Header Banner Advertisement

ஆயிரங்காலத்து அதிசயம்


Amazingly ayirankalattu

print

எனது வடக்கு கர்நாடகா சுற்றுப்பயணத்தில் பாதாமி, பட்டதக்கல் போன்ற அற்புத கலைப்படைப்புகளை முடித்தப்பின் அடுத்த பயணமாக ஐஹோலே என்ற மற்றொரு கலைப் பொக்கிஷத்தை நோக்கி சென்று கொண்டிருந்தேன். மீண்டும் அதே ஷேர் ஆட்டோ பயணம். வாகனம் குலுங்கியது அது பயணம் செய்த பல்லாங்குழி சாலை மேலும் உலுக்கி எடுத்தது.

மனிதர்களைத் தவிர்த்துப் பார்த்தால் கர்நாடகாவின் இந்த பாகல்கோட் மாவட்டம் அப்படியே வறண்ட தமிழக கிராமத்தை நினைவுப் படுத்துகிறது. சாலையின் இரண்டு பக்கமும் சீமைக்கருவேல மரங்கள், அதற்கடுத்து பொன்னிற வயல்வெளி போல் எங்கும் சூரியகாந்தி மலர்கள் பூத்து நிற்கின்றன. இந்த மலர்களுக்கு நடுவே கருநிற தார்ச் சாலையில் பயணிப்பது இனிய அனுபவம்.

சாளுக்கிய மன்னர்களின் தொடக்க கால தலைநகரமாக இருந்தது இந்த ஐஹோலே தான். இது மலப்பிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. அன்று ஒரு நாட்டின் தலைநகராக இருந்த இந்த இடம் இன்று ஒரு சிறு கிராமமாக சுருங்கிப் போய்விட்டது. சாளுக்கிய மன்னர்கள் தங்கள் தலைநகரை பாதாமிக்கு மாற்றியபோதே இதன் செழுமை குறைந்துவிட்டது. ஆனாலும் அந்த மன்னர்கள் இங்கு கட்டிய 125 சாளுக்கிய கோயில்கள் அந்த பாரம்பரியத்தின் பெருமையை கொஞ்சமும் குறையாமல் வருபவர்களுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது.

ஊருக்குள்ளே நுழையும்போதே அங்கொன்றும் இங்கொன்றுமாக வரிசையாக ஒன்று மாற்றி ஒன்றாக நிறைய கோயில்கள் பராமரிப்பின்றி இருக்கின்றன. சில கோயில்களை மக்கள் தங்களின் பொருட்களை போட்டு வைக்கும் இடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். சில கோயில்கள் மாட்டுத் தொழுவங்களாக மாறி இருந்தன. உழைப்பையும் கலையையும் இணைத்து உருவாக்கி, கட்டிவைத்த இந்தக் கோயில்களை பராமரிக்கக்கூட நம்மால் முடியவில்லை என்பது இந்தக் கோயில்களைப் பார்க்கும் போது உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஐஹோலே பாதாமியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நகரத்தைப் பற்றி புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதன்படி பரசுராமர் என்ற ஒரு போர்வீரன் எதிரிகளைக் கொன்றுவிட்டுத் திரும்பும்போது இந்த மலப்பிரபா ஆற்றில் வந்து தனது கோடாரியை கழுவியதாகவும் அப்படி கழுவிய போது ஆறு முழுவதும் உள்ள நீர் சிவப்பு நிறத்தில் மாறியதாகவும் அதனாலே இந்த ஊருக்கு ‘ஐஹோலே’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறது. ஐஹோலே என்றால் ‘எப்பேர்பட்ட ஆறு’ என்று அர்த்தமாம். இதைவிட இன்னொரு கதை கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறது. பரசுராமர் மலப்பிரபா நதியைப் பார்த்து, ‘ஐ! ஹோலே..!’ என்று பரவசப்பட்டு கத்தினாராம். அதனைக் கேட்ட மக்கள் இந்த ஊருக்கு அந்தப் பெயரையே வைத்து விட்டார்களாம்.

