
நமது இந்து கலாச்சாரத்தில் வீட்டின் முன் தினமும் கோலமிடுவது மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. தற்போது விழாக்கள், விசேஷங்கள் போன்றவற்றிற்கு கலர் பொடிகள் கொண்டு கோலமிடுவது வழக்கத்தில் உள்ளது. இதில் ரங்கோலி எனப்படுவது வண்ணங்களின் அணிவகுப்பாகும். இந்த ரங்கோலி கோலங்கள் மகாராஷ்டிரா மாநிலத் திலிருந்து தொடங்கி மெல்ல இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது.
இந்த ரங்கோலி தென் இந்தியாவில் கோலம் என்றும், வட இந்தியாவில் சவுக்பூரணா என்றும், ராஜஸ்தானில் மதனா என்றும், பீகாரில் அரிபனா என்றும், வங்காளத்தில் அல்பனா என்றும் அழைக்கப்படுகிறது. கோலங்கள் பற்றிய ஒரு சுவராசியமான கதை ஒன்று உண்டு. அக்காலத்தில் இருந்த ஒரு மன்னனின் நாடும், மக்களும் அந்நாட்டு இளவரசனின் மரணத்தினால் மிகவும் துக்கமடைந்திருந்தது. எல்லோரும் பிரம்மாவை வேண்டி அழுதனர்.
பிரம்மா, அவர்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து மன்னரிடம், இளவரசனைப் போன்ற உருவப் படத்தை தரையில் வரையும் படியும் அந்த படத்திற்கு தாம் உயிர் கொடுப்பதாகவும் கூறினார். அதன்படியே இளவரசன் உயிர் பெற்றெழுந்தான் என்பது புராணக் கதை. அதிலிருந்து உயிரோட்டமுள்ள கோலம் உருவானது என்று நம்பப்படுகிறது. இதனாலே மலர்கள், அரிசி மற்றும் மாவின் மூலமாக கோலமிட்டு இறைவனை வணங்குகின்றனர். மேலும், கலர் பொடிகளைத் தவிர மலர்களைக் கொண்டும் தற்போது ரங்கோலி வரைகின்றனர்.