
சாகசத்தை விரும்புவோரின் சொர்க்கபூமி தென்னாப்பிரிக்கா. பரந்த கடற்கரைகள், கரடுமுரடான கடலோரம், மலைகள், பசுமை கொஞ்சும் மேய்ச்சல் நிலங்கள், பண்ணை நிலங்கள், திராட்சை தோட்டங்கள், எண்ணற்ற காட்டு விலங்குகளைக் கொண்ட வேட்டை விலங்கு மையங்கள் ஆகியவற்றில் சாகசத்திற்குப் பஞ்சமில்லை. அப்சைலிங், மலைகளில் சைக்கிள் ஓட்டுதல், குதிரைச் சவாரி, ஸ்கை டைவிங், பலூன் பயணம், கயாக்கிங், ராஃப்டிங், இன்னும் பல சாகசங்களை செய்யலாம். அது மட்டுமின்றி ஸ்நார்க்கெலிங், ஸ்கூபா டைவிங், டால்ஃபின்களுடன் நீந்துதல்… தென்னாப்பிரிக்கா உலகின் முன்னணி சாகச மையங்களில் ஒன்றாகக் கருதப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
குகைப் பயணம்
இயற்கையின் நிலத்தடி கலைக் கண்காட்சி அரங்குகள் நுழைந்தால் பரவசம்தான். ஸ்ட்டாலக்மைட் மற்றும் ஸ்ட்டாலக்மைட் வடிவங்கள் குகைகளின் சுவர்களை அலங்கரிப்பதை ரசியுங்கள். கேப்டவுன், கார்டன் ரூட், ம்புமலங்கா, சேபி, ஜோகன்ஸ்பர்க் ஆகிய இடங்களுக்குச் செல்லும்போது குகைகளுக்குச் செல்லலாம்.
பாராகிளைடிங், செய்லிங்
ஒரு சிகரத்திலிருந்து குதியுங்கள். கழுகுபோல் வானத்தில் வட்டமிட்டு, உங்களுக்கு கீழே ராட்சத ஓவியமாகப் பரந்து கிடக்கும் நிலப்பரப்பைக் கண்டுகளியுங்கள். குளிர்ந்த கடல் காற்றை சுவாசித்து மெல்ல மிதந்து தரையிறங்குங்கள். பறவைபோல் பறக்கும் அனுபவத்தை பாராகிளைடிங் தருகிறது.
பங்கி ஜம்ப்பிங்
முதுகைச் சில்லிட வைத்து நரம்புகளை முறுக்கேறச் செய்கிறது பங்கி ஜம்ப்பிங். இந்த மயிர் கூச்செரியும் அனுபவத்தைப் பெற உங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஒரு பாலம் அல்லது சக்கரத்திலிருந்து அதலபாதாளத்தில் குதிக்க நினைக்கும் மனம் இருந்தால் போதும். 216 மீட்டர் உயரம் கொண்ட உலகிலேயே மிக உயரமான இந்த மேட்டிலிருந்து குதிப்பது வாழ்நாள் கால அனுபவமாக இருக்கும்.
ஹாட் ஏர் பலூன் பயணம்
வானில் மெல்ல எழும்பிக் காற்றினால் அசைந்து செல்லலாம். ஹாட் ஏர் பலூன் சாகசத்தில் பயப்பட ஒன்றுமில்லை. உயரத்தில் பறக்கும் பறவை போல் கீழே அகல விரியும் நிலப்பரப்பைப் பார்க்கும் அனுபவம் உங்களுக்கு உணர்வுரீதியாக போதை தரும்.
குவாட் பைக்குகள்
குவாட் பைக்குகள் சாலை இல்லாத பாத்திகளில் செல்லப் பயன்படும் நான்கு சக்கர மோட்டார்சைக்கிள்கள். இவை ஸ்திரமானவை. ஓட்டுவதும் எளிது. ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்ஸ் (ஏ.டி.வி.) எனப்படும் இவை கரடுமுரடான பாதைகளில் ஓடும் திறன் உள்ளவை.
திமிங்கல வேடிக்கை
தென்னாப்பிரிக்காவின் கடலோரம் கப்பல் பயணம் செல்வது ஒரு தனி சுகம். மனிதக் கூட்டத்திலிருந்தது விலகிச் சென்று கப்பலிலிருந்து அல்லது எழில் கொஞ்சும் பாதை வழியே பாம்பாக நெளிந்து செல்லும் ஆறுகளில் ஒன்றில் பயணிக்கும்போது சூரிய அஸ்தமனத்தையும் சேர்த்துப் பார்க்கலாம்.
ஜெட் படகு, ஸ்கீயிங்
வேகத்தையும் சாதத்தையும் விரும்புபவர்கள் ஜெட் படகுப் பயணங்களையும் நீர்ச் சறுக்கையும் அனுபவிக்க வேண்டும். ஜெட் படகுகளும் ஜெட் விமானங்களைப் போல் இயங்குபவை.
சுறாக் கூண்டு டைவிங்
இந்த விளையாட்டு அஞ்சாநெஞ்சர்களுக்கு மட்டுமே. உங்களைக் கூண்டுக்குள் வைத்து சுறா மீன்கள் நிறைந்த கடல் பகுதியில் இறங்குவார்கள். பயங்கர உயிர்க் கொல்லியான வெள்ளைச் சுறா மீனை மிக அருகிலிருந்து பார்க்கும் சில்லிடும் அனுபவம் கிடைக்கும்.
ஸ்கூபா டைவிங்
தென்னாப்பிரிக்காவில் ஸ்கூபா டைவிங் வேகமாக வளர்ந்துவரும் ஒரு தரமான விளையாட்டு. எல்லா பெரிய அமைப்புகளின் தகுதிகளும் அங்கீகரிக்கப்படுகின்றன. தரமான டைவிங் கருவிகள் எளிதில் கிடைக்கின்றன. வெளிநாட்டு டைவர்கள் தென்னாப்பிரிக்காவிற்கே உரிய அன்புடன் வரவேற்கிறார்கள். கப்பல் சிதிலங்கள், வெள்ளைச் சுறாக்கள், கெல்ப் எனும் கடல் செடிகள், கடற்பாசி ஆகியவற்றுக்கு கேப் ப்ராவின்ஸ் நல்ல இடம்.