
print
மூன்று மூன்றரை மணி நேரம் ஓடும் திரைப்படத்தை பார்ப்பதற்கே நம்மவர்களுக்கு பொறுமையில்லை. இங்கு ஒரு இயக்குனர் என்னவென்றால், 720 மணி நேரம், அதாவது 30 நாட்கள் தொடர்ந்து ஓடும் ஒரு திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் பெயர்ஆண்டர்ஸ் வெபெர்க். ஸ்வீடன் நாட்டு இயக்குனர். குறும் படங்கள் பெரும் படங்கள் என்று மொத்தம் 300 படங்களை இந்த 20 வருடங்களில் இயக்கித் தள்ளி இருக்கிறார். இவர் ஒரு சகலகலா வித்தகர். போட்டோ எடுப்பார், வீடியோ பிடிப்பார், ஒலிக் கலவை செய்வார், மேடை நாடகங்கள், திரைப்படங்கள் என்று வேறுபாடில்லாமல் அனைத்தையும் இயக்குவார். இவர் தனது கனவு படமாகவும் கடைசி படமாகவும் சாதனைப் படமாகவும் இந்த மிக நீண்ட படத்தைச் சொல்கிறார்.
‘ஆம்பியன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் மனிதனின் உள்ளுணர்வை சொல்லும் படமாம். இப்படிப்பட்ட படங்களை சாதாரணமாக பார்க்கவே பொறுமை உச்சத்தில் இருக்க வேண்டும். இது வேறு உலகிலேயே மிக நீண்டப் படம். எப்படிப் பார்க்கப் போகிறார்களோ?
இந்தப் படத்தை ஒரு நிமிடம் கூட தூங்காமல், ஓய்வின்றி பார்த்தால் கூட முழுப் படத்தையும் பார்த்து முடிக்க 30 நாட்கள் ஆகும். இந்தப் படம் 2020, டிசம்பர் 31-ல் வெளிவரவுள்ளது. மிக நீண்ட படம் என்பதால் இந்த கால அவகாசம் தேவை என்கிறார் இதன் இயக்குநர்.
![]() |
ஆண்டர்ஸ் வெபெர்க் |
இப்போதைக்கு உலகின் நீளமான படம் என்றால் அது ‘மார்டன் டைம்ஸ் ஃபார் எவர்’என்பதுதான். இந்தப் படம் மொத்தமாக 240 மணி நேரம் ஓடும். அதாவது 10 நாட்கள் இடைவிடாமல். ‘ஆம்பியன்ஸ்’ படம் நான்லீனியர் என்ற முறையில் நேரடியாக கதையை சொல்லாமல் முன்னும் பின்னும் நகர்ந்து செல்லும் விதமாக இருக்குமாம். அப்போ சுத்தமாக புரியாது..!
இந்த படத்தின் டீஸரை 2014-ல் வெபெர்க் வெளியிட்டார். பொதுவாக டீஸர்கள் 20 நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை ஓடக்கூடியதாக இருக்கும். ஆனால், ஆண்டர்ஸ் வெளியிட்ட ‘ஆம்பியன்ஸ்’ டீஸர் 72 நிமிடம் ஓடியது. அதாவது 1 மணி 12 நிமிடம். கிட்டத்தட்ட ஒரு சிறிய திரைப்படம் ஓடும் நேரம் இது.
படத்தின் சுருக்கமான ட்ரைலர் 2016-ல் வெளியிடப்பட உள்ளது. அந்த டிரைலர் 7 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும். 2018-ல் படத்தின் மெயின் டிரைலர் ரிலீஸ் ஆகிறது. இது 72 மணி நேரம் ஓடும். அதாவது 3 நாட்கள் தொடர்ந்து டிரைலரைப் பார்க்கலாம்.
2020-ல் முழுநீள திரைப்படமும் ரிலீஸாகும் அது தொடர்ந்து 720 மணி நேரம் நிற்காமல் ஓடும். அதாவது இந்த படத்தைப் பார்க்க நாம் ஒரு மாதம் விடுமுறை எடுத்து தியேட்டரே கதியென்று கிடந்து பார்க்க வேண்டும்.
இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என்று இப்போதே விமர்சனங்கள் எழுகிறது. 30 நாட்கள் தொடர்ந்து பார்த்தால்தான் படத்தைப் பார்க்க முடியும் என்றால் ரசிகர்களுக்கு ஓய்வு எப்போது? ஒரு நாளைக்கு எத்தனை இடைவேளை. அப்படி இடைவேளை விடும் நேரத்தையும் சேர்த்தால் 30 நாட்களுக்கு மேல் தியேட்டரில் இருக்க வேண்டுமே. 30 நாட்கள் தொடர்ந்து படம் பார்த்தால் கண்கள் என்னவாகும் என்ற எல்லா கேள்விகளுக்கும்“பொறுத்திருந்து பாருங்கள்!” என்ற ஒரு வரியை மட்டும் பதிலாக சொல்கிறார் இயக்குநர் ஆண்டர்ஸ் வெபெர்க்.