
ஹனிமூன்களைக் கொண்டாடுவதற்கு ஏற்ற இடங்கள் உலகில் பல உள்ளன. அவற்றில் சிறந்தவற்றை இங்கு கொடுத்துள்ளோம்.
1. ஹவாய் தீவுகள்
அமெரிக்காவின் சொர்க்கம் என்று இதைச் சொல்கிறார்கள். கடலில் அமைந்திருக்கும் ஒரே அமெரிக்க மாகாணம் இதுதான். இங்கிருக்கும் முக்கிய 6 தீவுகளும் ஆறு விதமான அனுபவங்களைக் காதலர்களுக்கு தரும்.
இயற்கை செதுக்கி வைத்த அழகு சிற்பங்களாக ஒவ்வொரு இடமும் இருப்பது தம்பதிகளை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்லும். தீவுகள் நிறைந்த இடம் என்பதால் சாகஸ நீர் விளையாட்டுகள், படகு போக்குவரத்துகள் நிரம்பியிருக்கின்றன. எல்லாவற்றிலும் பங்கு கொள்வது மனதை உற்சாகப்படுத்தும். ஹவாய் தீவில் ஹனிமூன் என்பது வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்கும் நினைவுகளாக என்றென்றும் இருக்கும்.
2. செயின்ட் லூசியா
கரீபியன் கடலில் அமைந்திருக்கும் தீவு நாடு இது. இந்நாட்டின் முக்கிய வருமானமே சுற்றுலாதான். அதனால் தான் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏகப்பட்ட வசதிகளை இந்நாடு செய்து தருகிறது. அதிலும் ஹனிமூன் கொண்டாட்டத்திற்காக வரும் புதுமணத் தம்பதிகளை கையில் வைத்து தாங்குகிறது.
ஜனவரி முதல் ஏப்ரல் வரை சுற்றுலா சீஸன் களைக்கட்டும். எரிமலை, தாவரவியல் பூங்கா, இரட்டை சிகரம், பீஜியன் தேசியப்பூங்கா, ரோட்னி கோட்டை, பிரிட்டீஷ் மிலிட்டரி பேஸ் என்று பார்ப்பதற்கும் ரசிப்பதற்கும் ஏராளமான இடங்கள் இருக்கின்றன. இயற்கையின் பிடியில் இருக்கும் இந்த இடங்களில் டெண்ட் போட்டு தங்குவதையே நிறைய சுற்றுலாப்பயணிகள் விரும்புகிறார்கள். அதற்காகவே இங்கு பல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3. செயிண்ட் பார்ட்ஸ்
பல ஆண்டுகளாகவே ப்ரெஞ்ச் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த தீவுக்கூட்டம் இது. ப்ரெஞ்ச் ஆட்சி செய்ததால் இந்த நாட்டிலும் ப்ரெஞ்ச் கலாசாரம் மேலோங்கி இருக்கிறது. வருடத்திற்கு 2 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் நாடு இது.
இந்த நாடு முழுவதும் சுற்றுலாவை மையமாகக் கொண்டே இயங்குகிறது. எல்லா பொருட்களும் அமெரிக்கா அல்லது ஃப்ரான்ஸில் இருந்துதான் வர வேண்டும். இங்கிருக்கும் ஹோட்டல்கள் எல்லாமே ஆடம்பரம் நிரம்பியது. அதனால் சுற்றுலா செலவு அதிகமாகும். இந்த நாட்டில் இருக்கும் வனச்சரணாலயம் இயற்கையின் கொடை. இதுபோக ‘யாட்ச்’ என்று சிறிய கப்பலில் செல்லும் சுற்றுலா இங்கு புகழ் பெற்றது. புதுமணத்தம்பதிகளுக்கு இவ்வளவு வசதிகள் இருந்தால் போதாதா ஹனிமூன் சிறப்பாக கொண்டாட.
4. பாலி
இந்தோனேஷியாவில் இருக்கும் ஒரு தீவு தான் பாலி. இது சுற்றுலாப்பயணிகளை அதிகம் ஈர்க்கும் ஓர் இடம். இங்கு சுற்றுலாதான் வருமானத்திற்கான ஆதாரம். இங்கு பெரும்பான்மையினராக இந்துக்களே இருக்கிறார்கள்.
இங்கிருக்கும் கலை, கலாசாரம், நடனம், சிற்பம், இசை எல்லாமே மிக உயர்ந்த நிலையில் இருக்கின்றன. கலை மீது ஆர்வம் கொண்ட தம்பதிகளை கவர்ந்திழுக்கும் இடமாக பாலி உள்ளது. பாரம்பரியத்தை ரசிப்பவர்களுக்கு பாலி மிகச் சிறந்த இடம்.
5. ப்ரூகஸ்
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரு நகரம்தான் ப்ரூகஸ். சரித்திரப் புகழ்பெற்ற இந்த நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதை ‘வடக்கு வெனீஸ்’ என்று அழைக்கிறார்கள்.
இங்கிருக்கும் பழமையான கட்டடங்கள் பார்க்க பார்க்க அழகு தருபவை. நீர் நிறைந்த தெருக்களில் காதலர்கள் படகில் சவாரி செய்தபடி இருபக்கமும் உயரமாக இருக்கும் நூற்றாண்டு பழமையான கட்டடங்களைப் பார்த்து ரசிப்பது தனியழகு. இது மட்டுமல்லாமல் பார்ப்பதற்கு பல இடங்கள் இருக்கின்றன.