Header Banner Advertisement

வரலாற்றை மறைத்தும் வாழ வேண்டுமா ?


www.villangaseithi.com

print

இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் பல மொழி இனங்களுள் தமிழினமே தொன்மை வரலாற்றுச் சிறப்பும் உயர்தனிச் செம்மொழியும் கொண்டுள்ளது. தமிழோடு உறழ் தரக்கூடிய ஆரியம் உலக வழக்கு அற்றதொன்றாயிருத்தலின் அதுபற்றி இங்கு ஆராய்ச்சியின்று.

அது தவிர்த்த ஏனைய மொழிகள் எல்லாம் எல்லாவகையினும் தமிழுக்குப் பிற்பட்டனவே. இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத் தக்கது தமிழேயாகும். ஆயினும் இவ்வுண்மையைப் பலர் இன்னும் அறிந்திலர். கற்றவர்கள் என்று கருதப்படுவோருள் பலர் தமிழ்மொழி தமிழ்நாடு பற்றிய உண்மை வரலாறுகளை அறியாதவர்களாகவேயுள்ளனர்.

அவர்கள் அங்ஙனம் அறியாம லிருப்பது அவர்கள் பிழையன்று. அவர்கள் கற்ற நூல்கள் தமிழகத்தின் உண்மை வரலாற்றை உரைத்தில. இப்பொழுதுதான் தமிழகத்தின் உண்மை வரலாறு பொய்ம்மை இருட் படலம் கிழித்து செவ்விள ஞாயிறு போல் வெளிப்படத் தொடங்கியுள்ளது.
உண்மை வரலாற்றை அறிவதில் ஆர்வம் தலைப்பட்டுள்ள இன்றைய நாளில் தேசிய ஒருமைப்பாடு எனும் காரணம் காட்டித் தமிழக உண்மை வரலாற்றைத் தமிழர்களே அறியாதவாறு செய்ய முற்படுகின்றனர் சிலர். மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள தலையாய வேறுபாடுகளில் ஒன்று தம் பழம் வரலாற்றை அறிதலேயாகும்.நாகரிகத்தால் சிறந்து பண்பாட்டால் உயர்ந்துள்ள மக்களுக்கே பழைய வரலாறுகளை அறியும் வாய்ப்பும் வசதியும் இருக்கக் காணலாம்.

தமிழர்கட்கு வரலாற்றுத் தொன்மை உண்டு. ஆகவே அவர்கள் தம் வரலாற்றை அறிவதில் ஆர்வம் காட்டுவதில் தவறென்ன? தமக்கென வரலாற்றுச் சிறப்புடையோரைக் கண்டு பொறாமைப்படுவதிலும் அப்பொறாமையால் அவ் வரலாற்றை மறைக்க முயல்வதினும் பொருள் உண்டு. ஆனால் வரலாற்றுக்குரியோரே வரலாற்றைப் படிக்காதே; படித்தால் உன் நாட்டின் மீது மிகுந்த பற்று வந்துவிடும்; அப்பற்றால் ஒற்றுமைக்கு ஊறு உண்டாகும் என்று கூறுவதை என்னென்பது?

உண்மை வரலாறு தெரிய வேண்டா என்றால் கல்வி கற்பது எற்றுக்கு? கல்வித் துறையும் கல்வி அமைச்சரும் வேண்டாவே.
நம் வரலாற்றை நாம் அறியாதும், அறிந்தும் பிறர்க்கு உரையாதும், செவிடர்களாய்க் குருடர்களாய் ஊமைகளாய் வாழ்வது எற்றுக்கு?