Header Banner Advertisement

1,500 பேரை தற்கொலை செய்ய வைத்த சாமியார்!


3

print
தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்?

மனித வெடிகுண்டு எப்படி தன்னையும் மாய்த்து, ஏதும் அறியாத அப்பாவி மனிதக் கூட்டத்தையும் கொல்லச் செய்கிறது?

இவர்களுக்கெல்லாம் அறிவே இல்லையா…? என்று கேட்டால் இருக்கிறது…! நிறைய அறிவு இருக்கிறது. ஆனால் எப்படிப்பட்ட அறிவாளியையும் அடிமுட்டாளாக்கி விடும் சக்தி மூளைச் சலவைக்கு உண்டு.

சிறந்த முறையில் மூளைச் சலவை செய்தால், எதிராளி உங்களை மரண உலகத்துக்கே அழைத்துப் போகலாம். உங்களை மட்டுமல்ல, உங்களின் அழகான மனைவி அன்பான குழைந்தைகள் எல்லாமே கூண்டோடு தற்கொலை செய்து கொள்வார்கள்! மூளைச் சலவை அத்தனை வசீகரமானது.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்.

ரெவரெண்ட் ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ்
நம்மூர் சாமியார்களைப் போல் வெளிநாடுகளிலும் சாமியார்களின் பின் அலையும் பித்துப் பிடித்த கூட்டம் உண்டு. இந்த வகை சாமியார்களையும் அவர்களின் இயக்கங்களையும் வெளிநாடுகளில் ‘cult’ என்று அழைக்கிறார்கள். ‘கல்ட்’ என்றால் புதிய மதம் என்பதுதான் அர்த்தம். ஆனால் இப்போது அந்த வார்த்தை ஏதோ ‘கெட்ட’ வார்த்தை போல் மாறிவிட்டது.

வசீகரம் மிகுந்த ஒரு போலிச்சாமியார், தன்னையே கதியென்று வந்து சேர்ந்த பக்தர்களை எந்தளவுக்கு மூளை சலவை மூலம் அடிமையாக மாற்ற முடியும் என்பதற்கு ஜோன்ஸ் மிக நல்ல (கெட்ட) உதாரணம்.

அது 1978, நவம்பர் 18. அமெரிக்காவின் தென் பகுதியில் இருக்கும் கயானாவில் இருக்கிறது, ‘ஜோன்ஸ் டவுன்’. அங்கு 1,500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூட்டம் பரவசத்தோடு காத்துக் கிடக்கிறது. உயரமான மேடை… பக்திப் பாடல்களை ஒலிபரப்பியபடி ஒலிபெருக்கிகள்…

மொத்தக் கூட்டமும் மேடையை நோக்கியபடியே இருந்தன. மேடையில் இருந்த ஜோன்ஸ் தனது கம்பீரமான மனதை இளக்கும் குரலில்…

”என் பிள்ளைகளே! இன்று நாள் எந்த நாள் என்று தெரியுமா? நமது சந்திப்பு, கடைசி சந்திப்பு. ஆம்! இந்த பூமியில் நாம் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் கடைசி சந்திப்பு! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

இன்றோடு நாம் எல்லோரும் இறக்கப் போகிறோம். தப்பிக்க வழியே இல்லை. நாம் உயிர்த்தியாகம் செய்யாவிட்டால் விளைவுகள் மிகக் கொடுமையாக இருக்கும். வெளியுலகில் இருந்து எல்லா தீயசக்திகளும், நம்மை அழித்து ஒழித்துவிடுவது என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிட்டன. நம்மை சீரழிக்க வருகின்றன. அவற்றிடம் இருந்து தப்பப் போகிறோமா? அல்லது சிக்கி சீரழியப் போகின்றோமா? இல்லை எல்லாவற்றிலும் மேன்மையான இறைவனை சரணடையப் போகிறோமா?”

கூட்டம் அமைதியாக இருந்தது. அனைவரின் கண்களிலும் நீர் கசிந்திருந்தது.