p1040173trek

இன்று மலப்பிரபா ஆறு ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஆனால், 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில்கள் அட்டகாசமாக இருக்கின்றன. இப்போது ‘ஐ! மந்திர்..!’ என்று கத்தலாம். அத்தனை அற்புதமான கோயில்கள் இங்கு இருக்கின்றன. இந்த 125 கோயில்களைப் பார்க்க ஒரு நாள் போதாது. ஒரு வாரமாவது வேண்டும். இந்தக் கோயில்களில் மிகவும் பழமையானது லாட் கான் கோயிலாகும். சதுர வடிவில் இருக்கும் இந்தக் கோயிலின் கூரை இன்றைய தகரத்தால் ஆன கூரைப் போன்றே கற்களால் அமைக்கப்பட்டுள்ளது ஒரு அற்புத கலைப்படைப்பாக இருக்கிறது.

aihole_temple_complex

இதுபோக துர்கா கோயில் ஒன்றும் உள்ளது. இதுவும் கலைகளுக்கு அறுபுதமான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. யானையின் பின்புறப் பகுதியை போன்று காட்சியளிப்பதால் இந்த வடிவத்திற்கு ‘கஜபிரஸ்தா’ என்ற பெயரும் உண்டு. வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் நடுவே இந்த கோயில்களில் இரண்டு வகையான கலைகளும் ஒருசேர இருப்பதைக் காணமுடிகிறது. நகரா மற்றும் திராவிட கட்டடக்கலையில் இந்தக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களில் இருக்கும் தம்பதியர் சிலைகள் பலவும் முகலாயப் படையெடுப்பால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி யுனெஸ்கோவின் பாரம்பரிய பகுதி காத்திருப்பு பட்டியலில் இருக்கிறது. இன்னும் இது பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்படவில்லை. அதற்கு முற்றிலும் தகுதியான இடம் இது.

இங்கிருக்கும் சூரியநாராயணர் கோயிலும் சிறப்புமிக்கது. இங்கு தொல்லியல் துறை சார்பில் ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இதில் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள பல்வேறு புத்தகங்கள் கிடைக்கின்றன. வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவும். ஏராளமான கல்வெட்டுகளும் அங்கு உள்ளன.

ஐஹோலே முடித்தப்பின் எனது பயணம் மகா கூடம் என்ற இடத்தை நோக்கி இருந்தது. மீண்டும் கிராமங்கள் வழியே பயணம். மாலை நேரம் நெருங்கி விட்டதால் கழனியில் இருந்து வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார்கள், விவசாயிகள். வரிசையாக மாட்டுவண்டி போய்க்கொண்டே இருக்கிறது. டிராக்டர்கள் குறைவாக போகின்றன. எல்லாவற்றிலும் ராஜ்குமாரின் கன்னட சினிமா பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. மாடுகளிலும் நாட்டு இன மாடுகளையே அதிகம் காண முடிகிறது. விவசாயத்தையும் விவசாயியையும் ரசித்தபடி மகாக்கூடம் வந்து சேர்ந்தேன்.

இங்கும் ஏராளமான கோயில்கள் ஒரே சுற்றுச் சுவருக்குள் இருக்கின்றன. இந்தக் கோயில்களின் நடுவே ஒரு குளம் இருக்கிறது. இது இயற்கை நீருற்றால் நிரம்பும் குளம். இதை பாபவிநாச தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். இந்தக் குளத்தில் நீராடினால் எல்லா பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயில்களில் சங்கமேஸ்வரா மற்றும் மல்லிகார்ஜுனா கோயில்கள் பிரபலமானவை.

இந்த அதிசயக் கோயில்களை பார்த்துவிட்டு அவற்றிடம் இருந்து விடைபெறவும். ஆதவன் பகலிடம் இருந்து வெளியேறவும் சரியாக இருந்தது. வாழ்வில் மறக்கமுடியாத நினைத்து நினைத்து இன்புறும் ஒரு கலைக் களஞ்சியமாகவே பாதாமி, பட்டதக்கல், ஐஹோலே கோயில்கள் இருந்தன.