
உண்மையில் உடலில் சுவாசப்பை மற்றும் உணவுப்பாதை என்ற இந்த இரண்டிலும்தான் காற்று இருக்கிறது. இதைத்தவிர உடலில் வேறெங்கும் எந்த பாகத்துக்கும் காற்று போகாது. போகவும் முடியாது. அப்படியே ஒருவேளை போவதாக வைத்துக்கொண்டாலும் உணவுப்பாதையை மீறி ஓட்டைப் போட்டுக்கொண்டு போவதெல்லாம் சாத்தியமில்லாதது.
ஒருசில செயல்களால் இந்த வாயு உடலின் வேறு இடத்துக்குப் போக வாய்ப்பிருக்கிறது. அது மரணத்திலும் கூட முடியலாம். இது போன்ற நிலை எப்போது ஏற்படும் என்றால் துப்பாக்கி குண்டடிப்படுவதன் மூலம் மட்டுமே உண்டாகும். மற்றப்படி ஆரோக்கியமான உடலில் வாயுப்பிடிப்பு என்பதெல்லாம் அறியாமையே!
வாயு பற்றி நமக்கிருக்கும் அறிவு மிக மிகக் குறைவே! அதனால்தான் தலைவலி, கைகால் சுளுக்கு என்று எந்த தொந்தரவு ஏற்பட்டாலும் அதை வாயு மீது தூக்கிப் போட்டுவிடுகிறோம். நமது மூச்சு நேராக சுவாசப்பைக்கு போகிறது. அதுவொரு தனிப்பாதை. அதற்கும் வயிற்றுக்கும் நேரடி தொடர்பு இல்லை.
அப்படியென்றால் உணவுப் பாதைக்குள் காற்று எப்படி வருகிறது? இதற்கு இரண்டு காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒன்று நாம் சாப்பிடும்போதே உணவோடு சேர்த்து காற்றும் உணவுப் பாதைக்குள் சென்றுவிடும். இரண்டாவது காரணம், இரைப்பைக்குள் போய்விழும் உணவை அமிலங்கள் தாக்கும்போது அங்கு பல ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்து ஹைட்ரஜென், சல்பைட், மீத்தேன், கரியமில வாயு போன்ற வாயுக்களை உண்டாக்குகின்றன.
இப்படி உருவான வாயுக்கள் இரைப்பையைக் கடந்து சிறுகுடல், பெருங்குடல் வழியாக ஆசன வாய் வழியாக வெளியேறுகிறது. இது பொது இடங்களில் வெளியேறும் போதுதான் எல்லோருக்கும் சங்கடம். மற்றபடி இதை தனிமனித முயற்சியில், நினைத்தபோது வெளியேற்றவோ, வெளியேறும்போது வாயுவை தடுக்கவோ முடியாது.
பொதுவாக அடிக்கடி வாயு வெளியேறுகிறதா..? அதுவும் சத்தத்துடன் வெளிவருகிறதா..? தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய தொடங்குங்கள்! ஒரு மாதத்தில் வாயு தொல்லையே இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். பின்புறக் காற்றைப் பற்றி அதன்பின் கவலைப்பட வேண்டியதில்லை!