Header Banner Advertisement

வாதாபி கொண்ட அகத்தியர்


agathiyar

print
    சித்தர் என்ற வார்த்தையை கேள்விப்பட்டதுமே எல்லோரின் நினைவுக்கும் ஒன்று சேர வந்து நிற்பவர் அகத்தியர்தான். சித்தர் என்றால் அகத்தியர், அகத்தியர் என்றால் சித்தர் என்கிற அளவுக்கு சித்தர்களிலே புகழ்பெற்ற முதன்மைச் சித்தர் அகத்தியர்.

நவீன மருத்துவ உலகம் கூட விடை காணமுடியாத பல நோய்களுக்கும், மருந்துகளுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தெளிவான விளக்கம் கொடுத்தவர். சித்த வைத்தியத்திற்கு இவர் செய்திருக்கும் பணி செயற்கரியது.

அகத்தியரின் தோற்றம் பற்றிப் பலவிதமாகப் புராணங்கள் கூறுகின்றன. தாரகன் என்ற அரக்கர்கள் உலக மக்கள் அனைவரையும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த காலம். அவர்களை அழித்தே தீரவேண்டும் என்ற வேட்கையில் இந்திரன், வாயு, அக்னி துணையுடன் பூமிக்கு வந்தான். இவர்களைக் கண்ட அரக்கர்கள் மனதில் அச்சம் ஏற்பட அவர்கள் அனைவரும் கடலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். கடல்நீர் முழுவதும் வற்றச் செய்தால்தான் அரக்கர்களை பிடிக்க முடியும் என்று நினைத்த இந்திரன் தன்னுடன் வந்திருந்த அக்னிக்கு ‘கடல்நீரை வற்ற செய்!’ என்று கட்டளையிட்டான். ஆனால் அக்னி இதை ஏற்கவில்லை.

“இந்திரனே, கடல்நீரை வற்றச் செய்துவிட்டால் உடகில் உள்ள நீர் வளங்கள் எல்லாம் வற்றிவிடும். பூமியில் வாழும் உயிரினங்கள் நீரின்றி மரணம் எய்தும். அதனால் கடல்நீரை வற்றவைக்க முடியாது” என்று பதிலுரைத்தார்.

அரக்கர்களை அழிக்க முடியாமலே மேலோகம் திரும்பினர். சிறிது காலம் அமைதியாக இருந்த அரக்கர்கள் மீண்டும் தொல்லை கொடுக்க தொடங்கினர். இவர்களின் கொடூரங்களை ஒழித்துக்கட்ட வேண்டுமென்றால் கடல்நீரை வற்றச் செய்ய வேண்டும். அன்றே இந்த கடல்நீரை வற்றிப்போகும்படி செய்திருந்தால் இன்று இத்தனை துன்பங்கள் தொடர்ந்திருக்காது என்று நினைத்த இந்திரன்.

கோபத்துடன் அக்னி தேவனைப் பார்த்து “நீ வாயுடன் கூடி பூமியில் போய் கும்பத்தில் பிறந்து கடல்நீரையெல்லாம் குடிக்கக்கடவாய்” என்று சாபமிட்டான். அதன்படி அக்னி, வாயுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் தோன்றினார். இந்திரனின் விருப்பப்படி அகத்தியர் கடல்நீர் முழுவதையும் குடித்துவிட்டார். வற்றிய கடலில் ஒழிந்து கொள்ள இடமில்லாமல் அரக்கர்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தனர். அவர்களை இந்திரன் அழித்தான். அதன்பின் அகத்தியர் நீரைப் பழையபடி கடலுக்குள் விடுத்தார். இப்படியாக அகத்தியர் உருவானதை ஒரு புராணம் விவரிக்கிறது.

இன்னொரு புராணம் வேறொருவிதமாக விவரிக்கிறது. பூமியின் கடற்கரை அருகே மித்திரனும் வருணனும் தங்கியிருந்த காலம். இந்திரனின் சாபத்தால் பூலோகத்திற்கு வந்திருந்த ஊர்வசியைப் பார்த்தனர். அவளின் அழகு அவர்களைக் கிறங்க வைத்தது. தங்கள் மனதை பறிகொடுத்தனர். இருவருக்கும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு காமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரிடமிருந்தும் வீரியம் வெளிப்பட்டது. வெளிப்பட்ட வீரியத்தை ஒருவர் குடத்திலிட்டார். இன்னொருவர் தண்ணீரில் விட்டார்.

