Header Banner Advertisement

விவசாயத்தை சீரழிக்கும் எலிகள்


002

print
விவசாயத்தில் எலிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் நெல் மற்றும் கரும்பு பயிர் செய்திருந்தால் எலிகளின் தொல்லைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதிலும் அறுவடைக்குப் பின் இவைகள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

எலிகள் சேதம் செய்வது ஒரு மடங்கு என்றால் அதனுடைய கழிவுப் பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் சேதப்படுத்தும் அளவு 30 மடங்காகும். ஒரு எலி ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 250 கிராம் வரை உணவு உட்கொள்ளும். எலியின் உடலளவோடு ஒப்பிடும் போது, அது சாப்பிடும் உணவின் அளவு மிக அதிகம். உணவு போக ஒரு எலிக்கு 40 மிலி நீரும் அன்றாடம் தேவைப்படுகின்றது.

எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இன்றி இரண்டு நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியது. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளரும். இப்படியே போனால் ஒரு ஆண்டில் 12.5 செ.மீட்டர் வரை வளர்ந்துவிடும். இந்த வளர்ச்சி எலிகளுக்கு ஆபத்தானவை. அதனால் இப்பற்களின் வளர்ச்சியை எலிகள் குறைத்தாக வேண்டும். இல்லையென்றால் அதன் பற்கள் வாயை விட்டு வெளியே வளர்ந்து வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் எலி இறந்துவிடும். அதனால் பற்களின் வளர்ச்சியைக் குறைக்க எலிகள் ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக இருக்கிறது. பயிர்களோடு விட்டுவிடாமல் கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்தி விடுகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதமாகின்றன.
இந்தியாவில் மொத்தம் 400 கோடி எலிகள் உள்ளன. ஒரு மனிதனின் ஒரு நாள் உணவை இரண்டு எலிகள் ஒரு நாளில் காலி செய்து விடுகின்றன.
இந்தியாவில் மொத்தம் 71 வகையான எலி வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு வகை ஆண் பெண் பிறப்புறுப்புகள் இரண்டையும் ஒரே உடலில் கொண்டவை. இவைகளில் ஒரு எலி 18 மாதங்களில் 10 லட்சம் எலிகளை உருவாக்கிவிடும்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் எலிகளை பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்துகிறார்கள்.

தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம். வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்பு தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தினை மற்றும் இனப்பெருக்கத்தினை குறைக்கலாம். எலிகளை கட்டுப்படுத்தினால் மகசூலை கூட்ட முடியும் என்கிறார்கள் விவசாய வல்லுநர்கள்.