
18 வயது நிறைந்த அந்த சீன இளைஞன் ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத மோகத்துடன் அமெரிக்கா வந்து இறங்கினான். அந்த இளைஞனின் பெயர்தான் புருஸ்லீ.
புருஸ்லீக்கு அடிதடி என்றால் கொல்லைப் பிரியம். ஊரில் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு புருஸ்லீ தவறாமல் இருப்பார். அவரது அட்டூழியத்தை தாங்க முடியாமல் தான் அவரது பெற்றோர்கள் அவரை ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
![]() |
17 வயதில் புருஸ்லீ |
ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்திருந்தார். இருந்தாலும் ஹாலிவுட்டில் பெரிய கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது வெறி. அனால் ஹாலிவுட் இவரை சீண்டக்கூட இல்லை. ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சோகத்தோடு மீண்டும் ஹாங்காங் திரும்பினார்.
‘தி பிக் பாஸ்’, ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ என்ற இரண்டு படங்களில் நடித்தார். பம்பரமாக சுழன்று மின்னல் வேகத்தில் இவர் போட்ட சண்டைகள் இதுவரை சினிமாவில் பார்த்திராதவை. அந்த வேகம் சீனாவை கடந்து ஆசிய நாடுகள் முழுவதும் வசூலை அள்ளிக்குவித்தன. அப்போதும் ஹாலிவுட் அலட்டிக்கொள்ளவில்லை.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், திருப்பம் நிறைந்த திரைக்கதை என்று தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்த ஹாலிவுட் இந்த படங்களை குப்பை என்று ஒதுக்கித் தள்ளியது.
![]() |
‘தி ரிட்டர்ன் ஆஃப் டிராகன்’ |
ஆனால், புருஸ்லீ இதற்காக கவலைப்பட வில்லை. 1972-l ‘தி ரிட்டர்ன் ஆஃப் டிராகன்’ என்ற படத்தை எடுத்தார். சினிமாவின் நேக்குப் போக்குகளை தெரிந்து கொண்ட புருஸ்லீ இந்த சினிமாவிற்கான திரைக்கதையை தானே எழுதி இயக்கவும் செய்தார்.
இந்த முறை புருஸ்லீயின் படம் ஆசிய எல்லைகளை கடந்து அமெரிக்க இளைஞர்களையும் கவர்ந்தது. வெறித்தனமான ரசிகர்களாக அவர்களை மாற்றியது. காரணம், சினிமாவில் அவர் போடும் சண்டைகளை நிஜத்திலும் செய்துகாட்டக்கூடியவர். இந்தப் படம் கொடுத்த வெற்றியில் அடுத்த படமான ‘கேம் ஆஃப் டெத்’ ஆரம்பித்தார்.
வெகு தாமதமாக விழித்துக் கொண்ட ஹாலிவுட், புருஸ்லீயின் வீட்டு முன் வந்து நின்றது. ஹாலிவுட் படத்தில் நடிப்பதையே லட்சியமாக கொண்டிருந்த புருஸ்லீ, ‘கேம் ஆஃப் டெத்’ பட வேலைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஹாலிவுட் தயாரிப்பளர்களுக்காக ‘என்டர் தி டிராகன்’ படம் எடுத்தார். இரண்டு மாதத்தில் படத்தின் முழு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார்.
மீண்டும் தனது ‘கேம் ஆஃப் டெத்’ படத்தின் வேலைகளை தொடர்ந்தார். அப்போது மரணத்தின் விளையாட்டு நிஜமாகவே நடந்தது. யாருமே எதிர்பாராத வேளையில் புருஸ்லீ திடீரென்று இறந்து போனார். இறப்பும் மர்மமாகவே இருந்தது. பயிற்சியின் போது தொடர்ந்து தலையில் பட்ட அடிகளால் மூளை வீங்கி இறந்ததாக டாக்டர்கள் கூறினார்கள்.
![]() |
நடிகை பெட்டீ டிங் பெயுடன் |
புருஸ்லீ இறந்தது, பெட்டீ டிங் பெய் என்ற ஒரு நடிகையின் வீட்டில். வீரியம் அதிகம் உள்ள மருத்துகளை சாப்பிட்டுவிட்டு நடிகையுடன் உடலுறவு கொண்ட நிலையில் உயிர் பிரிந்ததாக ஒரு தகவலும் உண்டு.
எது எப்படியோ தனது 33-வது வயதில் புருஸ்லீ இறந்து போனார். அவரது இறப்பை ரசிகர்கள் நம்பவே இல்லை. அதற்குப் பின் வந்த ‘என்டர் தி டிராகன்’ உலகம் முழுவதும் பட்டித்தொட்டிகளில் கூட வசூலை வாரி குவித்தது. இளைஞர்களை காரத்தே பைத்தியமாக மாற்றியது இந்த படம்தான்.
எப்படியோ ஒரு நோஞ்சான் இளைஞன் இறுதியாக ஹாலிவுட்டை வென்று விட்டான்.
![]() |
புருஸ்லீயின் கல்லறை |