சினிமாவையும் நம் இந்தியாவையும் பிரித்துப்பார்ப்பது கஷ்டமான காரியம். அந்த அளவிற்கு இந்தியர்களின் உணர்வோடு கலந்து நிற்கிறது இந்த கனவுத் தொழிற்சாலை. ஆனால், இங்கு தியேட்டர்களில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்றொரு புகார் உண்டு. இந்த புகார் உண்மையில்லை என்று சொல்கிறது ஒரு ஆய்வு.
அந்த ஆய்வின்படி, உலகிலேயே மிகக் குறைவான சினிமா கட்டணம் உள்ள நாடு இந்தியாதான். நமது இந்தியாவிற்கு அடுத்து குறைந்த சினிமா கட்டணம் உள்ள நாடு உலகின் மாபெரும் வல்லரசு நாடான அமெரிக்கா.
இதெல்லாம் சரி, குறைந்த கட்டணம் என்று எதை வைத்து நிர்ணயிக்கிறார்கள். என்று கேட்டால். அதற்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள். அதன்படி சினிமா டிக்கெட் விலை மற்றும் அந்த நாட்டின் மனித உழைப்புக்கு கொடுக்கப்படும் சம்பளம் இவற்றை அடிப்படையாக கொண்டு அந்த குறியீடுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
அதன்படி இந்தியாவில் ஒருவர் தியேட்டரில் சென்று சினிமா பார்ப்பதற்கு வெறும் 16 நிமிடங்கள் உழைத்தால் போதும். மற்ற எந்த நாட்டிலும் இவ்வளவு குறைந்த உழைப்பில் ஒரு சினிமாவை பார்த்துவிட முடியாது. அந்த வகையில் இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள்தான்.
இந்திய தியேட்டர்களின் சராசரி டிக்கெட் விலை இப்போதும் கூட 0.20 டாலர் என்ற கணக்கில்தான் இருக்கிறது. அதாவது சராசரியாக ஒரு டிக்கெட் ரூ.13.60. இந்தியாவில் ஒரு மணி நேர உழைப்பிற்கு சராசரியாக 0.70 டாலர் சம்பளமாக கிடைக்கிறது. அதாவது ரூ.47.60 வரை சம்பளம். இந்த கணக்கைக் கொண்டு தான் ஒரு படம் பார்க்க 16 நிமிடங்கள் உழைத்தால் போதும் என்கிறது அந்த ஆய்வு.
இதே விகிதப்படிப் பார்த்தால் இந்தியாவிற்கு அடுத்தப்படியாக அமெரிக்கா வருகிறது. அங்கு ஒரு அமெரிக்கர் படம் பார்க்க 24 நிமிடங்கள் உழைக்க வேண்டும். இதுவே சீனா என்றால் 26 நிமிடங்களும், லக்சம்பர்க்கில் 28 நிமிடங்களும், அயர்லாந்தில் 30 நிமிடங்களும் உழைக்க வேண்டும். இவைகள் எல்லாம் குறைந்த சினிமா கட்டணம் கொண்ட நாடுகள்.
அதிக சினிமா கட்டணம் கொண்ட நாடுகள் என்று பார்க்கும்போது பல்கேரியா முதலில் வருகிறது. அங்கு ஒருவர் ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால் 123 நிமிடங்கள் உழைத்தாக வேண்டும். இதற்கடுத்தப்படியாக எஸ்தோனியா 118 நிமிடங்களும், தாய்லாந்து 109 நிமிடங்களும், லித்துவேனியா 106 நிமிடங்களும்,, ரஷ்யா 104 நிமிடங்களும் உழைக்க வேண்டும்.
மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது இந்தியர்கள் சினிமா பார்க்கும் விஷயத்தில் கொடுத்து வைத்தவர்களே. இந்த ஆய்வில் ஷாப்பிங் மால்களில் ரூ.150, ரூ.300 என்று கட்டணக் கொள்ளை நடக்கும் தியேட்டர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவற்றையும் சேர்த்திருந்தால் ஒருவேளை முடிவுகள் மாறியிருக்குமோ என்னவோ..!