
ஆலப்புழை நதிகளும், உப்பங்கழிகளும், கால்வாய்களும் நிறைந்த ஊர். கடற்கரையும் உண்டு. அதனால்தான் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த கர்சன் பிரபு இதை ‘இந்தியாவின் வெனீஸ்’ என்று அழைத்தார்.
இங்கு விரும்பினால் நதியின் மேலே தங்கலாம். ‘கெட்டுவள்ளம்’ என்று அழைக்கப்படும் பெரிய படகு வீடுகள் இருக்கின்றன. அதில் அட்டாச்ட் பாத்ரூமோடு கூடிய படுக்கையறைகள் உண்டு. முன்பெல்லாம் ஏசி வசதி கிடையாது. இப்போது பெரும்பாலான படகு வீடுகள் ஏசி வசதி செய்யப்பட்டவையாக இருக்கிறது. சாப்பாடும் இங்கேயே சமைத்துக் கொடுப்பார்கள். ஓவர் பிரமாண்டமான படகில் ஒரு பலசரக்குக் கடை ஒன்று இந்த பகுதியில் சுற்றி வருகிறது. இதை சூப்பர் மார்க்கெட் என்று அழைக்கிறார்கள். நமக்கு வேண்டியவற்றை இதில் வாங்கிக் கொள்ளலாம்.
நீங்கள் பக்திமானாக இருத்தலால் உங்களுக்கு இங்கு பார்க்க நிறைய இடங்கள் உண்டு. இல்லையென்றால், சுகமாக ஒரு ஆயுர்வேத மசாஜ் எடுத்துக்கொண்டு பம்பா நதியில் சவாரி போய்வரலாம்.
ஆனால், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க விரும்புபவர்களுக்கு ஆலப்புழையைப்போல சிறந்த இடம் எதுவுமில்லை. சுற்றுலாவும் போன மாதிரி இருக்கும். சாமி கும்பிட்ட மாதிரியும் இருக்கும். ஆலப்புழையை சுற்றி 21 கோயில்கள் இருக்கின்றன. அம்பலப்புழா கிருஷ்ணன் கோயில், முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி, செட்டிகுலங்காரப் பரணி ஆகியவை பிரசித்துப் பெற்றவை. முல்லைக்கல் ராஜராஜேஸ்வரி கோயிலில் டிசம்பர் மாதம் முதல் ஞாயிறன்று பெண்கள் பூஜை செய்வார்கள். இங்கு பால்பாயாசம் சுவையாக இருக்கும். கேட்டு வாங்கி சாப்பிடுங்கள்.
1818-ல் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்றும் இருக்கிறது. மிக அழகு. புனித தாமஸ் நினைவாக ஆண்டுதோறும் படக்குப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆலப்புழையின் படக்குப் போட்டிகள் மிகப் பிரசித்தம். ‘வள்ளக் களி’ என்று அழைக்கப்படும் இந்த போட்டிகளில் 131 அடி படகில் 109 பேர் துடுப்புப் போட்டுக்கொண்டு மின்னல் வேகத்தில் கடந்து போவார்கள். சாதாரணமாக ஆகஸ்டில் இருந்து அக்டோபர் மாதத்திற்குள் இந்தப் போட்டிகள் நடக்கும்.
1952-ம் ஆண்டு கேரளாவிற்கு வந்தபோது இந்தப் போட்டியைக் கண்டு உற்சாகமடைந்த அன்றையப் பிரதமர் நேரு ஒரு கேடயத்தைப் பரிசாகக் கொடுத்தார். அந்த கேடயத்திற்குத்தான் இப்போதும் ஆடுதொறும் போட்டி நடக்கிறது.
ஆலப்புழை எங்குள்ளது?
கேரளத்தில் கொச்சிக்கு அருகிலுள்ளது.
எப்படிச் செல்வது?
சென்னையிலிருந்தும் கோவையில் இருந்தும் ஆலப்புழைக்கு நிறைய ரயில்கள் இருக்கின்றன. கேரள அரசின் பேருந்துகளும் இஐங்குகின்றன.
எவ்வளவு செலவாகும்?
சென்னையிலிருந்து ஜோடியாக போய்வர மூன்று தினங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் 10,000 வரை தேவைப்படும்.