குடத்திலிருந்த வீரியம் அகத்தியராக உருபெற்றது. தண்ணீரில் விட்ட வீரியம் வசிஷ்டராக தோன்றியது. இப்படி ஒரு புராணம் கூறுகிறது. காவிரி புராணம் இன்னொருவிதமாக கூறுகிறது. பிரம்மதேவன் ஊர்வசியின் நடனத்தை கண்டு அவள் மீது மையல் கொண்டு, காமவயப்பட்டதும், வீரியத்தை வெளிவிட, அதிலிருந்து அகத்தியர் தோன்றியதாக கூறுகிறது. இப்படி அகத்தியரின் தோற்றம் பற்றி விதவிதமாக புராணக்குறிப்புகள் இருந்தாலும் சித்தர்கள் உலகில் தவிர்க்க முடியாத சித்த பெருமான் அகத்தியர்தான்.

ராமபிரானுக்கு சிவ கீதையை போதித்தார். சுவேதன் என்பவனுக்கு பிணந்தின்னுமாறு சபிக்கப்பட்ட சாபத்தில் இருந்து விடுதலை செய்தார். தான் வருவது தெரிந்திருந்து வணங்காமல் இருந்த இந்திரத்துய்மனை யானையாகப் போகும்படி சபித்தார்.

நீரின் மீது படுத்து கடுந்தவம் புரிந்தார். 12 ஆண்டுகள் தொடர்ந்து தவம் செய்ததால் பல அரிய சக்திகளைப் பெற்றார். வடதிசையில் வாழ்ந்து வந்த அகத்தியர் தென்திசை நோக்கிவந்தார். வரும் வழியில் அவரது முன்னோர்களைச் சந்தித்தார். அவர்கள் எல்லாம் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தார்கள். தனது பித்ருக்கள் இப்படி இருப்பதைக்கண்டு கவலை கொண்ட அகத்தியர் ‘எப்படி விடுவிப்பது?’” என்று கேட்டார்.

“அகத்தியனே! உன்னைக் கண்டதும் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். நீ திருமணம் செய்து கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்தப்பின்தான் நாங்கள் இதிலிருந்து விடுபட முடியும். அதன்பின் தான் சொர்க்கம் புக முடியம்” என்றனர்.

அகத்தியர் எப்போதுமே கடுந்தவத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டவர். தவமும் இறைவனை நினைக்கும் பேரானந்தத்தைவிட வேறு எதையுமே பெரிதாக நினைக்காதவர். வேறு எதிலும் நாட்டம் கொள்ளாதவர். திருமணம், மனைவி, இல்லற வாழ்க்கை என்பதை பற்றி நினைத்துக்கூட பார்க்காதவர்.

ஆனால் தன் முன்னோர்களின் சாப விமோசனத்திற்காக “கவலைக் கொள்ளாதீர்கள்! விரைவில் இல்லறமடைந்து உங்களை இத்துன்பத்திலிருந்து நீக்குகிறேன்” என்று கூறி விதர்ப்ப நாட்டை நோக்கி நடந்தார்.

அந்த நாட்டு அரசன் நடத்திய யாகத்தில் பிறந்த உலோப முத்திரை என்ற பெண்ணை அதிகமான பொருள் தந்து மணந்து கொண்டார். ஒரு மகனை ஈன்று முன்னோர்களின் கடனைத் தீர்த்தார்.

தமிழுக்கு உரிய முருகக் கடவுளின் ஆணைப்படி தமிழுக்கு ‘அகத்தியம்’ என்ற இலக்கிய நூலை இயற்றினார்.

ஒருமுறை சிவபெருமான் உமாதேவி திருமண வைபவம் நடைபெற இருந்தது. இறைவனின் திருமணத்தைக் காண்பதற்காக தேவர்களும் ரிஷிகளும் இமயத்தில் ஒன்று கூடினர். உலக மக்கள் அனைவரும் அங்கு திரண்டதால் பூமியின் வடக்குப் பகுதி தாழத் தொடங்கியது. தாழ்ந்துபோன இந்த பூமியை சரிசெய்ய அகத்தியர் ஒருவரால் மட்டுமே முடியும் என்று சிவபெருமான் கூறினார்.

உடனே அகத்தியர் அழைக்கப்பட்டார். “அகத்தியரே! எமது திருமணம் காண அனைவரும் இங்கு ஒன்று கூடியதால் வடப்பகுதி தாழ்ந்துவிட்டது. இதனை சமநிலைப்படுத்த தென்திசைப் போக வேண்டும். உம் ஒருவரால்தான் இதுமுடியும்” என்று சிவபெருமான் கட்டளையிட்டார்.

“எம்பெருமானே! உலகமே கண்டு களிக்கும் தங்களின் திருமணத்தை அடியேனும் காண ஆவல் பிறக்கிறது. திருமணத்தைப் பார்த்தபின் செல்கிறேன்” என்றார் அகத்தியர்.

