
“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்கிறார் வள்ளுவர். அறிவுரையோ விமர்சனமோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் உள்நோக்கம் அற்ற உண்மை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதே வள்ளுவர், விமர்சனம் செய்பவர் களுக்கும் ஓர் இலக்கணம் சொல்கிறார். “நன்றாற்றலுள்ளும் தவறுண்டாம் அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை” அதாவது நீ நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் சொல்கிறாய். ஆனால், அது யாருக்கு செய்கிறாய் என்பது முக்கியம். பண்பற்ற மனிதர்களுக்கு நல்லது செய்தாலும் அது தவறுதான் என்கிறார். ஆட்சியாளர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்குமே இவைப் பொருந்தும்.!
அதை விடுத்து, “உண்மையை சொன்னால் (கொடநாட்டில் இருந்து ஆட்சிப் புரிகிறார் ஜெயலலிதா)உடனே புகழுக்கும்,பெயருக்கும் களங்கம் விளைவிப் பதாகக் கூறி அவதூறு வழக்குத் தொடருவது என்ன நியாயம்.? இது இங்கு மட்டுமல்ல. பெண் தலைமை வகிக்கும் மேற்கு வங்கத்திலும் உள்ளது. கார்ட்டூன் வரைந்ததற்காக பேராசிரியர் கைது… பொதுக் கூட்டத்தில் எதிர்த்துக் கேள்விக் கேட்டவர் கைது என்று அடாவடியில் ஈடுபடுவது மம்தாவுக்கும் புதிது அல்ல.! விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் எப்படி நிர்வாக ஆளுமை பெற்றிருப்பர் என்ற கேள்வி எனக்கு எழுகிறது.