Header Banner Advertisement

அக்னிப்பிரவேசம்


aknippiravesam

print

விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை?
நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு
எத்தனை முறை எரிந்து அணைவது?

புவியென பொறுமை காத்து
பொங்கியெழும் அலைகளை
அடக்கி வைத்து
அக்னி குஞ்சுகளை அடைகாத்து
தீப்பிழம்புகளாய் பிரசவிக்க
தயக்கம் ஏன்?

மெய்யதை உணர்ந்திருந்தும்
பொய்மை சிகரமேற்றி
புனைந்துரைக்கையில் ராமனென
மௌனித்திருந்தது ஆண்மையின் அதிகாரமா யன்றி
பெண்குலத்தின் பேரெழுச்சியை
சகிக்க முடியாத சதித்திட்டமா?

குத்திக் கிளறி குருதியை ருசி
பார்த்த பின்னும் அடங்காத
தாகத்தின் வெளிப்பாடாய்
கோரமுகம் காட்டி
மாண்பைக் குலைக்கும் மதியீனங்கள்
மலைமுகட்டைப் புரட்டி போடுமா?

கனன்று எரிந்து முடித்த மிச்சங்கள்
அக்னித் திராவகமாகப் பெருகட்டும் விழி வழியே…
ஆண்டாண்டு காலமாய் சீதைகள்
படும் அவஸ்தைகளை அழித்தொழிக்கட்டும்…

 

COURTESY & SOURCE :  – மதுரா-