பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்காவிட்டால் அவரது கணவரின் உயிர் அணுவை, சோதனைக் குழாயில் வைத்து கரு உருவாக்குவார்கள். பின்னர் அதை அந்த பெண்ணின் கருப்பையில் வைப்பார்கள். 10 மாதங்கள் ஆனதும் அந்த பெண் குழந்தையை பெற்று எடுப்பார். ஆண் உயிர் அணுக்களில் குறைபாடு இருந்தால் மருந்துகள் மூலம் அதை சரி செய்து கொள்ளலாம்.
இதேபோல் பெண்ணுக்கு கரு முட்டை உருவாவதில் சிக்கல் இருந்தாலும் மருந்துகள் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். ஆனால் குழந்தையை 10 மாதங்கள் சுமக்கக்கூடிய அளவுக்கு பெண்ணின் கருப்பை பலவீனமாக இருந்தாலோ, அல்லது கரு அதில் வளர்வதற்கு உரிய சூழ்நிலை இல்லை என்றாலோ என்ன செய்வது? அப்படிப்பட்ட பெண்களுக்கு கை கொடுப்பவர்கள்தான் வாடகைத் தாய்மார்கள்.
இந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான் பெண்கள் கருமுட்டை தானம் செய்வது பிரபலம் ஆனது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறைக்கும் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும்.
ஆண்கள் தங்கள் உயிர் அணுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கருமுட்டை தானம் செய்யும் பெண்ணுக்கு நிறைய மருந்துகளும், கரு முட்டையை எடுக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷனின் போது மயக்க மருந்தும் கொடுக்கப் படுவதால் அது அவரது உடல்நலனுக்கு நல்லது அல்ல. முத்தாய்ப்பாக, அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வர வாய்ப்பும் உள்ளது.
ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே 4 முதல் 5 லட்சம் கரு முட்டைகளோடு பிறக்கின்றன. அப்போது அவை வளர்ச்சியடையாத நிலையில் இருக்கும். பெண்கள் வயதுக்கு வந்த பின்பு அவை முதிர்ந்து மாத்திற்கு ஒன்று மட்டும் வெடித்து வெளியேறி, கர்ப்பையை நோக்கி நகரும். திருமணமாகி கணவரோடு உறவில் ஈடுபட்டால் கருமுட்டையும், உயிரணுவும் இணைந்து கரு உருவாகும். கருவாக்கம் நிகழாவிட்டால் கரு முட்டை வீணாகி உதிரத்தோடு வெளியாகிவிடும். இதைத்தான் மாதவிலக்கு எனகிறோம்.
கருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது +37 டிகிரி சென்டிகிரேடில் இருக்கும். இதை 0 டிகிரிக்கும் கீழே கொண்டுவந்து -194 சென்டிகிரேடுக்கு ஆக்கி திரவ நைட்ரஜனில் உறைய வைத்து கிரையோலாஜிக் என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம்.
ஒரு பெண் வயதுக்கு வந்து – தாம்பத்ய வாழ்க்கை நடத்தி வயதாகி மனோபஸ் காலத்தை அடையும் வரை அவளால் பயன்படுத்தப்படுவது 300 முதல் 400 கருமுட்டைகள்தான். ஆனால் அவள் நாலைந்து லட்சம் கருமுட்டைகளோடு பிறக்கிறாள். மனைவியின் கருப்பை, இன்னொரு பெண்ணின் கருமுட்டை, கணவரின் உயிரணு போன்றவை செயலாக்கம் பெறும் போது தாய்மையடைவது நிகழ்கிறது.
கருமுட்டையை ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்ற இளந் தாய்மார்கள் தானமாக கொடுக்கலாம். அவர்கள் ஏற்கனவே கருத்தரித்திருப் பதால், அவர்கள் கருமுட்டை வளமாக இருக்கும். அவர்கள் உடலில் மரபு நோய், பால்வினை நோய், காச நோய் போன்றவை இருக்கக் கூடாது. இந்த நோய்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிய முழுமையான உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுக் கொடுக்க முன்வரும் பெண்களுக்கு ரூ.31/2 லட்சம் வரையும் பணம் கிடைக்கிறது. குழந்தையை பெற்றுக் கொடுக்கும் வரை வாடகைத் தாய் பெரும்பாலும் மருத்துவ மனையிலோ அல்லது வாடகைக்கு அமர்த்தும் அந்த தம்பதியின் கண் காணிப்பில் அவர்களது வீட்டிலோ இருப்பார். கரு குழந்தையை உருவாகும் காலகட்டத்தில் குறைந்தபட்சம் 12 நாட்களாவது மருத்துவமனையில் வாடகைத்தாய் இருக்க வேண்டும்.