
தேவையான பொருள்கள்:
முற்றிய வாழைக்காய் – 4
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
உப்பு, மஞ்சள் தூள் – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
தாளிக்க – எண்ணை, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை.
செய்முறை:
வாழைக்காய்களை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில், ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் வாழைக்காய்களைப் போட்டு மூடி, நிதானமான சூட்டில், 5 நிமிடம் வேக வைக்கவும். அரைவேக்காடுக்கும் கீழே மட்டுமே வெந்து தோல் மட்டுமே உரிக்கவரும்.
நீரை வடித்து ஆறவைத்து தோலை உரித்துக் கொள்ளவும்.
கேரட் துருவியில்(பெரிய அளவு) வாழைக்காய்களைத் துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து, உப்பு மஞ்சள் தூளைச் சேர்க்கவும்
துருவி வைத்துள்ள வாழைக்காயைச் சேர்த்து நிதானமான சூட்டில் மேலும் 5 லிருந்து 10 நிமிடங்கள் கிளறவும்.
தேங்காய்த் துருவல் தூவிப் பரிமாறவும்.
விரும்பினால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
இதுபோன்ற அதிகம் கரண்டியால் பிரட்டிவிடமுடியாத காய்களுக்கு உப்பு, மஞ்சள் தூளை தாளிக்கும் எண்ணையிலேயே காயைப் போடுவதற்கு முன் சேர்த்துவிட்டால், அவை காயில் சுலபமாக, சீராக, சீக்கிரம் பரவி விடும்.
வாழைக்காய் பொடிமாஸையும் முன்னர் இப்படி உருளைக் கிழங்கு போல் தான் உதிர்த்து செய்துகொண்டிருந்தேன். ஒரு திருமண விருந்தில் சமையல்காரர் இப்படிச் செய்வதைப் பார்த்ததிலிருந்து சுலபமாக இருப்பதால் இதுவே வழக்கமாகி விட்டது.
திருமணம் காதுகுத்து போன்ற பெரிய விருந்துகளில் அவசியம் உணவு தயாரிக்கும் இடத்திற்கு விஜயம் செய்து கொஞ்ச நேரம் செலவழித்தால் மிகப் பயனுள்ள குறிப்புகள் கிடைக்கும். சமயத்தில், ‘இந்த மைசூர்பாகு சரியா வந்திருக்கான்னு பாருடீ குழந்தே/ பாரும்மா/ பாருங்கோ மாமீ/’ வகை போனஸும். மைசூர்பாகை சுடச் சுட, நாக்கு பொரியப் பொரிய கிளறிக் கொட்டியதும் சாப்பிடவில்லை என்றால் அப்புறம் சாப்பிடவே தேவை இல்லை. நானெல்லாம் ‘No, Thanks’ சொல்லிவிடுவேன். கிளம்பும்போது அவசியம் சமையல் காரர்களையும், நாதஸ்வரக் காரர்களையும் இரண்டு வார்த்தை பாராட்டிவிட்டு வரவும். இவர்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் விசேஷங்களில் எதுவுமே இல்லை.
மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:
அட நல்லா இருக்கும்; அப்படியே சாப்பிடலாம்.
குழம்பு, ரசம், தயிர் என்று எல்லாச் சாதத்தோடும் சேரும்.
கொஞ்சம் எண்ணை அதிகம் விட்டு, அதிக நேரம் அடுப்பில் வைத்து முறுகலாகச் செய்தால் சாம்பார் சாதம், தேங்காய், எலுமிச்சை போன்ற கலந்த சாதங்களுக்கும் நன்றாக இருக்கும். அப்பளம் வடாம் என்று பொரிப்பதற்குப் பதில் இது பரவாயில்லை.