
நாம் பல விஷயங்களை உண்மையா, பொய்யா என்று சற்றும் யோசிக்காமலேயே, மற்றவர் சொல்வதை கேட்டு நம்பிக் கொண்டிருப்போம். மேலும் அந்த விஷயங்கள் வெட்டியாக இருப்பவர்களால் பரப்பட்ட ஓர் வதந்தியாக இருக்கும். உலகில் ஏமாறுபவர்கள் இருப்பதால் தான் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள்.
அத்தகைய விஷயங்களை படித்தவர்கள் இன்று வரை நம்பிக் கொண்டு இருப்பது தான், இருப்பதிலேயே நகைச்சுவையான ஒன்று. எப்போதுமே ஒரு விஷயத்தை நம்பும் முன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டு, பின் அதை ஏற்க வேண்டும்.
இங்கு இதுவரை உண்மை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
விண்வெளியில் இருந்து சீனப் பெருஞ்சுவரைப் பார்க்கலாம்
உண்மை என்னவெனில் மனிதனால் உருவாக்கப்பட்ட எதையுமே விண்வெளியில் இருந்து காண முடியாது என்பது தான்.
சொடக்கு எடுத்தால் ஆர்த்ரிடிஸ் வரும்
இதை யார் கண்டுபிடித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இது தவறான ஒன்று என்று பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சொடக்கு எடுப்பதால், மூட்டுகளில் இருக்கும் வாய்வு தான் வெளியேறுமே தவிர, வேறு எந்த ஒரு ஆபத்தும் நடைபெறாது.
காளைக்கு சிவப்பு நிறம் பிடிக்காது
காளை யாரிடம் தனக்கு சிவப்பு நிறம் பிடிக்காது என்று கூறியது என்று தெரியவில்லை. ஆனால் பலரும் காளைக்கு சிவப்பு நிறம் பிடிக்காது, சிவப்பு நிறத்தைக் கண்டால் காளைக்கு கோபம் வரும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். விளையாட்டு ஒன்றிலும் சிவப்பு நிற துணியைக் கொண்டு காளையை சினமூட்டுவார்கள். உண்மையில் காளைக்கு நிறம் எதுவும் தெரியாது. அந்த சிவப்புத் துணியை அசைக்கும் விதத்தில் தான் காளை சினம் கொள்கிறது.
குரங்கில் இருந்து மனிதன் வந்தான்
இதுவும் தவறான கருத்து. குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை. உண்மையில் மனிதர்களும், குரங்குகளும் பொதுவான மூதாதையர்களிடமிருந்து வந்தவர்கள்.
இறப்பிற்கு பின் நகங்கள் வளரும்
இது முற்றிலும் தவறான கருத்து. உண்மையில் மனிதன் இறந்த பிறகு உடலில் உள்ள திரவம் சுருங்க ஆரம்பிக்கும் போது நகங்கள் வளர்ந்திருப்பது போன்று தோன்றுகிறதே தவிர, வளர்ச்சி ஏதேனும் அடைவதில்லை.
நாம் 10 சதவீத மூளையைத் தான் பயன்படுத்துகிறோம்
இதுவும் தவறு. நமக்குத் தெரிந்து நாம் 10 சதவீத மூளையைத் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் நம்மை அறியாமலேயே நம் மூளை பல செயல்களில் ஈடுபடுகிறது.
உடலின் வெப்பம் தலையின் வழியாகத் தான் வெளியேறுகிறது
உடலின் பெரும்பாலான வெப்பம் தலையின் வழியாக மட்டும் வெளியேறுவதில்லை. வெப்ப இழப்பு என்பது உடல் முழுவதும் கிட்டத்தட்ட சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது.
தடுப்பூசிகள் ஆட்டிஸத்தை உண்டாக்கும்
இது ஒரு முட்டாள்தனமான ஓன்று. பலரும் தடுப்பூசிகள் ஆட்டிஸத்துடன் தொடர்புள்ளதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல ஆய்வுகளில் அது தவறான ஓர் கருத்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.