“அகத்தியரே! இது தாமதிக்கும் செயல்அல்ல. உடனே தென்திசை செல்! அங்கே உனக்கு நானும் உமாதேவியும் திருமண கோலத்தில் காட்சி தருகிறோம்” என்றார்.

இதனைக் கேட்ட அகத்தியர் மன மகிழ்வுடன் தென் திசைக்கு பயணம் மேற்கொண்டார். தென்திசையை அடைந்ததும் உலகம் சமநிலை அடைந்தது.

ஒரு சமயம் விந்திய மலைக்காடுகளில் வாதாபி, இல்வலன் என்ற கொடிய அரக்கர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் தங்கள் பகுதியில் வரும் அப்பாவி மனிதர்களைத் தந்திரமாக வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்தனர். விருந்து நல்லதுதானே என்று நினைத்துப் போனவர்கள் மாண்டுபோனார்கள்.

விருந்துக்கு செல்லும் மனிதர்களிடம் வாதாபியை ஆடாக மாற்றி அதை வெட்டிக் கொன்று வந்தவர்களின் வயிறு புடைக்க கறி சமைத்து உண்ணச் செய்வான் இல்வலன். விருந்தினன் உண்டு முடித்ததும் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா!’ என்று அழைப்பான். உடனே வயிற்றுக்குள் உணவாகச் சென்ற வாதாபி வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்துவிடுவான்.

வயிறு கிழிக்கப்பட்டதால் விருந்தினன் இறந்து போவான். இறந்தவனை இரண்டு அரக்கர்களும் அறுத்துத் தின்பது வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஒருநாள் அகத்தியரும் அந்தப் பக்கமாக நடந்துப்போய் கொண்டிருந்தார். உடனே இல்வலன் அகத்தியரை தனது இல்லத்திற்கு விருந்து உண்ண அழைத்தான். அகத்தியர் தனது ஞான திருஷ்டியால் அழைப்பவரின் தந்திரங்களை தெரிந்து கொண்டார். அழைப்பைத் தட்டாமல் இல்வலன் இல்லத்திற்கு சென்றார் அகத்தியர். அங்கு வழக்கம்போல் வாதாபியை ஆட்டுக்கறியாக மாற்றி சமைத்து வைத்திருந்தான். உணவை மிகவும் பணிவோடும் பாசத்தோடும் பரிமாறுவதுபோல் நாடகம் நடத்தினான் இல்வலன்.

அகத்தியர் வயிறு நிறைந்தது. உணவு முழுவதும் வயிற்றுக்குள் போனவுடன் ‘வதாபி நீ ஜீரணமாகக் கடவாய்’ என்று கூறி வயிற்றைத் தடவினார். உடனே வாதாபி ஜீரணமானான். இதனை அறியாத சகோதரன் இல்வலன் ‘வாதாபியே வெளியே வா, வெளியே வா!’ என்று மீண்டும் மீண்டும் கூவி அழைத்தான். ஆனால் வாதாபி வரவேயில்லை. அகத்தியரின் தெய்வீகத்தன்மை உணர்ந்த இல்வலன் அவரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.

அவனை மன்னித்து அகத்தியர் அவனிடமிருந்து தனது மனைவி உலோபமுத்திரை விரும்பிய செல்வங்களை இல்வலனிடமிருந்து பெற்றுக் கொண்டு திரும்பினார். மனைவியுடன் சிறிது காலம் தங்கியிருந்த அகத்தியர் அதன்பின் தனது முன்னோர்களை சாபத்தில் இருந்து விடுவித்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின், தமது நுற்றுக்கணக்கான சீடர்களுடன் பொதிகை மலைக்குப் புறப்பட்டார். அங்குதான் அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, பொதிகை முனி, தமிழ்முனி என்று பல பெயர்கள் ஏற்பட்டது.

அகத்தியர் எழுதிய நூல்களை ‘நாதரிஷி’ என்பவர் தம் விருப்பத்திற்கு மாறாக எழுதி வெளியிட்டதைக் கண்டு வெகுண்டு போன அகத்தியர் “நீ தவறான நூல்களை எழுதி வெளியிட்டதால் உனக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் தீராமலே போகட்டும்” என்று சாபமிட்டார்.

இதனைக்கேட்டு மனம் நொந்து போன நாதரிஷி அகத்திய முனிவர் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அவருக்கு மன்னிப்பு கொடுத்த அகத்தியர் “என்னுடைய நூல்கள் சங்கப்பலகையில் மிதந்துவரும் காலத்தில் நீ அவற்றை அடைந்து சந்தேகம் தெளிவாய்” என்று சாப விமோசனம் அருளினார்.

இப்படியாக பல அற்புதங்களை செய்து, பல நூற்றாண்டுகள் அகத்தியர் பூமியில் வாழ்ந்தார்.