”என் குழந்தைகளே! நான் உங்கள் மீது கொண்ட அன்பு உண்மையானது. பரிசுத்தமானது. அதே போல் என் மீது நீங்கள் அன்பு வைத்திருப்பது உண்மையானால்… நான் சொல்வதை செயல்படுத்துங்கள். என்னோடு உயிர் விட தயாராகுங்கள். இது இறைவனின் இணையற்ற கட்டளை. அதனால் கவலை வேண்டாம்!

“நம் இறப்போடு நம் பயணம் இங்கேயே முடிந்து போய் விடுவதில்லை. நாம் எல்லோருமே மீண்டும் உயிர்த்தெழுவோம்! அதுவும் நாளைக்கே நடக்கும்!

நாம் மீண்டும் பிறப்பெடுப்பது புதியதோர் உலகில்… அது சொர்க்கம் போல் இன்பமான உலகம். அங்கே பசியில்லை… பட்டினியில்லை… துன்பமில்லை… துயரமில்லை… எங்கும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் உலகம் அது. நமக்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட தனி உலகம். நம்மைத் தவிர வேறு யாரும் அந்த உலகை அடைய முடியாது. புது உலகின் இன்பங்களை மட்டுமே அனுபவிக்க போகும் பாக்கியவான்கள் நாம். பூமியில் நாம் கண்டது எல்லாமே சிற்றின்பங்கள்தான். அங்கே நாம் அடையப் போவது பேரின்பம். சொர்க்கலோகமான அந்த புதிய உலகில் மீண்டும் நாம் நாளை சந்திப்போம். என்னருமைக் குழந்தைகளே! நாளை நம்முடையது… நரகமான இந்த உலகை விட்டு, என்னுடன் சொர்க்கத்துக்கு வருவீர்களா…!” கல்லும் கசிந்துருகும் பேச்சு ஜோன்ஸினுடையது.

கேட்டுக் கொண்டிருந்த கூட்டம் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் இருந்தது. சத்தமாக, கோரஸாக,

”வருவோம்… வருவோம்…!” என்று இடிபோல் முழங்கியது. எல்லோரும் மனம் விட்டு அழுதார்கள்.

துன்பம் நிறைந்த. அழிவின் விளிம்பில் இருக்கும் பூலோகத்தில் இருந்து நம்மை மீட்டுச் செல்லும் மீட்பர் இவர்தான் என்று எல்லோரும் நம்பிக்கையோடு கட்டளைக்கு காத்துக் கிடந்தனர்.

கூட்டத்தின் முன் பெரிய ட்ரம்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டன. அந்த ட்ரம்களில் சயனைடு கலக்கப்பட்ட மினரல் வாட்டர் நிரப்பப்பட்டிருந்தன. சயனைடு என்பது கொடுமையான விஷம். குடித்தால் உயிர் பிழைக்க வழியே இல்லை. 100 சதவீத மரணம் உறுதி.

அந்த சயனைடு தண்ணீருடன் எலுமிச்சை சாறு கலக்கப்பட்டது.

எல்லாம் தயாராக இருந்தது.

”இந்த பானம் சொர்க்க பானம். நம்மை வேறு ஒரு புனித உலகத்துக்கு அனுப்பி வைக்கும் அற்புத பானம். இதைக் குடித்த அடுத்த நிமிடமே பூமியின் விடுதலையான மரணம் சம்பவிக்கும். எனவே, புனிதம் நிறைந்த இந்த நீரை கட்டுப்பாடு குலையாமல் ஒவ்வொரு குடும்பமாக வரிசையில் வந்து பானத்தை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்குதான் எப்போதும் முன்னுரிமை. அதனால் குழந்தைகளுக்கு முதலில் பானத்தைக் கொடுங்கள். அவர்கள் பூமியில் இருந்து விடுதலையானதும், அடுத்துப் பெண்கள். அவர்களுக்கு அடுத்தே ஆண்கள்…” ஒலிபெருக்கியில் ஜிம்ஜோன்ஸின் கட்டளை அதிரடியாய் முழங்குகிறது.

