் மட்டுமே பதிவாகி இருக்கும். டி.வி.க்கு இருபக்கமும் சிறிது தூரத்தில் ஃப்ரண்ட் ரைட், ஃப்ரண்ட் லெஃப்ட் ஸ்பீக்கர்கள் (டிராக்குகள்) இருக்கும் இதில் இசை பதிவாகி இருக்கும். திரையின் இடது பக்கம் நடக்கும் காட்சிகளின் சிறப்பு சப்தங்கள் இடது டிராக்கிலும் வலது பக்கம் நடப்பது வலது டிராக்கிலும் பதிவு செய்திருப்பார்கள்.

இது படம் பார்ப்பவர்களை காட்சியோடு அப்படியே ஒன்றவைக்கும்.

‘சரவுண்ட் ரைட், லெஃப்ட்’ என்பது நாம் உட்காந்திருக்கும் இடத்திற்கு இடது பக்கமும் வலது பக்கமும் அமைத்திருக்கும் ஸ்பீக்கர்களை (ட்ரக்குகள்) குறிக்கும். கூட்டத்தின் நடுவே சிக்கிகொள்வது, டிராஃபிக்கில் மாட்டிக்கொள்வது, சண்டை காட்சிகள் போன்றவற்றில் இந்த டிராக்குகள் இயங்கும் மற்ற நேரங்களில் அமைதியாக இருக்கும். இதனால் டிராஃபிக்கில் ஹீரோயின் மாட்டிக்கொண்டால் நாம் டிராஃபிக்கில் இருப்பது போன்ற உணர்வை உண்டாகும்.இப்படியாக 5 டிராக்குகள் வேலை செய்கின்றன.

அது என்ன .1 (பாயிண்ட் ஒன்)…?

அந்த ஒரு டிராக்கில் வெறும் ‘லோ ஃப்ரிகுவேன்ஸி’ ஒலிகளை மட்டுமே கொடுத்திருப்பார்கள்.

இதுதான் பேஸ் ஒலிகளை துல்லியமாகக் கொடுத்து தியேட்டர் அனுபவத்தை நமக்கு கொடப்பது. இது அரைகுறையான டிராக் என்பதால் இதை முழுமையான டிராக்காக கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால்தான் பாயிண்ட் ஒன் என்று வைத்து விட்டார்கள்.

மற்ற டிராக் ஸ்பீக்கர்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்ற வரைமுறை உண்டு. ஆனால் பாயிண்ட் ஒன் என்று அழைக்கபடுகிற சப்- ஊஃபார்களுக்கு மட்டும் இந்த வரைமுறை எல்லாம் கிடையாது. அறையில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளாம்.

இந்த 5.1 இசை சரவுண்ட் அனுபவத்தை தந்தாலும் நமக்கு பின்னால் இருக்கும் பகுதி இசையால் சூழப்படாமல் வெற்றிடமாக இருப்பதாய் உணர்ந்தார்கள், இசை ஆர்வலர்கள். அதையும் சரி செய்வதற்காக பின்னால் மையமாக ஒரு டிராக்கை அமைத்தார்கள்.

இதை ‘ரியர் சென்டர்’ என்றழைத்தார்கள். இதற்கு ‘6.1 டால்பி – ஈ எக்ஸ்’ என்றும் ‘6.1 டி.டி.எஸ் – ஈ எஸ்’ என்றும் பெயரிட்டார்கள். இதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று இந்த கண்டுபிடிப்பாளர்கள் அமைதியாக இருந்துவிட்டனர்.

ஆனால் மனிதனின் இசைஆர்வம் அமைதியாக இல்லை. அந்த ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக ‘லூகாஸ்’ என்ற பிலிம் கம்பெனி ‘டி. ஹெச்.எக்ஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர். அதன்படி ‘ரியர் சென்டர்’ டிராக்கோடு நின்று போயிருந்த ஹோம் தியேட்டரில் ரியர் டிராக்கை இரண்டாகப்பிரித்து ‘ரியர் லெஃப்ட்’, ‘ரியர் ரைட்’ என்று அறிமுகபடுத்தினார்கள். 7.1 ஹோம் தியேட்டரை அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் தான்.

சிலர் பேஸ் ஒலிகளை மிகவும் விரும்பி கேட்பார்கள்.அவர்களுக்கு ஒரு சப் ஊஃபர் மட்டும் போதுமானதாக இருப்பது இல்லை.அதனால் இரண்டு சப் ஊஃபர் வைக்கும் விதமாக ஒரு டிராக்கை உருவாக்கினார்கள். அதுதான் 7.2 ஹோம் தியேட்டர்.

இதோடு நிறுத்திக் கொள்ளலாமா என்று நினைத்தவர்களுக்கு மேலே வெற்றிடமாகதானே இருக்கிறது. அங்கும் டிராக்குகளை வைத்தால் என்ன என்று யோசித்தார்கள்….விளைவு ரியர் லெஃப்ட், ரைட் ஸ்பீக்கர்களுக்கு மேலே சற்று உயரத்தில் சீலிங்கை தொட்டபடி ‘ரியர் அப்பர்-லெஃப்ட்’, ‘ரியர் அப்பர்- ரைட்’ என்று இரண்டு டிராக்குகளை புதிதாக சேர்த்து விட்டார்கள்.இப்போதைக்கு கடைசியாக இருப்பது 9.2 ஹோம் தியேட்டர் தான்.

இன்னும் என்னென்ன வரப்போகிறது என்று விஞ்ஞானத்துக்கே வெளிச்சம்!

ஆனால் இந்த ஹோம் தியேட்டர்களை எல்லாம் ஒரிஜினல் சாஃப்ட்வேர் உபயோகித்து அதற்குரிய நிறுவனம் சான்றிதழ் அளித்திருந்தால் தான் கேட்பதற்கு நன்றாக இருக்கும். இப்படி சான்றிதழ் பெற்று ஒரிஜினல் சாஃப்ட்வேரோடு கிடைக்கும் 5.1 ஹோம் தியேட்டர்களின் குறைந்தபட்ச விலை ரூ.25,000. இதுவே 7.1 என்றால் 75,000. 9.2 ஹோம் தியேட்டரின் ஆரம்ப விலை 2 லட்சம். அதிகபட்ச விலைக்கு எல்லையே இல்லை. ஏனென்றால் ஒரு ஸ்பீக்கரின் விலையே ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்ற அளவில் இருக்கிறது.

பொதுவாக, ஹோம் தியேட்டர்களின் ஆம்பளிபையர்களை ரிசீவர்கள் என்றே சொல்கிறார்கள். இந்த ரிசீவரில் ஆடியோ-வீடியோ இன்-புட் கொடுத்து அவுட்-புட் எடுத்தால் ஒலி ஒளியின் தரம் கூடுகிறது. வீடியோவிலும் சரி ஆடியோவிலும் சரி ஒரு குறிப்பிட்ட அளவு ‘நாய்ஸ்’ என்பது உள்ளே புகுந்துவிடும். இது வீடியோவில் புள்ளிகளையும், ஆடியோவில் இரைச்சலையும் ஏற்படுத்தும். இதை பில்டர் செய்து தரமான துல்லியமான ஒலி ஒளிகளை அனுப்பும் வேலையை இந்த ஹோம் தியேட்டர் ரிசீவர்கள் செய்வது கூடுதல் நன்மை.

இப்படி எல்லாமே தரமாக அமைந்தால் சலிக்காத ஓர் இசைப் பயணத்தை நாம் பெறலாம்.