குடும்பம் குடும்பமாக
கூட்டம் வரிசையில் நின்றது. பெற்றோர்கள் விஷக் குடிநீரை வாங்கி ஏதும் அறியாமல், கள்ளம் கபடமில்லாமல், பொக்கை வாயைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் முதல் வயதுக்கு வந்த பெரிய குழந்தைகள் வரை குடிக்க வைத்தார்கள். பால் குடி மறவாத குழந்தைகளுக்கு சிரிஞ்ச் மூலம் சயனைடு நீரை புகட்டினார்கள்.

ஓரளவு விவரம் தெரிந்த சிறுவர்கள் முரண்டு பிடித்தார்கள். தப்பியோட முயற்சித்தார்கள். அவர்களைப் பிடித்து வந்து வலுக்கட்டாயமாக விஷநீரைக் குடிக்க வைத்தார்கள். பத்து நிமிட நேரத்திற்குள் எல்லா குழந்தைகளும் மரணத்தை தழுவி இறந்தார்கள்.

அடுத்து பெண்கள் முறை தாய், சகோதரி, மனைவி, காதலி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லா பெண்களுக்கும் அவர்கள் குடும்பத்து ஆண்கள் விஷ நீரைக் கொடுத்தார்கள். அடுத்த சில நொடிகளிலே பெண்கள் தள்ளாட தொடங்கினார்கள். அவர்களை கைத்தாங்கலாக அழைத்துப் போய் வரிசையாக புல்வெளியில் படுக்க வைத்தார்கள். அதற்கு அருகே ஏற்கனவே இறந்த குழந்தைகளின் உடல்கள் அடுக்கி வைக்கப்பட்டன.

பின்பு எஞ்சியிருந்த ஆண்கள் அனைவரும் சயனைடு நீரைப் பருகினர். சில ஆண்களுக்கு இந்த கொடூரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று கடைசி நிமிடத்தில் ஞானோதயம் தோன்றியது. அப்படிப்பட்டவர்கள் விஷநீரைக் குடிக்க மறுத்தனர். அவர்களை ஜிம்ஜோன்ஸின் சிஷ்யர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டிக் குடிக்க வைத்தார்கள்.

பக்தர்கள் அனைவரின் உடலும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. இப்போது ஜோன்ஸின் சிஷ்யர்கள் விஷநீரை சர்பத் போல் ருசித்து அருந்தினார்கள்.

தன் கண்முன்னே ஆயிரக்கணக்கான பக்தர்கள் துடிதுடித்து உடல் அடங்குவதை மேடை மீதிருந்து பார்த்துக் கொண்டிருந்தார் ஜோன்ஸ். எல்லோரது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் வழிந்திருந்தது.

”முயற்சித்தேன்… முடிந்தவரை முயற்சி செய்து விட்டேன்” என்று உரக்கக் கத்திய ஜோன்ஸ், தன் நெற்றி பொட்டில் கைத் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினார். மறுவினாடி மூளை சிதற, ஜோன்ஸ் உயிரும் பிரிந்தது.

உலகில் 1,500 பேர் ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் தற்கொலை செய்து கொண்டது இங்குதான் நாட்டில் பொருளாதார பிரச்சினைகளும், மக்கள் மத்தியில் ஒருவித மன உளைச்சலும், விரக்தியும் காணப்படும்போது, இது போன்ற புதிய இயக்கங்கள் உருவாகும். மக்கள் திசை மாறிப் போவார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.

இந்தியாவும் இப்படிப்பட்ட சூழ்நிலையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி கவலைப்படாமல், அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும் போது இத்தகைய ‘கல்ட்’கள் தோன்றும் அபாயம் இருக்கிறது.

அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகளின் மூளைச் சலவையில் இருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது.
=====

குறிப்பு:
ஜிம் ஜோன்ஸ் பேசும் வசனங்கள் ‘மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்!’ நூலிலிருந்து பயன்படுத்தப் பட்டது.